Skærmbillede 1451- கார்த்திகேசு சிவத்தம்பி -

 யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே குத்திட்டு நிற்கின்றதும், நமது சமூக நடைமுறைகளைப் பெரிதும் ஒழுங்கு படுத்திக் கட்டுப்படுத்துவதுமான இந்த விடயம் பற்றி நாம் பேசுவதும் இல்லை.

பேசமுயல்வதும் இல்லை. இந்தச் மௌனம், இந்தச் சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கின்றமையால், புலமை நிலையிலாவது இதனை அகற்றவேண்டுமென்பதற்காக இந்த உசாவலை மேற்கொள்கின்றேன். நமது சமூகம், அதன் வரலாற்றில் எதிர்நோக்கிய மிக முக்கியமான நெருக்கடி வேளைகளில் ஒன்றான இன்றைய காலகட்டத்தில், நமது சமூக பெருமாற்றத்தினுக்கு உட்பட்டு நிற்கும் இவ்வேளையில், நமது சமூகத்தின் அடிப்படைகள், எடுகோள்கள் பற்றிய சில. ஆரம்ப மட்டத்தரவுகளையும் சிந்தனைகளையும் முன்வைப்பது. சமூகப்புலமையின் குறைந்த பட்சக்கடமையென்றே கருதுகின்றேன்.

 யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய மானிடவியல், சமூகவியல் ஆய்வுகள் மிகக்குறைவாகவேயுள்ளன. இத்துறையில் தொழிற்படும் மேனாட்டு அறிஞர் மிகச்சிலரே. (Bryan Pfaflenberger, Kenneth David , Skjonberg). இத்துறையிற் சர்வதேசப்புகழ் பெற்ற எஸ். ஜே. தம்பையா போன்ற தமிழர்களாகிய அறிஞர்கள் கூட ஈழத்துத் தமிழ் மக்களின் சமூகவியல் மானிடவியல் ஆய்வுகளிற் பூரண கவனம் செலுத்துவதில்லை. யாழ்ப்பாணச்சமூகம் பற்றிச் சித்தார்த்தன் பேரின்பநாயகம் எழுதியுள்ள "The Karmic Theatre" என்னும் நூல் சுவாரசியமான ஒன்றாகும். ஆனால் அது யாழ்ப்பாணச் சமூக அமைப்பு , மாற்றம் பற்றிய வரன்முறையான ஆக்கம் அன்று. இத்தகைய ஒரு நிலையில், இங்கு நிகழும் சமூக மாற்றத்தின் தன்மைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது யாழ். பல்கலைக்கழகப் புலமையாளரின் கடமையாகின்றது.

சமூக வரலாறு. சமூகவியல், மானிடவியல் ஆகிய துறைகளின் வழிச்சென்று தமிழிலக்கியப் பாரம்பரியத்தை மீள் நோக்குச் செய்யும் ஓர் ஆய்வுமுறையில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக நான் இவ்விடயத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளேன். அந்தப் புலமைப் பின்புலத்திலேயே இந்தக் கட்டுரை எழுதப் பெறுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது ஒரு அறிமுக முயற்சியேயாகும். தமிழ்மொழி நிலையில் இவ்விடயத்தைப் பற்றி வெளிப்படையான சிந்திப்புக்களைத் தூண்டுவதே இதன் நோக்கமாகும். அந்த அளவுக்கு இந்தக் கட்டுரையின் அணுகுமுறையிற் சில "நெகிழ்ச்சிகள் தென்படலாம். அத்துடன். இது ஒரு பிராரம்ப முயற்சியாதலாலும், இக்கட்டுரை 60 நிமிட வேளைக்குள் வாசிக்கப்படத்தக்கதாக அமைய வேண்டுமென்பதாலும் நான் விரும்பும் ஆழம் கூட. இந்த ஆய்விற் புலப்படமுடியாதுள்ளது.

 

Skærmbillede 1454இச்சிறு ஆய்வு பின்வரும் விடயங்கள் பற்றி நோக்கவுள்ளது.

