cover 10 copy- வேலும்மயிலும் சேந்தன் -

 “இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் தாரண்மைவாத முகாம் அதன் சிதைவுகளிலிருந்தும் உள்முரண்பாடுகளில் இருந்தும் இன்று வரை கெயின்சியக் கோட்பாடும் மற்றும் மனிதமூலதனக் கோட்பாடும் ஓரளவு பாதுகாத்தன என்றே கூற வேண்டும்...”

  அறிமுகம்

உலகில் ஐரோப்பிய மையவாத சிந்தனை இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பல்வேறுபட்ட பாடங்களை கற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உருவான இரு துருவ சர்வதேச அரசியில் ஒழுங்கானது இரு பிரதான வல்லரசு சார்ந்த முகாம்களையும் வெளிப்படைத் தன்மையற்ற, அதேவேளை இராணுவ மற்றும் வாணிப நலன்களை முன்னுறுத்திய பனிப்போரை 1948 முதல் 1989 வரையான காலப்பகுதியில் முன்னகற்றிக்கொண்டிருந்தது.

இக்காலகட்டத்தில் மார்க்சிய சிந்தனைப்பள்ளியை பின்தள்ளுவதற்காகவும், சர்வதேச அரங்கில் அதன் மேலாண்மையை, இயங்குவிசையை தகர்ப்பதற்காக தாராளவாத சிந்தனைப்பள்ளி பல எத்தனங்களை மேற்கோண்டு வந்தது. அந்த வகையில் மார்க்சிய சிந்தனையின் வர்க்க முரண்பாடும் அதன் இயங்கியல் தன்மையும் தாராண்மைவாத சிந்தனைப்பள்ளிக்கு தொடர்ச்சியான தலையிடியை கொடுத்துவந்தது.

இந்நிலையில் மார்க்சிய கோட்பாட்டின் நோக்குநிலையில் தாராளவாதம் தனது இலாபத்தை மேம்படுத்துவதற்காகவும் தொழிலாளர்களை சுரண்டுவதற்காகவும் முன்வைத்த கருத்துநிலைகள் மார்க்சியவாதத்தினால் ஓரளவுக்கு தோற்கடிக்கப்பட்டது. மார்க்சிய சிந்தனையின் உலகளாவிய ஊடுருவலை தாராண்மைவாதத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக தாரண்மைவாத பொருளாதாரத்தின் வருமானச் சமபங்கீட்டின்மை பாரியதொரு பொருளாதார, சமூக பிரச்சினையாக காணப்பட்டது. இந்நிலையில் தாராண்மைவாதத்திற்கு இப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் மார்க்சியத்தின் ஊடுவலை தடுப்பதற்காகவும் சுட்டிப்பாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள்:

 - கெயின்சியக் கோட்பாடு

- மனித மூலதனக் கோட்பாடு

என இவ்விரு கோட்பாடுகளும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் தாரண்மைவாத முகாமை அதன் சிதைவுகளிலிருந்தும் உள் முரண்பாடுகளிலிருந்தும் இன்றுவரை ஓரளவு பாதுகாத்தன என்றே கூற வேண்டும்.

ஆனால் சோவியத் ஒன்றியத்தின் சிதைவுகளுக்குப் பின்னர் சர்வதேச வியாபகம் எடுத்த தாராண்மைவாதமானது தனது உலகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திசைமுகப்படுத்தலை சர்வவல்லமையுடன் மேற்கொண்டது. உலக நாடுகளின் பொருளாதாரத்தை முகாமை செய்வதற்கும் தனது அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்கும் மேற்குறிப்பிட்ட இரு கோட்பாடுகளும் தாராண்மைவாதத்திற்கு பயனுறுதி மிக்கதாகவே காணப்பட்டன.

சமகால உலகமயமாதல் செல்நெறியில் தாராண்மைவாதம் சர்வரோக நிவாரணியாக பரிணமிக்கப்பட்டதன் அடிப்படையில் நிலம், மூலதனம் , உழைப்பு, முயற்சியாண்மை என்ற உற்பத்திக்காரணிகளில் முயற்சியாண்மையின் ஒரு பிரதான வகுதியாக இருந்த முயற்சியாளனின் அறிவு” என்ற காரணி சமகாலத்தில் உற்பத்திக்கான முதன்மைக்காரணியாக தளமாற்றம் பெற்றுவிட்டது.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக உற்பத்தியில் மென்மேலும் இலாபத்தை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களும் அறிவுசார் தொழிலாளர்கள் என்ற நிலைக்கு பரிணமிக்கப்பட்டு அறிவு என்பது முயற்சியாளனில் இருந்து தொழிலாளர் வரை முதன்மை பெற்று அமையப்பெற்றுள்ளது. இன்றைய அறிவுசார் சமூகம் என்பது அறிவு உற்பத்திக்காரணிகளில் முதன்மையுற்ற நிலையை இன்றைய பொருளாதாரம் கொண்டுள்ளது. அதாவது சமகாலப் பொருளாதாரத்தில் இலாபம் என்பது அறிவால் தீர்மானிக்கப்படுவதாயிற்று.

தகவல் வலையமைப்பு விரிவாக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை சக்திகளும் உற்பத்திக் காரணிகளும் தாராண்மை வாத சித்தாந்தமும் உலகப் பொருளாதாரத்தை போட்டித்தன்மையுடையதாகவும், சிக்கல்த்தன்மைமிக்கதாகவும், விரிவடைந்த வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் ஒரு சிலரிடம் மூலதனம் பெருந்தொகையில் திரள்வதற்கும் ஏதுநிலைகளை தோற்றுவித்தன.

