கலாநிதி து.பிரதீபன்
பூகோள அரசியற் காய்நகர்த்தல் வியூகங்கள், குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவின் கழுகுப் பார்வை இலங்கைப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தினைப் பார்த்தல் வேண்டும். இலங்கையோடு ஒட்டியுள்ள இந்தியாவின் புவியியல் சார் நட்பும், ஆசிய ஆதிக்க சக்திகளுள் ஒன்றாக மிளிரும் வல்லமையும் இலங்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனது ஆளுகைப் பரப்பிற்குள் இழுத்து சீனாவின் ஏகாதிபத்தியத்தைக் குறைக்கும் பொறிமுறையைச் செய்வதற்கான சூழ்நிலையினையே உண்டுபண்ணியுள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள படு மோசமான பொருளாதாரச் சூழல்தான் எமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சியினை அரங்கேற்றியுள்ளது.
அடிப்படைத் தேவைக் காரணிகளை மையப்படுத்தி எழுந்துள்ள கிளர்ச்சி நிலையினால் அரசாங்கமும் ஆடிப்போயுள்ளது. அரச தலைவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் வெளியேறக்கோரி உச்சம் பெற்றுள்ள மக்கள் கிளர்ச்சி வெற்றி பெறுமா? அல்லது பூகோள அரசியல் காய்நகர்த்தல் வியூகத்தால் மக்கள் கிளர்ச்சி மழுங்கடிக்கப்படுமா? என்பதையே இக்கட்டுரை அரசியல் ஆருடமாகப் பார்க்கிறது. நாட்டு மக்களின் குறிப்பாக தென்னிலங்கையின் ஆத்மார்த்தமான அரசியல் மாற்றத்திற்கான எழுச்சியாக இது இருந்தால் இதன் பரிமாணம் அதன் இலக்கு அடையப்படும்வரை ஓயாது.
தென்னிலங்கையில் எழுந்த கிளர்ச்சியின் மையப்புள்ளியை ஆழமாக ஆராய்ந்தாலேயே தெளிவான விடையினைப் பெறலாம் என்பது கட்டுரையாளரின் கணிப்பு. அதன்படி, அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படையான மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள் இன்மை அல்லது பற்றாக்குறையினால் ஏற்பட்ட வலியின் உடனடிப் பிரதிபலிப்பே இன்று நாடு பூராகவும் வியாபித்துள்ள படு பயங்கரமான மக்கள் கிளர்ச்சிகளுக்கான முதன்மைக் காரணி. இவை தவிர, பொருட்களுக்கான வரலாறு காணாத விலையேற்றம், பால்மா மற்றும் இதர பொருட்களுக்கான தட்டுப்பாடு என்பனவும் உப காரணிகளாகச் செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம்.
நாட்டில் எழுந்துள்ள கிளர்ச்சியினைக் கட்டுப்படுத்தவும், அல்லது நீர்த்துப்போகச் செய்யவும் அவசரகாலச் சட்டம், சமூக வலைத்தளங்களின் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன அமுலில் இருந்தாலும் அதன் மூலம் அரசு எதிர்பார்த்திருக்கும் அடக்குமுறை மூலோபாயங்கள் வெற்றி பெற்றுள்ளதா? அல்லது வெற்றிபெறுமா? என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே எஞ்சி இருக்கும்.