 1. யாழ்ப்பாணத்தின் சமூகத்தை இனங்கண்டு கொள்ளல்.

11. யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக்கம், நிலைபேறு. தொடர்ச்சியின் சின்னமாகத் "தேசவழமைச்சட்டம்" அமையுமாறு.

111. யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகள் சிலவற்றினை நோக்கல்.

IV. இச் சமூகத்தின் பண்பாடும் கருத்து நிலையும்.

V. இச் சமூகத்தின் சமகால அசைவியக்கத்தின் தன்மைகள் சில.

V1. நிறைவுரை

 

யாழ்ப்பாணச் சமூகத்தை இனங்கண்டு கொள்ளல்

சமூகவியலிற் பெயர்பெற்ற பாடப்புத்தகங்களுள் ஒன்றான மக்ஐவரின் "சொசைட்டி" (Society) என்னும் நூலில் (1961) வரும் ஒரு கூற்று. சமூகத்தின் அமைப்பு பற்றிய பல அடிப்படை உண்மைகளை விளக்குவதாக அமைகின்றது.

 " சமூகப் பிறவிகளான மனிதர்கள், தமது நடத்தை முறைகளைப் பல்வேறுபட்ட முறைகளில் வழிநடத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற ஓர் ஒழுங்கமைப்பினை ஆக்குவதன் மூலமும் மீளாக்கம் செய்வதன் மூலமும், தங்கள் இயல்பினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

 ஒரு குறிப்பிட்ட பிரதேச வட்டத்தினுள் வாழுகின்றவர்கள் என்ற வகையிலும் அவ்வாறு வாழும் பொழுது பல்வேறு ஊடாட்டங்களையும் தொடர்புகளையும், உறவுகளையும் கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும் (அப்பொழுது தான் அந்தக் குழுமம் இயங்கும்) அந்தக் குழுமத்தினர் ஒரு சமூகம் என அழைக்கப்படுதல் மரபு. நாட்டு நிலைகளிலும், நாடுகள் அளாவிய நிலைகளிலும் அத்தகைய"சமூகங்களைப் பற்றிப் பேசுவது வழக்கம் (அமெரிக்கச் சமூகம், தமிழ்ச்சமூகம்).

 குறிப்பாக ஒரு வாழிடவரையறைக்குள் சீவிக்கும் பொழுது. அந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட கட்டமைவினைக் கொண்டதாக அமையும், (Social Structure). அந்தச் சமூகத்தின் பல்வேறு அலகுகளிடையேயும் நிலவும், காலச்செம்மைபெற்ற ஒழுங்குமுறைப்பட்ட அமைவொழுங்குள்ள உறவுகள் இந்தக் கட்டமைவைப் புலப்படுத்தி நிற்கும். இவ்வாறு அமையும் கட்டமைவு அதன் இயங்கு நிலையில் ஓர் அமைப்பு" (System) ஆகத்தொழிற்படும். அந்தச் சமூகம் இயங்கும் முறைமையை விளங்கிக்கொள்வதற்கு அது எவ்வகையில் ஓர் அமைப்பு" ஆகத்தொழிற்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். அமைப்பு என்பது "ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ள பாகங்கள், பொருள்கள் உயிர்களின் தொகுதி" என்பர். அந்த இயங்குநிலைமுறைமை அதற்கு ஒரு "தனித்துவத்தை ” வழங்கும். .

இவ்வாறு நோக்கும் பொழுது, யாழ்ப்பாணத்தினை வாழிடமாகக் கொண்ட ஒருவர். "யாழ்ப்பாணத்தவர்" என்று சுட்டப்படுவதற்கான நடத்தை முறைகள். சீவிய முறைகள், கண்ணோட்டங்கள், மனோபாவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பார் என்பது போதரும்.

 

ஈழத்தின் தமிழ் மக்களை நோக்கும் பொழுது இரு முக்கியமான சமூக அமைவுகளை இனங்காணலாம்.