 

மனித மூலதனம் [Human Capital]

 21ஆம் நூற்றாண்டில் தாராண்மைவாதத்தின் பொருளாதாரமானது க்ஷக்ஷபுத்தாக்க பொருளாதாரமாக (Innovative Economy) மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. இப்புத்தாக்க பொருளாதாரம் என்பது தாராண்மைவாதத்தின் சந்தை சக்திகளை மேம்படுத்துவதற்காகவும் புதிய சந்தைத் துண்டங்களை இனங்காண்பதற்காகவும் உருவாக்கப்பட்ட எண்ணக்கருவாகும். இது தாராண்மைவாத கோட்பாட்டாளர்களால் இன்றைய உலகின் நிலைபேறான பொருளாதாரம் செழிப்புக்கு ஆதாரமாக அமையும் என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய உலகப் பொருளாதார தாராண்மைவாத சிந்தனைப்பள்ளியும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் பல்தேசியக் கம்பனிகளும் மற்றும் பிரிட்டன் வூட்ஸ் நிதிநிறுவனங்களும் புத்தாக்க பொருளாதாரம் என்ற எண்ணக்கருவை முன்னுறுத்தி வருகின்றன. எனினும், தாராண்மைவாத சிந்தனைக்கு மாற்றுக்கருத்துக்களை கொண்டமைந்த சிந்தனைப்பள்ளிகள் நலிவுற்றிருப்பதனால் இக்கோட்பாட்டிற்கு மாற்றுக்கோட்பாடுகள் பெரிதளவில் முன்வைக்கப்படவில்லை. ஆனால் தாராண்மைவாதம் புத்தாக்க பொருளாதாரத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை பொருளாதார செழிப்புக்குள் கொண்டு சென்றுவிடும் என உறுதியாக கூறிவிட முடியாது.

சந்தை சக்திகளின் மேலாண்மைக்கு அப்பால் அறிவுப் பொருளாதாரத்தில் தமது ஊழியத்தை வழங்கக்கூடிய தனிநபர்கள் புத்தாக்கத் திறன் உடையவர்களாகவும் தொழில் முயற்சியாண்மை உடையவர்களாகவும் அமையப் பெற வேண்டும் எனக் கருதப்படுகின்றது. அதற்கு இத் தனிநபர் ஒரு ஊழியர் என்பதற்கு மாறாக மனித மூலதனமாக உருமாற்றப்பட வேண்டும் என தாராளவாதம் கருதுகின்றது.

 உற்பத்தி நிறுவனம் சார்ந்த நிலையிலும், பொதுவான சமூகமட்டத்திலும் தனிநபர் வளம் என்பது குறித்த நிறுவனத்தின் அல்லது சமூகத்தின் பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்காக செயலாற்றல் இயலுமை உடையவர்களாக பரிணமிப்பதற்கு கல்வியும் பயிற்சியும் வழங்கப்படவேண்டும் என தாராண்மைவாதம் கருதுகின்றது. தொழிற்சந்தைக்கு வேண்டிய தனிமனித வளங்களை உருவாக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் முன்பள்ளிப்பருவக் கல்விக் கட்டமைப்பு, ஆரம்பக் கல்விக்கட்டமைப்பு, இடைநிலைக்கல்விக் கட்டமைப்பு மற்றும் மூன்றாம் நிலைக்கல்விக் கட்டமைப்பு ஆகியவற்றின் இன்றியமையாத பணியாக இன்று கருதப்படுகின்றது.

 1960 களில் அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர்கள் மனித மூலதனம் என்ற எண்ணக்கருவை உருவாக்கினார்கள். சசூட்ஸ், ஜேக்கப் மின்சர், மில்ட்டன் பயேர்ட்மென், சேர்விஸ் ரோசன் முதலான பொருளியலாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை மனித மூலதனத்திற்கான சிக்காக்கோ சிந்தனைப் பள்ளியினர் எனவும் அழைப்பதுண்டு. ஆரம்பத்தில் இச் சிந்தனைப்பள்ளியினர் மனித மூலதனம் என்பது அறிவு, திறன் மற்றும் இயலுமைகள் இணைந்த ஒரு குறித்த நிறுவனத்திற்கு சேவையை வழங்கும் தனிமனிதனின் ஆற்றலென வரையறுக்கப்பட்டது.

சசூட்ஸ் இதன் ஆரம்பகால கோட்பாட்டாளராக கருதப்படுகின்றார். இவர் கல்விக்கும் அபிவிருத்திக்குமான நேர்க்கணிய இணைத்தொடர்பை விளக்குபவராகவும் கல்வியின் பொருளாதார பயன்பாட்டை வெளிப்படுத்துவபராகவும் அமையப் பெற்றார். சசூட்ஸ் தனது விளக்கத்தில் “கல்வியில் முதலீடு” என்னும் பொருளாதார எண்ணக்கருவை நன்கு வலியுறுத்தி நிறுவினார்.

பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்கான மனித இயலுமைகள் இயல்பாகவே அமையப் பெறுவதிலும் பார்க்க மனித இயலுமைகளை கல்விக்கூடாக திரட்டிக் கொள்ளலாம் என தனது ஆய்வுகளின் மூலம் நிறுவினார். அவ்வாறு கல்விக் கூடாக மனித இயலுமைகளை அதிகரிக்க வேண்டுமாயின் தாராண்மைவாத பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் பொருத்தமான கல்வி முதலீடுகளை செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.

