கலாநிதி து.பிரதீபன்
பகுதி – 1
"சமகால இலங்கையின் ஒவ்வொரு அசைவிலும் டெல்லியின் திரை மறைவுச் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளமையினை காரண காரியங்களுடன் ஊகிக்கக்கூடியதாகவேயுள்ளது. தள்ளாடிக்கொண்டிருக்கும் இலங்கையை உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்குக் களத்தில் நின்று உதவும் காப்பரணாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு பொருளாதாரக் கொள்கையுடன் கலந்த தற்சார்பு அரசியல் நிலைபாடொன்றினை திணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கைங்கரியத்தையும் முடுக்கிவிட்டுள்ளது."
பொருளாதாரப் பிரச்சினையை மையப்புள்ளியாகக் கொண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி, வாரங்கள் கடந்து காலி முகத்திடலில் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. பல விடயங்கள் இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளன. அடிப்படை அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான நீண்ட வரிசை, பொருட்களின் விலையேற்றமும் பற்றாக்குறையும், மக்களின் விரக்தி, போராட்டம், துப்பாக்கிச் சூடு, அரசியல் அசிங்கம், அரசியலமைப்பு மாற்றம், சிறுபான்மையினரின் பிரச்சினை, பணவீக்கம், மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு, சர்வதேச நாணய நிதியம் எனப் பல பரிமாணங்களின் தளமாக இலங்கை மாறியுள்ளது. ஆனால் இவைகளுக்குப் பின்னால் திரை மறைவில் கர்ச்சிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பூகோள அரசியல் வியூகங்கள், சமகாலத்தில் பல அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளதோடு எதிர்காலத்தில் இலங்iகை அரசியலிலும் பொருளாதாரத்திலும் நாம் எதிர்பார்க்காத விளைவுகளை உண்டு பண்ணக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதைக் கட்டுரையாளர் ஆரூடமாகப் பதிவுசெய்கிறார்.
சமகால இலங்கையின் ஒவ்வொரு அசைவிலும் டெல்லியின் திரை மறைவுச் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளமையினை காரண காரியங்களுடன் ஊகிக்கக்கூடியதாகவேயுள்ளது. தள்ளாடிக்கொண்டிருக்கும் இலங்கையை உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்குக் களத்தில் நின்று உதவும் காப்பரணாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு பொருளாதாரக் கொள்கையுடன் கலந்த தற்சார்பு அரசியல் நிலைபாடொன்றினை திணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கைங்கரியத்தையும் முடுக்கிவிட்டுள்ளது. அதற்காக உள்ளக அரசியலாலும் அரசியல் சக்திகளாலும் தீர்மானம் எடுத்துத் தீர்க்கமுடியாத சிக்கல் நிலையினைப் பொருளாதாரத்தில் உண்டுபண்ணி, தற்சார்பு பொருளாதாரக் கொள்கை மூலம் இலங்கை நாணயத்திற்குப் பதிலாக இந்திய நாணயத்தினை புழக்கத்தில் விட்டு பல பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆரூடமாகக் கூறக்கூடியதாகவேயுள்ளது.
இந்தியச் தற்சார்புப் பொருளாதார மற்றும் நாணய அமுலாக்கத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள அரசாங்கத்தினை அரியணையில் வைத்திருப்பதற்கே இந்தியா தனது முனைப்பைக் காட்டும். இதுவே மக்களின் புரட்சிக்கு இதுவரை இருந்துகொண்டிருக்கின்ற சவால்களில் ஒன்று.
மக்களின் புரட்சியும், எழுச்சியும் தீர்மானம்மிக்கதாக இருப்பினும்கூட அவைகளையும் தாண்டி தனது பூகோள அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா பகீரதப்பிரயத்தனம் எடுக்கும் என்பதே ஆரூடம்.