1) மட்டக்களப்புச் சமூகம்

2) யாழ்ப்பாணச் சமூகம்

 இந்த "யாழ்ப்பாண மனிதனை” ப்பற்றிய சில சமூகவியல், அரசியல், பொருளியல் அவதானிப்புக்கள் உள்ளன. (ஜேன்றசல் ; 8). ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த யாழ்ப்பாண மனிதரைப்பற்றிய வரன்முறையான ஆய்வுகள். சற்று முன்னர் குறிப்பிடப்பட்டதற்கியைய ஆங்கிலத்திலே மிகக்குறைவு. தமிழில் இல்லையென்றே கூறவேண்டும். தமிழில் இத்தகைய ஆய்வுகள், நூல்கள் இல்லாமைக்கு ஆழமான ஒரு நியாயமும் உண்டு. அதாவது நாம் உண்மையில் நம்மைப்பற்றிய ஒரு புறநோக்கான (விடயி நோக்கான - Objective) ஒரு பார்வையை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்று கூறவேண்டும் போலுள்ளது. சிங்கள சமூகத்தினைப் புறநோக்காகப் பார்த்து அதனை ஆராய்ந்துள்ள ஆராய்ந்துவரும் சில அறிஞர்கள் போன்று (நியூட்டன் குணசிங்க, R.A.L.H. குணவர்த்தனா, குமாரி ஜயவர்த்தனா போன்றவர்கள் ) நம்மிடையே இன்னும் ஓர் அறிஞர் குழாம் தோன்றவில்லை. நம்மிடையே சமூக வரலாறு பற்றிய ஆய்வுகள் வளர வேண்டுவது மிக அவசியமாகும். பல்துறைச்சங்கம ஆய்வு முறையின் மூலம் நாம் இந்த ஆய்வுப் பணியினை மேற்கொள்ளல் வேண்டும்.

 

தேசவழமைச்சட்டமும் நமது சமூக உருவாக்கத்தில் அதன் முக்கியத்துவமும்

 "யாழ்ப்பாணத்துச் சமூகம்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடத்தக்க ஒரு குழுமம் உண்டு என்பதற்கான பிரதான சான்று. இந்த சமூகத்தினரிடையே வழக்கிலுள்ள தேசவழமை எனும் சட்டத்தொகுதியாகும்.

யாழ்ப்பாண மாநிலத்தைத்தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த ஒல்லாந்தர். நீதிபரிபாலனத்தினுக்கான மன்றுகளை நிறுவிய பொழுது அம்மன்றுகளிலே தளமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சட்டத்தைத் தொகுக்க முனைந்த பொழுது, யாழ்ப்பாணத் "தேசத்தின் "வழமை" யாகவிருந்த நடைமுறைகளையே சட்டமாகத் தொகுத்து எடுத்துக்கொண்டனர். அத்தொகுப்புப் பணிக்குத் திசாவையாகவிருந்த கிளாஸ் ஐசாக்ஸ் (Claas Isaaks) என்பவர் பொறுப்பாயிருந்தார். 1706 ஓகஸ்ட் 14ல் கோணெலியஸ் ஜோன் சீமோன்சினால் (Cornelius JoanSimmons) பணிக்கப்பெற்ற இத்தொகுப்பு 1707ம் வருடம் ஐனவரி மாதம் 30ம் திகதி டச்சுத்தேசாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இத்தொகுதி. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 12 தமிழ் முதலியார்களால், உண்மையான தேசவழமையே என அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர். 1707 டிசம்பர் 16 ஆம் திகதி சட்டப்புத்தகத்திற் சேர்த்துக்கொள்ளும் படிக்குத் தேசாதிபதியின் காவலாளரால் பணிக்கப் பெற்றது.

இச்சட்டத்தினையே யாழ்ப்பாணத்துத் தமிழர்களுக்கிடையே எழும் வழக்குகளுக்கான சட்டமாகக் கொள்ள வேண்டுமென பிரித்தானிய ஆட்சி 1806 டிசம்பர் 9ம் திகதி ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர். 1895 முதல் தேசவழமைச்சட்டத்திலே பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டின் பொதுச் சட்டத்துடன் தேசவழமைச் சட்டம் முரணாகுமிடங்களில் இம்மாற்றம் ஏற்படுத்தப்பட்டதெனலாம். இத்தகைய பல்வேறு மாற்றங்களின் பின்னர் இன்று தேசவழமைச்சட்டமானது யாழ்ப்பாணத்து மக்களின் சொத்துரிமைக் கையளிப்புச் சட்டமாகவே தொழிற்படுகின்றது.