மனித மூலதனத்தின் இரண்டாவது பிரதான சிந்தனையாளராகவும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹிரே எஸ் பெக்கர் (Gray.S.Becke) அமையப் பெறுகின்றார். இவர் தனது ஆய்வு நூலாகிய Human Capital: A Theoretical and Empirical analysis with special Reference to Education என்ற தனது நூலில் கல்வியும் பயிற்சியும் சந்தைக்கு வேண்டிய மனிதமூலதனத்தை எவ்வாறு உருவாக்குமென நுணுகி ஆராய்ந்துள்ளார். சுட்டிப்பாக பாடசாலைக்கல்வி, தொழிற்கல்வி, தொழில்தளத்தில் பயிற்சி (On the job training) முதலானவை மனித மூலதனத்தை உருவாக்குமென தனது ஆய்வின் மூலம் நிறுவியுள்ளார்.

 

 பெக்கர் தனது ஆய்வு நூலிலே சசூட்ஸினுடைய மனித மூலதனம் பற்றிய வரைவிலக்கணத்துக்கு மேலதிகமாக பாடசாலைக்கல்வி, தொழிற்கல்வி, தொழில் தளத்தில் பயிற்சி, தனிமனித சுகாதாரமும் அதன் மேம்பாடும், தொழில் பற்றிய விழுமிய நோக்குநிலை முதலானவை மனித மூலதனத்தை உருவாக்கும் பிரதான காரணிகள் என குறிப்பிட்டார். ஒரு தொழில் நிறுவனத்தின் நிலைபேறுக்கும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்களது தனிப்பட்ட ரீதியிலானதும் கூட்டு நிலையிலானதும் முன்னேற்றத்திற்கும் நிலைபேற்றிற்கும் அத்தொழிலாளர்களது அறிவு, திறன்கள் மற்றும் மேலதிக இயலுமைகளான கற்றல் திறன்கள், மாற்றத்தை முகாமை செய்தல், புத்தாக்கம், ஊக்கத்துக்கான அகத்தூண்டல், நம்பகத்தன்மை, நிறுவனத்தின் மீதான பற்றுறுதி முதலானவை அக்குறித்த நிறுவனத்தின் மனித மூலதனமாக கருதப்படும் என்கின்றார். மேற்குறித்த அறிவு, திறன் மற்றும் இயலுமைகள் நிறுவனத்தின் தேவைகளுக்கும் சந்தர்ப்பங்களிற்கும் ஏற்ப குறித்த நிறுவனத்தின் உற்பத்திகளை நிறைபோட்டிச் சந்தையிலே தக்க வைத்துக் கொள்வதற்கு உதவுமென குறிப்பிட்டார். நிறுவன ஒழுங்கமைப்பின் கீழ் தொழிலாளர்கள் தமது ஆற்றல்களையும் இயலுமைகளையும் தனியாகவும் கூட்டாகவும் ஊடுபாயச் செய்து புத்தாக்கப் பொருளாதார பெறுமதிகளை அந்நிறுவன உற்பத்திகளுக்கு வழங்கி நிறுவனத்தின் நிலைபேற்றிற்கு ஆதாரமாக அமைய வேண்டும் என பெக்கர் குறிப்பிடுகின்றார்.

குறித்த நிறுவனத்தின் ஊழியரொருவர் தான் சார்ந்த தொழில் வகிபாகத்தின் அடிப்படையில் தனது நிபுணத்துவ அறிவை வழங்குவதிலும் சமூகத்திலொரு மதிப்பார்ந்த அங்கத்தவர் என்ற அடிப்படையில் தனக்கான ஒரு சமூகத்தொடர்பை பேணுவதிலும் குறித்த சமூக வலையமைப்பில் கொண்டிருக்கும் அங்கத்துவத்தின் அடிப்படையில் தனது தொழில் புரியும் நிறுவனத்தின் உயர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் பங்காற்றுவார். அவர் தொழில்புரியும் நிறுவனம் மேற்கூறிய காரணத்தின் அடிப்படையிலும் தமது சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்குமாயின் அல்லது அக்குறித்த நிறுவனத்தின் நன்மதிப்பு உயருமாயின் அது அக்குறித்த நிறுவனத்தினதும் அக்குறித்த ஊழியரதும் சமூக மூலதனமாக கருதப்படும்.

 மேற்குறிப்பிட்டதற்கிணங்க மனிதமூலதனமும் சமூக மூலதனமும் ஒருங்கிணைந்து நிறுவன ஒழுங்கமைப்பின் அதிகாரப்படிநிலைக்கு புறம்பாக அல்லது அதற்கு மாறாக அந்நிறுவன ஒழுங்கமைப்பானது “தட்டையான நிறுவன ஒழுங்கமைப்பாக (Flat Organization)” காணப்பட்டு ஊழியர்கள் பற்றுறுதியோடும் நம்பிக்கையோடும் ஊக்கலுக்கான அகத்தூண்டலோடும் குழு ஒருமைப்பாட்டோடும் நிறுவனத்தின் உற்பத்தித் செயன்முறையாக்கத்திற்கு உற்றறிவுச் சிந்தனையோடு செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் “கற்கும் நிறுவனங்கள் (Learning Organization)” என அழைக்கப்படும். இத்தகைய நிறுவனங்கள் புத்தாக்கப் பொருளாதாரத்திற்கான அறிவுசார் கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கும். இதனையே நிறுவனம் சார் கட்டமைப்பு மூலதனம் (Structural Capital) என அழைப்பர். இக்கட்டமைப்பு மூலதனமானது ஒழுங்கமைப்பு மூலதனம் (Organizational Capital), செயன்முறையாக்க மூலதனம் (Process Capital), புத்தாக்க மூலதனம் (Innovative Capital) ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருக்கும்.