வடகிழக்கில் சிறு பான்மைச் சமூகத்தை ஒடுக்க இவ்வாறான சட்டங்கள் கோலோச்சுவது போன்று தென்னிலங்கையில் கோலோச்ச முடியாது என்பதே யதார்த்தம். கடந்த நாட்களில் கண்முன்னே கண்ணுற்ற விடயங்களே அதற்குச் சான்று பகர்கின்றன. ஏனெனில் அவசரகாலச் சட்டத்தினை தென்னிலங்கையில் பூரணமாகப் பிரயோகிப்பதானது நாட்டில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்குச் சமம் என்பது அரசிற்கும் தெரியும். ஆதலால், தற்போதுள்ள நிலைமையில் அவசரகாலச் சட்டத்தினைப் பூரணமாகப் பிரயோகிக்க அரசு முயலாது என்பதே திண்ணம். வட கிழக்கில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களில் பெரும்பான்மை இன மாணவர்களின் முனைப்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றாலும் சிறுபான்மைப் பிரதேசங்களில் இச் சட்டம் அமுலாக்கப்படவேண்டியதன் தேவை இருக்காது. பலதாலும் பழக்கப்பட்டு, அடிபட்ட சிறுபான்மைச் சமூகத்திற்கு தற்போதய சூழல் ஒரு பொருட்டே அல்ல எனக் கூறுபவர்களும் உளர். அது உண்மையும் தான்.
இக்காலப்பகுதியில்தான் பூகோள அரசியற் காய்நகர்த்தல் வியூகங்கள், குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவின் கழுகுப் பார்வை இலங்கைப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தினைப் பார்த்தல் வேண்டும். இலங்கையோடு ஒட்டியுள்ள இந்தியாவின் புவியியல் சார் நட்பும், ஆசிய ஆதிக்க சக்திகளுள் ஒன்றாக மிளிரும் வல்லமையும் இலங்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனது ஆளுகைப் பரப்பிற்குள் இழுத்து சீனாவின் ஏகாதிபத்தியத்தைக் குறைக்கும் பொறிமுறையைச் செய்வதற்கான சூழ்நிலையினையே உண்டுபண்ணியுள்ளன. ஏற்கனவே அதற்கான வேலைதிட்டங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இலங்கையின் தற்போதயை அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தோடு ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைகள் மேலும் வலுப்பெறுவதோடு இலங்கையையும் இலங்கை மக்களையும் அல்லாது அரச தலைவரையும் அரசாங்கத்தையும் காப்பாற்றப்போகும் இயந்திரமாக இந்தியா விஸ்ரூபமெடுக்கும் காலம் நெருங்கிவிட்டதென்றே கூறலாம்.அமைச்சரவையின் புதிய மாற்றங்கள் மேலும் மக்களை கொதிப்படையச் செய்துள்ளன. இது பிரதமர் மற்றும் அரச தலைவர் கொண்டுள்ள இறுமாப்பைக் காட்டுவதோடு இதற்குப் பின்னால் ஒரு மறைமுக சக்தி இருப்பதையே பிரதிபலிப்பதாய் உள்ளது. அது இந்தியாவாக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
இந்தியாவின் பூகோள அரசியற் தந்திரோபாய நகர்வுகளும் உதவிகளும் தற்போது பற்றி எரியும் மக்கள் எழுச்சிகள்கூட மிகச் சாதாரணமாக நீர்த்துப்போகச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. எந்த மையப்புள்ளியில் பிரச்சினையும் கிளர்ச்சியும் ஆரம்பமானதோ அந்தப் பிரச்சினைக்கான மையப்புள்ளி குறுங்காலத்தில் இந்தியாவின் காய் நகர்த்தல்கள் மூலம் இல்லாமலாக்கப்படும். அதேபோன்று எந்த அடிப்படைக் காரணங்களுக்காக தென்னிலங்கை மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்தார்களோ, அந்தப் பிரச்சினைகளையும், கடன் அல்லது உதவிகள் மூலம் தீர்த்துவைத்து அரச தலைவரையும் அரசாங்கத்தையும் காப்பாற்றும் கைங்கரியத்தை இந்தியா எவ்வளவு விலைகொடுத்தேனும் செய்யும் என்பதே ஆரூடம்.
தற்போது நாடு பற்றி எரியும் நிலையில் இருந்தாலும் மக்களின் கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் அரசாங்கம் மாற்று வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கும் நிலையானது இவைகளை புடம்போட்டுக் காட்டுவனவாகவே உள்ளன.