1707 இல் இருந்த நிலையில் அது கொண்டிருந்தனவற்றை நோக்கும் பொழுது அக்கால யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அமைப்பு மிகத் துல்லியமாகப் புலப்படுகின்றது. 1707 இல் தொகுக்கப்பெற்ற பொழுது, தேசவழமைச் சட்டம் ஒன்பது பிரிவுகளைக் கொண்டதாக விளங்கிற்று. அந்த ஒன்பது பிரிவுகளையும் அவை ஒவ்வொன்றிலும் இடம் பெற்றவற்றையும் அறிவது யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சமூகவியல் அமிசமொன்றினை அறிவதாக அமையும்.

 

முதலாம் பிரிவு

சொத்துரிமையும் பேறும் பற்றியது

1. மூவகைச் சொத்துக்கள் சீதனம். முதுசம், தேடியதேட்டம்

2. சீதனம் பற்றியது

3-6 மகள்மாரின் விவாகமும் அவர்களுடன்

கொடுக்கப்பெறும் சீதனமும் .

7. மகன்மாரின் விவாகமும் அவர்களுக்குரிய பங்கும்

8. சொத்தினைக் கொடுத்தல் (மகன்மாருக்குச் சொத்து போகாமலிருப்பதற்காக

ஈடுவைப்பதைத் தடுத்தல்)

9. பிள்ளைகளும் தாயுமுள்ளவிடத்துச் சொத்துரிமை செல்லும் முறைமை (தகப்பனிறந்தவிடத்து )

10. தாய் மீண்டும் விவாகஞ்செய்யுமிடத்துச் சொத்து பிரிக்கப்

படவேண்டிய முறைமை

11. பிள்ளைகளும் தகப்பனுமுள்ளவிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை (தாயிறந்த விடத்து )

12. பிள்ளைகள் தாய்தந்தையற்றவர்களாகவிருக்குமிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை

13. ஒன்று விட்ட சகோதரர், சகோதரிமார் மாத்திர முள்ளவிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை

14. இரண்டு தாரத்துப்பிள்ளைகளுமிருக்குமிடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை

15. தத்தம் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகளா கவிருந்த இருவரின் சொத்துக்கள் பிரிக்கப்படும் முறைமை

16. சொத்து நன்கு திருத்தப்பட்டு (பயன் அதிகரிக்கப்படுத்தப்பட்டு) இருக்குமிடத்து அது பிரிக்கப்படும் முறைமை

17. "அஞ்ஞானி யொருவன் கிறிஸ்தவப்பெண்ணை மணம் செய்யும் இடத்துச் சொத்து பிரிக்கப்படும் முறைமை

18. இருவர் "அஞ்ஞானிகள்" விவாகம் செய்யும்பொழுது சொத்து பிரிக்கப்படும் முறைமை

 

 

இரண்டாம் பிரிவு

சுவீகாரம் செய்தல்

1. சுவீகாரத்துக்கான சடங்குகள் (பெற்றுக்கொள்ளும் தாய், வண்ணார். அம்பட்டர் முன்னிலையில் மஞ்சள் தண்ணீர் குடித்தல்)

2. சுவீகாரஞ் செய்வோருக்கு வேறு பிள்ளைகளுக்குப்பின், அவர்களது சொத்துக் கையளிக்கப்படும் முறைமையும் பிரிக்கப்படும் முறைமையும்.