 மனித மூலதனம், சமூக மூலதனம், கட்டமைப்பு மூலதனம் ஆகியன ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் பங்களிப்பு செய்யும் போது அது நிறுவனத்தின் அறிவுசார் மூலதனமாக (Intellectural Capital) பரிணமிக்கும். இவ் அறிவுசார் மூலதனமே நிறுவனத்தை சமகால உலகளாவிய தாராளவாத சந்தைக்கட்டமைப்பின் சந்தைச் சக்திகளின் போட்டித்தன்மையில் குறித்த நிறுவனத்தை தக்கவைத்துக்கொள்ளும். எனவே சமகால அறிவுசார் பொருளாதாரத்தில் ஒரு நிறுவனம் தனது அறிவு மூலதனத்தை முன்னுறுத்தி நிறைபோட்டிச் சந்தையிலே நிலைபெற வேண்டுமாயின் அந்நிறுவனத்தின் ஊழியர்களது கல்வியும் பயிற்சியும், நிறுவனக் கட்டமைப்பு, நிறுவனத் தலைமைத்துவ மட்டங்களின் புலமை முதலானவை சர்வதேச ரீதியில் அவற்றின் செல்நெறிகளுக்கு ஏற்ப தேசிய எல்லைகளுக்கு அப்பால் சர்வதேச தரத்தின் அடிப்படையில் பேண வேண்டும்.

இவ்வாறு ஊழியர் தரத்தை அறிவு முகாமைத்துவத்திற்கு ஏற்ற வகையில் முகாமை செய்ய வேண்டுமாயின் அவ் ஊழியர்கள் அறிவு உற்பத்தியாளர்களாகவும் (Knowledge Generators), அறிவு நிறைவேற்றுனர்களாகவும் (Knowledge Executers) ஒருங்கிணைந்து தமது நிறுவனம் சார்ந்த உற்பத்திகளை உருவாக்கி சந்தைக்கு விட வேண்டும்.

 

அறிவு மூலதனம் :

வகைகளும் இயல்புகளும்

 அறிவுசார் சமூகத்திலே ஆராய்ச்சி அபிவிருத்தியிலும் தகவல் வலையமைப்பு விரிவாக்கத்திலும் உலகம் தழுவிய தகவல்த்தளம் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளது. இத்தகவல்த்தளத்தில் அறிவு மூலதனங்கள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, வேண்டிய நேரம், வேண்டிய வகையில் பணரீதியிலான பெறுமதியைக் கொடுத்து ஒரு நிறுவனம் தனது உற்பத்தியாக்கச் செயன்முறைக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இத்தகைய அறிவுத்தளத்தில் (Knowledge platform) யாரும் அணுகக்கூடிய அறிவை “வெளித்தெரியக்கூடிய அறிவு (Explicit Knowledge)” என கூறுவர். இத்தகைய அறிவானது சமகாலத்திலே 72 நாட்களுக்கு ஒருதடவை இரட்டிப்பாகிறதென ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். இத்தகைய அறிவு இன்று முதன்மையானதோ அல்லது முக்கியத்துவம் மிக்கதோ இல்லை. இத்தகைய அறிவுகள் தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தியினால் விரைவிலேயே காலாவதியாகி செல்லும் தன்மையுடையன. ஒவ்வொரு ஆராய்ச்சிக்குப் பின்பும் புதிய அறிவு தோன்றி மேற்கிளம்பி வரும்போது பழைய அறிவை இற்றைப்படுத்தியே வரும். எனவே விரைவில் காலாவதியாகும் அறிவை அல்லது தகவலை அல்லது தரவை நாம் கற்றுத் தேர்ந்துவிடுவதிலோ அல்லது அவற்றை பிரயோகித்து பழைய உற்பத்திகளையோ சமகாலச் சந்தைத் தேவைகளுக்கு சந்தைப்படுத்த முடியாது. சமகாலத்தில் இற்றைப்படுத்திய புதிய அறிவைக் கொண்டு பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்யும் பொழுதே அப்பொருட்கள் சேவைகள் சந்தையில் நிலைத்து நிற்கும் தன்மையுடையன.

 எனவே எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு குறித்த நிறுவனம் எந்தவொரு தேவைப்பாட்டிற்கும் அக்குறித்த காலத்தில் முகிழ்த்தெழும் சந்தைச் செல்நெறி, தொழில்நுட்பச் செல்நெறி, புத்தாக்கச் செல்நெறிகளுக்கு ஏற்ப புதிது புனைய வேண்டிய தேவை அல்லது புதிதாக பெறுமதி சேர்க்க வேண்டிய தேவை ஒவ்வொரு உற்பத்தி நிறுவனங்களினதும் ஊழியர்களுக்கு அமையப் பெற வேண்டிய கட்டாய நிபந்தனையாகும்.

எனவே அவ் ஊழியர்கள் தாம் ஏற்கனவே தேடிச் சேமித்து வைத்திருந்த பழைய அறிவைக் கொண்டு அதாவது காலாவதியான அறிவைக் கொண்டு நிறைபோட்டிச் சந்தைக்கான பொருட்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்துவிட முடியாது. அவ்வாறு செய்தால் அந்நிறுவனம் நிறைபோட்டிச் சந்தையிலிருந்து மறைந்துவிடும். ஊழியர்கள் தொழிலை இழந்துவிடுவர் அல்லது சமகாலச் செல்நெறிக்கேற்ப உற்பத்தி செய்ய முடியாத ஊழியர்களை அக்குறித்த நிறுவனம் சேவையிலிருந்து நீக்கிவிடும்.