தற்போதுள்ள தலைவரையும் அரசையும் வைத்துக்கொண்டே தனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்துமுடிக்க வேண்டும் என்னும்; எண்ணப்பாட்டிலேயே இந்தியா தனது தந்திரோபாயக் கயிறுகளை வீசிக்கொண்டிருக்கும் என்பதும் ஆரூடம்.
அன்றாட வாழ்க்கைக்கு அடிப்படையான மின்சாரம்;, சமையல் எரிவாயு எரிபொருள் என்பன இன்னும் சில நாட்களில் தொடர்ச்சியாகவோ அல்லது திருப்திப்படுத்தும் வகையிலோ கிடைக்கச்செய்யும் மூலோபாய நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா எடுப்பதற்கான சமிக்ஞைகள் உள்ளன. இந்த அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்போது மக்களும் கிளர்ச்சி நிலையினின்று இறங்கி படிப்படியாக சாதாரண நிலைக்கு வருவர். இதற்காக அரச தலைவர் இன்னும் சில நாட்களில் விசேட உரையின் மூலம் மக்களைக் கவரும் வகையில் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வினை மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தீர்த்துள்ளதாக அறிவிப்பார். தென்னிலங்கை மக்களும் சிறிது சிறிதாக சாந்தப்பட்டுவிடுவர். அவ்வப்போது அரச கட்சிகள் மூலம் ஆர்பாட்டங்கள் நடந்தாலும், மக்களாக வீதியில் இறங்கும் நிலைமை இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் குறைக்கப்பட்டு சிம்மாசனங்கள் காப்பாற்ப்படும் என்பதே ஆரூடம்.
சிறுபான்மையினரின் அடிப்படைபிரச்சினைகளைத் தீர்ப்பதில் நிட்சயமாக இந்தியா இதய சுத்தியோடு நடவடிக்கையில் இறங்காது. மாறாக ஏதேனும் உதவிகளைச் செய்து மதில்மேல் பூனையாக இருக்குமேயொழிய நிரந்தரத் தீர்வுக்கான நடவடிக்கையில் இறங்காது என்றே கூறலாம்.
டெல்லி அரசியல் எப்பொழுதும் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் விரோத நிலையினை இயல்பிலேயே கொண்டிருப்பதனால், நிரந்தரத் தீர்வினைக் கொடுத்து வலுப்படுத்த நினைக்காது.
வடக்கு கிழக்கு முனையங்களை கடல்சார் பாதுகாப்பு வலயங்களாகக் கொண்டு தனது ஆளுகைப் பரப்பை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளை தற்போதய இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்வது மிகவும் இலகுவானது என்பதை ஏற்கனவே கண்டுவிட்ட நிலையில், புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி முதலில் இருந்து தொடங்குவதை விரும்பாது என்றே ஆரூடம் கூறுகிறது. இந்தியாவிற்குள் அம்பிட்டு விட்ட இலங்கை கும்பிட்டாலும் வெளியேறுவதற்கான வாய்ப்பு, குறைந்தது ஒரு வருடத்திற்காவது இல்லை என்றே கூறுவதோடு, இதே தலைவர், மாறுபட்ட வர்ணங்களுடனும் சில வடிவ மாறுதல்களுடனும் அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவார் என்றே ஆரூடம் கூறுகிறது.
இது தென்னிலங்கை மக்களின் பொதுவான மனநிலை மற்றும் ஆட்சியாளர்களின் காய்நகர்தல் அதனோடு இந்தியாவின் தந்திரோபாய நகர்வு முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டது. இது பெரும்பான்மை மக்களின் மனதில் உண்மையான நாட்டிற்கான, மதரீதியற்ற, இனரீதியற்ற, எழுச்சிதானென்றால் மக்கள் நினைப்பது நடக்கும். இல்லை வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும்.
04/04/2022