மக்களின் போராட்ட வியூகம் தீர்க்கமானதாகவும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கின்ற போதிலும் இந்தியாவின் வியூகங்களை விஞ்சுமளவிற்கு இருந்தால் மாத்திரமே மக்களின் போராட்டக் கோரிக்கைகள் பூரணமாக வெற்றியடையும். இந்தியாவிற்குக் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியா தனக்கான களமாக மாற்றி அமைப்பதற்கு அரசியல் பொருளாதார ரீதியாக பல சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆரூடம் கூறுகிறது.
மொத்தத்தில் இந்தியப் பூகோள அரசியல் நகர்வுகள் இலங்கையின் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கப்போகின்ற மிகப்பெரும் சக்திகளாகவும் காரணிகளாகவும் இருக்கப்போகின்றன என்பதே ஆரூடம். தற்போதய நிலையில் அனைத்து நிலைகளிலும் இலங்கை இந்தியாவைச் சார்ந்தே இருந்துகொண்டிருக்கின்றமை கண்கூடு.
குறிப்பு:
நல்லதொரு அரசியல் மாற்றம் வந்து நல்லதொரு தலைவர் நாட்டிற்குக் கிடைத்தால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மூலம் ஒரு மாதகாலத்திலேயே ஓரளவு ஸ்திரமான பொருளாதார நிலையினை இலங்கை அடைவதற்கான வாய்ப்பு உண்டு.
ஆனால் இந் நிலைமை இலங்கையில் உருவாகுதல் மற்றும் இலங்கை தனித்தே எழுச்சி பெறுதல் முதலானவற்றை இந்தியா விரும்பாது. மாறாகத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது தடைபோடுவதற்கோ விளையும் என்பதே ஆரூடம்.
குறிப்பாக புலம்பெயர் தமிழர்களால் இலங்கை மீழ்ச்சி பெறுவதையோ சிறுபான்மையினருக்கான நிரந்தரத் தீர்வைச் சிறுபான்மையினர் நினைப்பதுபோன்று கிடைக்கச் செய்வதையோ டெல்லி எக்காலத்திலும் செய்யாது என்பதே ஆரூடம்.
சமகால இலங்கையின் பல்வேறுபட்ட பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு இந்திய ரூபாவினை மாற்றீடான நாணயமாக இலங்கையில் புழக்கத்தில் விடல் ஒப்பீட்டளவில் சாதகமே.
இந்த வியூகத்தை மையப்படுத்தி இந்தியா தனது காய்களை நகர்த்திக்கொண்டிருப்பதை இக் கட்டுரை ஆரூடமாகக் கூறுகிறது. பொருளாதாரத்தால் திவாலான நாடுகளின் படிப்பினைகளைப் பார்த்தால் இந்திய ரூபாய் புழக்கத்தில் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இவையெல்லாம் தாண்டி இலங்கை மீள்வதற்கான அடுத்த கட்ட மாற்று வழி இலங்கையின் பல சொத்துக்களை விற்றலும் நீண்டகால குத்தகைக்கு விடலும். இதிலும் இந்திய சார்புக் கொள்கை அமெரிக்காவுடன் இணைந்து மேலோங்கி நிற்கும் என்பதை ஊகிக்கலாம். இவற்றை விட சீனாவின் பூகோள அரசியல் வேறு தளத்தில் இலங்கையை முற்றுகையிடும். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்தியாவே அதிகூடிய செல்வாக்கினைச் செலுத்தும்.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளின் அடுத்த படிநிலைகள்,
இலங்கையில் அரசியற் காரணிகளால் உருவாக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சவால்கள்,
மீண்டெழுபொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய வல்லமை இலங்கைக்கு உள்ளதா???
அவ்வாறு அரசியல் மாற்றங்களுடாக தீர்க்கமான கொள்கையுடன் இலங்கை முன்னேறுவதற்கு இந்தியாவின் வியூகம் இடம்கொடுக்குமா?
சிறுபான்மையினரின் அரசியல் தீர்வுக்கு இந்தியா விடைகொடுக்குமா??
போன்ற பல்வேறு விடயங்களுடன் கட்டுரை தொடரும்...
நன்றி