இத்தகைய உள்ளார்ந்த அறிவே இன்றைய சமகால அறிவுசார் சமூகத்திற்கு வேண்டப்பட்ட மனித மூலதனமாகும். ஊழியர்களின் உள்ளார்ந்த அறிவு, அவர்களிடையே பகிரப்பட்ட தொழில் அனுபவம் இவற்றுடன் இணைந்த குழு முயற்சியே ஒரு நிறுவனத்தை கற்கும் நிறுவனமாக மாற்றி தமக்குரிய புலமைச் சொத்தை பொருளாதார பெறுமதியோடு பேணக்கூடிய ஒரு நிறுவனமாக தம்மை தகவமைத்துக்கொள்ளும். இத்தகைய அறிவுசார் பெறுமானங்கள் பொருளாதார பெறுமதியுடன் இணைந்து அந்நிறுவனத்தின் புலமைச் சொத்தாக அந்நிறுவனத்தின் ஐந்தொகையில் கணக்கிடப்படும்.

 

அறிவுக் கேந்திரமும் பாடசாலைக்கல்வியும்

உள்ளார்ந்த அறிவை தன்னகத்தே கொண்டு கற்கும் நிறுவனங்களாக செயற்பட்டு பொருளாதாரத்திற்கு தமது புலமைச் சொத்தை பகிரும் நிகழ்நிலைத் தளத்தை கொண்டமைந்த ஒரு பிரதேசம் அல்லது நாடு அறிவு கேந்திரமாக (Knowledge hub) பரிணமிக்கும். இன்றைய பின்லாந்து, சிங்கப்பூர், இந்தியாவின் பெங்களூர் என்பன இத்தகைய அறிவு கேந்திரத்துக்கான முன்னுதாரணங்களாகும்.

அறிவுக் கேந்திரமானது உள்ளுணர்வார்ந்த அறிவு (Intuitive knowledge), வெளிப்படைத் தன்மையான அறிவு மற்றும் உள்ளார்ந்த அறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஊழியர்களின் பேரறிகையின் (Meta Cognition) உதவியுடன் உட்கிடையாகவும் வெளிப்படையாகவும் குவிசிந்தனை, விரிசிந்தனை, பக்கவாட்டுச் சிந்தனை (Lateral thinking) மற்றும் முறைமை சார் சிந்தனை (System thinking) முதலானவற்றை செயல்முறையாக்கம் செய்து புத்தாக்கத்தினை வெளிப்படுத்தும் செயற்பாட்டிற்கு அல்லது உற்பத்திகள் சேவைகள் மீதான உருவாக்கத்திற்கு புத்தாக்க அறிவை வழங்கும் கேந்திர மையமாக இது காணப்படும். அறிவுக் கேந்திரத்தின் புலமைச் சொத்துக்கள் பொருளாதார பெறுமதியுடையன.

இப்புலமைச் சொத்துக்கள் புத்தாக்கத்திறனுடையதாகவும் ஒரு தளத்திலிருந்து பிறிதொரு தளத்திற்கு கடத்தக்கூடியதாகவும் காணப்படும். இத்தகைய பொறிமுறையைக் கொண்ட அறிவு கேந்திரத்தின் பதிவு செய்யப்பட்ட அங்கத்தினராக பல்வேறு பொருட்கள் சேவைகளின் உற்பத்தி நிறுவனங்கள், நிபுணர்கள், புலமையாளர்கள் பங்குதாரராக காணப்படுவர்.

 அறிவுக் கேந்திரத்தை ஒரு நாடு அல்லது பிரதேசம் உருவாக்க வேண்டுமாயின் அதற்கான அடித்தளத்தை அந்நாட்டின் பொதுக்கல்விக் கட்டமைப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சமகாலத்தில் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டிற்கான செயலுபாயமாக அறிவுக் கேந்திரங்களை உருவாக்கி வருகின்றன.

இந்த வகையிலேயே இந்தியாவின் முன்னாள் இஸ்ரோவின் (ISRO) தலைவர் மு.கஸ்தூரிரங்கன் தலைமையிலான எண்மர் கொண்ட குழுவினர் இந்திய தேசியக்கல்விக் கொள்கை வரைவிலே முன்வைத்த முன்மொழிவுகளை உற்றுநோக்கும் போது அறிவுக்கேந்திரத்துக்கான களத்தையும் தளத்தையும் இந்திய பொதுக்கல்விக் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

 

மனித மூலதனமும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும்

அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகள், பல்தேசியக் கம்பனிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அவற்றின் ஊழியர் படையை மனித மூலதனமாக உருமாற்ற வேண்டும் என ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மேற்கொள்வதோடு மட்டுமன்றி நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தமக்கு வேண்டிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் தாராளவாத நோக்குடைய நிறுவனங்களது வழிகாட்டுதல்களை தலைமேற் கொண்டு செயலாற்றுகின்றன. இதற்கு பிலிப்பைன்ஸ் நாடு மிகச்சிறந்த உதாரணமாகும்.

