- ரூபன் சிவராஜா-
"இத்தனை விரைவில் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதை மனம் ஏற்கத் தயங்குகிறது. அதிர்ச்சியே மேலிடுகிறது.
கருத்துமுரண்களையும் நட்புறவையும் பிரித்துப்பார்த்துப் பழகுகின்ற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்திருக்கிறது."
முன்னறிவிப்பின்றி நிகழ்வதால்தான் எல்லா மரணங்களும் அதிர்ச்சியைத் தருகின்றன. சுறுக்கர் என்றும் கோமகன் என்றும் அறியப்பட்ட பிரான்சில் வாழ்ந்துவந்த நண்பர் தியாகராஜா ராஜராஜனின் மரணம் எதிர்பாராத பேரதிர்ச்சி.
இலக்கியத் தளத்தில் தனித்துவமானதொரு பாதையமைத்துப் பயணித்த ஆளுமை. சிறுகதை எழுத்தாளர். கலை இலக்கிய சமூக ஆளுமைகளுடனான் நீண்ட விரிவான நேர்காணல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதோடு, அவற்றைப் புத்தகமாகவும் கொண்டுவந்துள்ளார்.
‘நடு’ இணைய சஞ்சிகையின் ஆசிரியர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், பத்தி எழுத்துகள், ஓவியங்களுக்கான காத்திரமானதொரு இலக்கிய சஞ்சிகையாக ‘நடு’வை நடாத்தி வந்தவர். புலம்பெயர் நாடொன்றிலிருந்து தரமானதொரு இலக்கிய சஞ்சிகையைத் தொடர்ச்சியாகக் கொண்டுவருவதிலுள்ள சவால்கள், சிக்கல்கள் நாம் அறியாததல்ல. அவர் அந்தப் பணியினை அர்ப்பணிப்புடனும் பெருவிருப்புடனும் முன்னெடுத்தார் என்பதை நான் அறிவேன். அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து எழுத்தாளர்களை ‘நடு’வில் இணைத்துக் கொண்டாடினார். புதிய திறமைகளைத் தேடி அறிமுகப்படுத்தினார்.
அண்மைக் காலமாக புத்தகங்களைப் பதிப்பித்து வெளியீடு செய்கின்ற பதிப்பாளராகவும் தன் இலக்கியப் பயணத்தை விரிவுபடுத்தியவர் கோமகன். இலக்கிய முன்னெடுப்புகள் சார்ந்த இன்னும் பல கனவுகளும் திட்டங்களும் அவரது மனதில் நிச்சயம் இருந்திருக்கும். கடந்த பல ஆண்டுகளாக அவருடன் நட்புக் கொண்டிருந்திருக்கிறேன் . என்னிடமிருந்து கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகளை அவ்வப்போது கேட்டுப்பெற்று ‘நடு’வில் பிரசுரித்திருக்கின்றார். ஒருவரையொருவர் Boss என்று சொல்லியே நாம் அழைப்போம்.
தாயகத்திற்கு விடுமுறையில் சென்று திரும்பும் போது விமானநிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக நண்பர்களின் பதிவுகளிலிருந்து அறியக்கிடைக்கிறது. தாயகத்தில் நின்றபோது அவர் முகநூலில் இட்ட பதிவுகள், அங்கு நிற்கும்போது அவருடைய கொண்டாட்ட மனநிலையையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தின.
‘சுறுக்கர் புளி வியாபாரத்துக்கு றெடி’
‘சுறுக்கர் சுறுட்டுக்காய் பொயிலையை (கட்டி ) தூக்கின நேரம்’
‘சுறுக்கர் தோட்டத்தில் களையெடுத்த பொழுது’
போன்ற captionகள் தாயகத்திலிருந்து அவர்போட்ட நிழற்படங்களுக்கான சில உதாரணங்கள்
'சுறுக்கரின் வருகையை கண்டு பருத்தித்துறை குதூகலித்த பொழுது' என்ற captionனுடன் ஒரு மழைக்காட்சியைக் காணொளிப் பதிவு செய்து போட்டிருந்தார்.
தோட்டம் கொத்தும்போது, புல்லுச் செதுக்கும் போது, வளவு துப்பரவாக்கும் போது, பாரம்பரிய உணவு உண்ணும்போது என தாயகத்து மண்வாசம் பிரதிபலிக்கும் படங்களை அங்கிருந்த போது முகநூலில் பதிவுசெய்து தனது குதூகலங்களை வெளிப்படுத்திய மனிதன். இன்று இல்லை. அவருடைய தோற்றத்தில் ஒரு குழந்தைமை இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆயினும் குரலில், உரையாடலில் நிதானமும் தெளிவும் இருக்கும். தன் சின்னச் சின்னக் குதூகலங்கள் , சந்தோசங்கள் தொடர்பாக அவர் முகநூலில் இடும் நிழற்படங்கள், Captionகள் கூட அவருடைய குழந்தைமையை வெளிப்புடுத்துவதாக எனக்குத் தோன்றியிருக்கின்றது. தன்னுடைய சந்தோசங்களைப் பிறருக்குத் தொற்றவைக்கின்ற அல்லது அருடைய சந்தோசங்களையிட்டு மற்றவர்கள் சந்தோசப்படும் வகையிலானவை அவருடைய அத்தகைய பதிவுகள்.
இத்தனை விரைவில் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதை மனம் ஏற்கத் தயங்குகிறது. அதிர்ச்சியே மேலிடுகிறது.
கருத்துமுரண்களையும் நட்புறவையும் பிரித்துப்பார்த்துப் பழகுகின்ற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்திருக்கிறது.
அவருடைய குடும்பத்தினரின் துயரில் இணைந்து ஆறுதலைப் பகிர்ந்துகொள்கிறேன்.