3. சுவீகாரம் பெறப்பட்டவர் பிள்ளைகளில்லாமல் இறப்பின்

4. ஒருவொருக்கொருவர் உறவினரல்லாத இரு பிள்ளைகள் சுவீகாரம் செய்யப்படுமிடத்து

5. சுவீகரிக்கப்பட்ட பிள்ளையின் சுவீகாரத்தை . சுவீகாரம் செய்பவரின் உறவினர் ஏற்றுக்கொள்ளாதவிடத்து அந்தச் சுவீகாரப் பிள்ளைகளிடையே சொத்தை பிரிக்கும் முறைமை

6. மூன்று சகோதரர்களில் ஒருவர் ஒரு பிள்ளையைச் சுவீகாரஞ் செய்யுமிடத்து

7. உயர்ந்த அல்லது குறைந்த சாதிப்பிள்ளையொன்று சுவீகாரம் செய்யப்படும் பொழுது

 

மூன்றாம் பிரிவு

காணி , தோட்டம் முதலியன வைத்திருத்தல்

1. கூட்டுச்சொத்தாகவோ, கூட்டுச் செய்கையாகவோ வைத்திருத்தல்

2. காணியை வாடகைக்குப் பெறல்

3. ஒருவர் காணியிலுள்ள மரத்துப் பழங்கள் இன்னொருவரின் காணி மீது தொங்கி நிற்பின்

4. பனைமர உரிமை

 

நான்காவது பிரிவு

நன்கொடை பற்றியது

1. கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் பொழுது எவையெவற்றை நன்கொடையாகக் கொடுக்கலாம். எவையெவற்றைக் கொடுக்க முடியாது என்பது பற்றி

2. எந்த அளவுக்குப் பெறாமக்கள், மருமக்களுக்கு (nephews and nieces) நன்கொடை கொடுக்கலாம் என்பது பற்றி

3. இன்னொருவரிடத்து காணி நன்கொடை பெறும் பொழுது

4. ஒரு மகனுக்கு அல்லது இரண்டு மகன்மாருக்கு நன்கொடை கொடுக்கப்படுமிடத்து

5. விவாகஞ் செய்யாத மகன்மாருக்கு உறவினரால் கொடுக்கப்படுவன. அவர்கள் விவாகஞ் செய்யும் பொழுதும் அவர்களிடத்தேயிருத்தல், மற்றையவை அப்படிச்செல்லா.

 

 

ஐந்தாம் பிரிவு

ஈடுகள் அடைவுகள் பற்றி

(குறிப்பு: ஈட்டுக்கும் ஒற்றிக்கும் பொதுவான முறையிலே

('morttgage') என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது).

 1. ஈடுவைத்த காணியானது மீட்கப்படும் வரை அதன் ஆட்சியும், வருமானமும் ஈடு வாங்கியவருக்கேயுரியதெனு மிடத்து (இது உண்மையில் ஒற்றியாகும்)

2. ஒற்றி பெறுவோரே அத்தகைய காணிகளுக்கான

வரிகளைக் கட்ட வேண்டும் எனல்

3. போதுமான முன்னறிவித்தல் கொடாது மீட்கும் பொழுது

4. குறிப்பிட்ட வருடக் காலத்துக்கான ஈடு

5. பழமரங்களை "ஈடு” வைத்தல்

6. அடிமைகளை ஈடுவைத்தல்

7. மிருகங்களைப் பயன்படுத்தவதற்கான கடன் (மாடு)

8. நகைகள் அடைவு வைத்தல்

 

ஆறாம் பிரிவு

வாடகை பற்றியது

1. உழவுக்கு மாடுகளை வாடகைக்குப் பிடிப்பது பற்றியது.

 

ஏழாம் பிரிவு

கொள்வனவு, விற்பனை பற்றியவை

1. காணி விற்பனவுகள் பற்றியவை

2. ஆடு, மாடு, விற்பனவுகள் பற்றியவை

3. பிள்ளைகள் விற்பனவு பற்றியவை. பிள்ளைகளை அடிமைகளாக (வாரங்களாக ) விற்கும் முறைமையும் மீட்கும் முறைமையுமிருந்தது.