 இன்று மனித மூலதன உருவாக்கத்திற்கு வேண்டிய பொதுக்கல்வியை உருவாக்கி உள்ளமையில் வெற்றிபெற்ற ஆசிய நாடுகளாக பிலிப்பைன்ஸ் (76%) மற்றும் சிங்கப்பூர் (76%) ஆகியன காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் மனித மூலதன உருவாக்கத்திற்கான பொதுக்கல்வி கட்டமைப்பு மாற்றத்தில் சீனாவை (65%) விட முன்னிலையில் நிற்கின்றன என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வழங்கும் முதலாளித்துவ நாடுகளும் நிறுவனங்களும் தமது முதலீடுகளுக்கான நியதிகளாக அல்லது நிபந்தனைகளாக முன்வைக்கும் விடயங்கள் குறித்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டைக் காட்டிலும் அந்நாட்டிற்கு கிடைக்கும் மனித மூலதன அனுகூலங்களிலும் பார்க்க தமக்கு எத்தகைய நன்மைகள் என்பதனையே முதன்மைப்படுத்தி நோக்குவதனை அவதானிக்க முடிகிறது என மாற்றுக்கொள்கையாளர்கள் சிலர் கருதுகின்றனர். அந்த வகையில் நியதிகளை நோக்கும் போது,

 - வெளிநாட்டு நேரடி முதலீட்டை கவர்வதற்காக குறித்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் என்ன வகையான, என்ன தர அடிப்படையிலான மனித மூலதனம் உருவாக்கப்படுகிறது? என நோக்கல்.

- சர்வதேச தொழிற்சந்தைக்கு வேண்டிய ஊழியர் திறன்களையும் இயலுமைகளையும் உருவாக்கவல்ல மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்குரிய கட்டமைப்புக்கள், பயிற்சிகள் உருவாக்கப்படுகின்றதா? என நோக்கல்.

 - பல்தேசியக் கம்பனிகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மனித மூலதன உருவாக்கத்திற்கு எத்தகைய தொழில்நுட்பத்தை வழங்குகின்றன?அல்லது எத்தகைய பௌதிக வசதி வாய்ப்புக்களை வழங்குகின்றன? என நோக்கல்.

 - குறித்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசாங்கம் தனது பொதுக்கொள்கைகளில் மனித மூலதன உருவாக்கத்திற்கும் அதன் இயங்குநிலைகளுக்கும் எத்தகைய ஊக்குவிப்புக்கள் மற்றும் கரிசனைகளை காட்டுகின்றன? அல்லது கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்கின்றன? என நோக்கல்.

 - பல்தேசியக் கம்பனிகளும் குறித்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மனித மூலதனத்திற்கும் இடையிலான கொண்டு கொடுத்தல் வகிபாகம் எவ்வாறுள்ளது? மேற்குறித்த இரு பகுதியினருக்கும் இடையிலான தொடர்புச் சக்கரங்கள் எவ்வாறுள்ளன? என நோக்கல்.

 

இவ்வாறு மேற்கூறப்பட்ட நியதிகள் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மனித மூலதன உருவாக்கத்திற்கான நிதி வாய்ப்புக்களாக கிடைக்கும் அல்லது நிதியின் அளைவ தீர்மானிக்கும் காரணிகளாகும்

1990 கள் காலப்பகுதியில் ஜொம்தியன் மகாநாட்டுப் பிரகடனங்களில் “எல்லோருக்கும் கல்வி” என்னும் கோட்பாட்டை சர்வதேச ரீதியாக முன்னகற்றிய போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மாணவர்களது பாடசாலைக் காலம், மாணவர் வரவு வீதம், கட்டாயக் கல்வி வயதுக்காலம் முதலானவற்றிலேயே கூர்மையான கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இன்று “கல்வியின் தரம் என்பது” முதன்மைப்படுத்தப்பட்டு ஆழ்ந்த கற்றல் (Deep learning), உற்றறி சிந்தனை (Critical thinking), மாணவர் சுயகற்றல் (Self regulated learning), தொழில் வாழ்க்கைக்கும் பாடசாலைக் கல்விக்குமிடையிலான இடைவினைத் தொடர்பு, குழு ரீதியான கற்றல், மாணவர் மையக் கற்றல், அமைப்பு கணிப்பீட்டுக் கலாசாரம், புத்துருவாக்கம், பேரறிகைக்கான திறன்கள், உயர்மட்ட சிந்தனையாற்றல்கள் முதலானவை தொடர்பில் அதீத கவனத்தை கல்வியில் நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் எடுக்கின்றன. அதேவேளை இந்நிறுவனங்கள் ஆசிரியர் கல்வி மற்றும் ஆசரியர் கல்வி நிறுவனங்களின் தரம், ஆசிரியர் கல்வியியலாளர்களது தராதரம் என்பன தொடர்பிலும் அதீத கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு மனித மூலதன விருத்தியின் ஊடாக அந்நாடுகள் பொருளாதார மேம்பாடுகளையும் நலன்களையும் பெற்றுவிடலாம் எனக் கூறிய போதும் அக்குறித்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்படும் வருமான சமபங்கீட்டின்மைக்கு மனித மூலதன விருத்தி நிவாரணம் அளிக்கும் என கூறிய போதும் அந்நாடுகளிடையே மனித மூலதன விருத்தி வருமான ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு பதிலாக மேலும் அதிகரித்தமையே உற்றுநோக்கக்கூடியதாக உள்ளதாக மாற்றுக்கருத்தியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அதிகரிப்பும் சென்மதி நிலுவையில் குறைவும் வருவதனை அடிப்படையாக கொண்டு பொருளாதாரம் மேம்பாடு அடைந்து விட்டது எனக் கூறமுடியாது என மாற்றுச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

அதாவது வெளிநாட்டு நேரடி முதலீட்டை கவரும் உத்திக்காக குறித்த நாடுகள் மனித மூலதன விருத்திக்கான செயலுபாயத்தை வடிவமைக்கும் பட்சத்தில் அது உள்ளூர் மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டுத் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட முடியாது போய்விட்டால் அதன் மூலம் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் புதிய கல்வி மறு சீரமைப்பிற்கான ஆலோசனைகளும் மனித மூலதனமும்

இலங்கையை நோக்கும் போது இடைநிலை வருமான நாடாக பரிணமிக்கும் சாத்தியக்கூறுகளையும், கல்விக்கான அடிப்படைச்சுட்டிகளின் அடிப்படையில் தென்னாசியாவிலே முதன்மையான நாடாகவும் இலவச கல்வி, பரந்த பாடசாலை வலையமைப்பு முதலானவற்றை கொண்டமைந்த நாடாகவும் காணப்படுகின்றது. இத்தகைய பின்னணியானது மனித மூலதன உருவாக்கத்திற்கான சிறப்பான ஆதரவுத் தளத்தினை இலங்கை கொண்டுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.

எதிர்வரும் கல்வி மறுசீரமைப்பிற்கான க்ஷக்ஷஇலங்கை கல்வி விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினது ”Re-imagining Education in Sri Lanka” என்னும் அறிக்கையானது ஆசியாவிலே சிறந்ததோர் அறிவுக் கேந்திரத்தை இலங்கையில் உருவாக்கும் நோக்குடன் சில பரிந்துரைகளை முன்வைக்கிறது. இப்பரிந்துரைகள் மனித மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு,

 

- உள்ளார்ந்த உற்பத்தித்திறன் கொண்ட குடிமக்கள் (Productive citizens)

- தகவலளிக்கப்பட்ட அர்த்தமுள்ள கற்றலை பேணக்கூடிய குடிமக்கள் (Informed citizens)

 - புத்தாக்க குடிமக்கள் (Innovative citizens)

 

என மூவகையான அறிவு சார் கூறுகளை உள்ளடக்கிய ஊழியர் குழாத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது உலகளாவிய புத்தாக்க சுட்டெண்ணின் தரவரிசையில் 136 நாடுகளில் 101 ஆவது இடத்திலேயே இலங்கை நிற்கின்றது. இத்தகைய நிலையை கருத்திலெடுத்து புத்தாகத் திறனில் இலங்கையை தரம் உயர்த்த இக்கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுவாக இலங்கையில் பொதுக்கல்விப் புலத்திலே செறிவாக்கப்பட்ட விடய உள்ளடக்கமும் இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் மற்றும் பொதுப்பரீட்சைகள் வழி திசைமுகப்படுத்தப்படும் பாடசாலைக் கலைத்திட்டமானது புத்தாக்க பொருளாதாரத்திற்கான பிரதான தடைக்கல்லாக உள்ளது. இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் விடய உள்ளடக்கத்தையே மதிப்பிடுகின்றன.

 இவை அனைத்தும் சமகாலத்தில் காலாவதியாகும் அறிவுக்கூறுகளாகவே பெரும்பாலும் காணப்படும். அறிவுப்பெருக்கெடுத்து வருகின்ற இக்காலகட்டத்தில் விடய உள்ளடக்கத்தை கற்பதிலும் பார்க்க மாணவர் வாழ்நாள் கற்போனாக உருமாறுவதற்கு கற்பதற்கான கற்றல் திறன்களையே அவர் பாடசாலைக் காலத்தில் கற்றுத்தேற வேண்டும். ஆனால் இறுதி மதிப்பீட்டுப் பரீட்சைகள் இதற்கு தடையாக அமைகின்றன.

சமகால இலங்கை கலைத்திட்ட அமுலாகத்திலே புத்தாக்க இயலுமைகளை உருவாக்கவல்ல கற்றல் திறன்களையோ மென்தகவுத் திறன்களையோ உள்ளடக்குவதற்கான செயலுபாயத்தை இலங்கையின் கல்விக்கட்டமைப்பின் நடைமுறைகள் நடப்புக்காலத்தில் கொண்டிருக்கவில்லை. இம்மட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய கல்வி மறுசீரமைப்பு பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை எடுத்து வருவதற்கு உத்தேசித்துள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

இலங்கைப் பொதுக்கல்விக் கட்டமைப்பில் கலைத்திட்ட மற்றும் பாட உள்ளடக்க விடயங்களில் அறிகை ஆட்சியே இன்று முதன்மை பெற்றுள்ளது. இது நெட்டுரு கற்றலுக்கும் குறுங்கால ஞாபகத்தில் விடயத்தை வைத்திருந்து எழுத்துப் பரீட்சையில் அவற்றை வெளியிடும் ஒற்றைப் பரிணாமத்தையே கொண்டிருக்கின்றது. ஆனால் புத்தாக்க திறன் வேண்டிய மாணவர்களுக்கு அறிகை ஆட்சியிலும் பார்க்க உள இயக்கத்திறன் ஆட்சிக்கே முதன்மை கொடுக்க வேண்டும். உள இயக்கத்திறன் ஆட்சிக்கு அனுசரணையாக அறிகை ஆட்சியும் எழுச்சி ஆட்சியும் இணைந்து செயற்படுகின்ற பொழுதே மாணவர்களிடையே செயலாற்றுகைத் திறன்கள் மேம்படும். மேலும் மேற்குறிப்பிட்ட மூன்று ஆட்சிகளுக்கிடையே மென்தகவுத்திறன்கள் ஊடுபாய்ந்து சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கு வகை செய்ய வேண்டும். மென்தகவுத்திறன்கள் ஒரு மாணவரது அறிகை ஆட்சி, உள இயக்க ஆட்சி, எழுச்சி ஆட்சி முதலானவற்றை ஊடுபாயும் போதே மாணவர் புதிய தரிசனங்களை புத்தாக்கங்களை இனங்கண்டு உருவாக்க முடியும்.