 

எட்டாம் பிரிவு

ஆண், பெண் அடிமைகள் பற்றியது

(1844ம் ஆண்டின் 2ஆம் கட்டளைச்சட்டத்தின் படி அடிமைமுறைநீக்கப்பட்டது. (அடிமைக்கு குடிமைக்குமிடையில் வேறுபாடு காட்டாது 'Slave' என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 1. பல்வேறு தரமும் வகையுமான அடிமைகள் பற்றியது நான்கு சாதிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. (கோவியர், நளவர், பள்ளர். சிவியார்)

2. அடிமை. குடிமைகளின் விவாகம்

3. பிள்ளைகளில்லாது இறக்கும் அடிமை குடிமைகளின் சொத்து பிரிக்கப்படும் முறைமை

4. பிள்ளைகள் இறக்குமிடத்து அவர்களின் சொத்துக்கள் பிரிக்கப்படும் முறைமை

5. விவாகஞ் செய்த அடிமை குடிமைகளின் கடமைகள்

6. அடிமை. குடிமைகளை அவர்களின் கட்டிலிருந்து விடுவித்தல்

7. அவ்வாறு கட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட (இஷ்டம் போன) வர்களின் சொத்துகளுக்கான உரிமை பற்றியவை

 

ஒன்பதாம் பிரிவு

வட்டிக்குக் கடன் கொடுத்தல்

1. குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ள கடன்கள்

2. கடனுக்குக் கொடுக்கப்படும் "பிணைகள் - எந்த அளவுக்குக் கடனுக்கு பொறுப்பு என்பது

3. கணவனின் கடனுக்கு மனைவி பிள்ளைகள் எந்த அளவுக்குப் பொறுப்பாளிகள் ஆவர் என்பது.

4. வட்டி முதலுக்குமேலே போகாதிருத்தல்

5. நெல்லுக்கடன்

6. நெல்கொடுத்து மாறல்

7. கடனுக்காகக் கொடுக்கப்பட வேண்டும் விளை பொருளின் அளவு குறிப்பிடப்படாது கடன் கொடுக்கப் பட்ட விடத்து. (காணியிலிருந்து) பெறப்படும் இலாபத் திலிருந்து கொடுக்கப்பட வேண்டிய விகிதம் பற்றியது.

 

இந்தச் சட்டத்தலைப்புகளை நோக்கும் பொழுதே தேசவழமை என இவ்விதிகள் பதியப்பட்டிருந்த காலத்து யாழ்ப்பாணச் சமூகத்தின்

அ. பொருளாதார அடித்தளம் ( பிரதான பொருளாதார முயற்சி அதன் அமைப்பு அதில் ஈடுபடுவோர் அவர்கள் பெறும் ஊதியம் என்பன) யாது என்பதையும்

 

ஆ. இந்த பொருளாதார அடித்தளத்தைப் பேணும் சமூகக்கட்டமைப்பு (குடும்பம். அக்குடும்பங்கள் உருவாக்கப்படும் முறைமை (விவாகம்) அதற்காள நிபந்தனைகள் அச்சமூகத்தின் பிற நிறுவனங்கள் ஆகியன ) யாவை என்பதையும்,

 

இ. அந்த முறைமைகளின் தொடர்ச்சி எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கின்றது.

 

இந்தச் சட்டங்கள் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றன.

1. குறிப்பிட்ட காலத்தில் இச்சமூகத்தின் பொருளாதாரத் தளமாக அமைந்த உற்பத்தி முறைமைகள்

2. இந்த உற்பத்தி முறைமையின் முறைமைகளின் தொடர்ச்சிக்கு உதவும் அந்தச் சமூகத்தின் தனிமங்கள்

3. இந்த உற்பத்தி முறைமைகளுள் மேலான்மையுடையதாகவிருப்பது

4. இவற்றின் நடைமுறைத் தொழிற்பாட்டுக்கான கருத்துநிலை உந்துதல்கள் (Ideologial motivations).

"சமூக உருவாக்கம்" ( Social Formation) என்னும் கோட்பாடு மேற்கூறிய நான்கு விடயங்கள் பற்றிய தெளிவேயாகும்.