மேற்குறித்த கற்றல் சூழலுக்கு மாணவர்களை நெறிப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அதற்குரிய கற்றல் வளங்களை வழங்கி வசதிப்படுத்துனராகவும் வளவாளராகவும் ஆசிரியர் செயற்பட வேண்டும். பலவகைப்பட்ட சிறப்பார்ந்த கற்றல் அனுபவங்களே மாணவர்களது புத்தாக்கத்திற்கான மனித மூலதன உருவாகத்திற்கான செயலாற்றுகைத்திறன்களை உருவாக்குகின்றது.

 செயலாற்றுகைத் திறனுக்கு சிறந்த பயிற்சி (Best practice), சுயகற்றல் அனுபவம், பிரதிபலிப்பு முதலானவை இன்றியமையாதனவாகும். இவ்வாறு ஆசிரியர் தனது சிறந்த கற்பித்தல் அனுபவங்களை, கற்பித்தல் உபாயங்களை கற்றல் கற்பித்தல் தொடர்பான உள்ளார்ந்த அறிவை தனிநபர் ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் ஒழுங்குபடுத்தி பேணுவதற்கும் கொடுப்பதற்கும் ஏதுநிலைகளை கொண்டிருக்க வேண்டும். இத்தகைய அனுபவங்களின் நிகழ்நிலைத்தளமே கல்விக் கேந்திரம் (Education hub) என அழைக்கப்படுகின்றது. அந்த வகையில் கல்விக் கேந்திரம் ஒரு நாட்டின் அறிவு கேந்திரத்தின் அடிப்படையாகவும் முன் நிபந்தனையாகவும் அமையப்பெறுகின்றது.

 

இலங்கையின் மனித மூலதன விருத்தியும் பொருளாதார மேம்பாடும்

இலங்கை தனது பன்மைத்துவ சமூக கட்டமைப்பையும் அதன் தேசிய அரசியல் புவியியல் எல்லைக்குள் இருக்கும் பிராந்திய, மாகாண ரீதியிலான வேறுபாடுகளையும் கருத்தில் எடுக்க வேண்டும். ஆனால் சுதந்திரத்துக்கு பிற்பட்ட கல்வி மறுசீரமைப்புக்களின் அமுலாக்கலின் போது இத்தகைய வேறுபாடுகள் நோக்கப்பட்டு அவை அவைக்கே உரிய பிரத்தியேகமான அணுகுமுறைகளை இலங்கை இதுவரை கடைப்பிடிக்கவில்லை.

இனத்துவ முரண்பாடுகள், கிராம நகர வேறுபாடுகள், பால்நிலை வேறுபாடுகள் இன்றும் இலவசக் கல்வியில் சில சமத்துவமின்மைகளை வெளிக்காட்டியே நிற்கின்றன. பிராந்திய ரீதிக்கு அப்பால் மாவட்ட ரீதியிலும் கூட ஒரு சில நகர்ப்புற பிரபல பாடசாலைகளை முதன்மைப்படுத்தி கல்வி வளங்கள் குவிக்கப்படுவது இன்றும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. பொதுவாக இலங்கையின் கல்விப்புலத்தை நோக்கும் போது வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் மேற்குக் கரையோரப் பிரதேசங்கள், தூரப் பிரதேச உலர்வலய சிங்கள விவசாய கிராமங்கள் தமக்கே உரித்தான பிரத்தியேகமான கல்விசார் எழு வினாக்களை கொண்டமைந்து காணப்படுகின்றன. இவ் எழு வினாக்களை எதிர்வரும் கல்வி மறுசீரமைப்பின் அமுலாக்கல் பொறிமுறையிலும் கருத்தில் எடுக்காது விடில் தொடர்ந்தும் தோல்வியுற்ற கல்வி மறுசீரமைப்பாகவே அதுவும் அமையப்பெறும்.

இலங்கையின் உள்ளூர் பொருளாதார வளங்களுடன் கல்வி மறுசீரமைப்பின் அமுலாக்கல் பொறிமுறை இணைக்கப்படாதுவிடின் இக்குறித்த கல்வி மறுசீரமைப்பு பிரேரிக்கும் “யதார்த்தமான கற்றல் (Authentic learning)” தோல்வியிலே முடிவடையும். அதே வேளை யதார்த்தமான கற்றல் இலங்கை பூராகவும் வெற்றி பெற வேண்டுமாயின் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் நடுத்தர மற்றும் சிறிய முயற்சியாண்மைகள் தோற்றம் பெற வேண்டும்.

உலக மயமாக்கலின் ஆதிக்க வீச்சுக்களை உள்வாங்கி இலங்கை தன்னை தகவமைத்துக் கொள்ள விரும்பும் இக்கால கட்டத்தில் இலங்கையின் உள்ளக வேறுபாடுகளை உள்முரண்பாடுகளை களைந்து எல்லோருக்கும் சமத்துவமான கல்வியை, மனித மூலதன உருவாகத்தை ஏற்படுத்த முடியாது போய்விடின் சிறய நாடாகிய இலங்கையிலிருந்து மூளைசாலிகளின் வெளியேற்றமே (Brain drain) அமையப்பெறும். எதிர்வரும் காலத்திலும் “கொழும்பு நகருக்கு பால் எங்களுக்கு கெக்கரி” என்ற கோசத்தின் நீட்சியை நாம் தொடர்ந்தும் கேட்க வேண்டி வரும்.

மூலம்:-  ஆசிரியம்

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click