 

"சமூக உருவாக்கம் என்பது சமூக உறவுகளின் பன்முகப்பட்ட கட்டளை வினை சமூகத்தின் பொருளாதார கருத்து நிலை மட்டங்களினதும், சில விடயங்களில் அரசியல் மட்டத்தினதும், ஒழுங்கிணை நிலையைக் குறிப்பதாகும். இந்த ஒருங்கிணை நிலையில் பொருளாதாரத்தின் தொழிற் பாட்டு பங்கு முக்கியமான ஒன்றாகும். மேலாண்மையுடையதாகவுள்ள உற்பத்தி உறவுகளின் நடைமுறை நிலைப்பாடு ஒவ்வொரு மட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான செயல் வன்மை நிலையினையும், ஒன்று மற்றொன்றில் தலையிடுவதற்கான முறைமையையும் வழங்குகின்றது. இதனால், அந்த மேலாண்மையுடைய உற்பத்தி உறவுகள் நிர்ணய சக்தி உடையனவாக அமைகின்றன" (ஹிண்டஸ் ஹேர்ஸ்ற் 1975: 13).

யாழ்ப்பாணத்தின் நிலவுடைமை எத்தகைய அமிசங்களைக் கொண்டிருந்தது என்பது இந்த உருவாக்கத்தின் மூலம் தெளிவாகின்றது. அத்துடன் கொலோனியலிச அமைப்பினுள் பாரம்பரிய நிலவுடைமை எவ்வாறு தொடர முடியும், முடியாது என்பதனையும் நாம் இந்த முறைமையின் தொடர்ச்சி, தொடர்ச்சியின்மையிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்தப் பொருளாதாரம் விவசாயத்தையே பிரதானமாகக் கொண்டிருந்தது. நிலம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இருந்தது. நிலத்தில் "உழைப்போர் அடிமை , குடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உழைப்பு முழுவதும், நிலத்தை உடையவர்களின் "சொத்து" ஆக்கப்பட்டிருந்தது. இந்த உடைமை முறைமையின் இயல்புகள் பற்றி இங்கு ஆராயமுடியாது. ஆனால் அத்தகைய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஆயின், யாழ்ப்பாணவரலாறு பற்றி நம்மிடையே இன்று நிலவும் பார்வைகள் இத்தகைய ஆய்வுகளுக்கு இடம் கொடுப்பதில்லை.

மேலே பார்த்த அமைப்பானது இன்று எத்துணை மாறியுள்ளது என்பதனையும், இன்னும் மாறாமல் இருப்பவை யாவை என்பதையும் நாம் குறித்துக் கொள்ளல் வேண்டும். அடிமை குடிமை முறைமை இன்று இல்லை. ஆனால் அந்த முறைமை வழி வந்த ஒடுக்கு முறைகள் யாவும் அழிந்து விட்டனவெனக்கூறுதல் முடியாது. அதே போன்று இன்று "ஒற்றி" முதலிய பொருளாதார முறைமைகளின் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் "ஒற்றி வைத்தல்" என்பது சமூக அகௌரவத்தைத் தரும் ஒரு கடன் முறைமையாகும். ஆனால் இன்றே ஒற்றியினால் பெறப்படும் முற்பணத்தை வங்கியிற் போடுவதனால் வரும் லாபம் காரணமாக, ஒற்றிக் கடன்கள், ஏற்புடைமையுள்ள கடன் முறையாகியுள்ளது. (பாலகிருஷ்ணன், 1984). இந்த மாற்றங்களினூடாக யாழ்ப்பாணச் சமுதாயம் என இன்று நாம் கொள்கின்ற "சமூக உருவாக்கத்தின்" தொடக்கம், நிலைபேறு. மாற்றத்தினைக் கண்டு கொள்ளலாம்.

 

யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகள்

தேச வழமைச் சட்டம் ஒரே நேரத்தில் ஒரு சமூகவியற் சான்றாகவும், ஒரு வரலாற்று ஆவணமாகவும் அமையும் தன்மையை அவதானித்தோம். இந்தத் தேச வழமைச் சட்டத்தின் அடிப்படையிலும், இந்த நூற்றாண்டில் எழுதப்பெற்றுள்ள . யாழ்ப்பாணம் பற்றிய மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையிலும் (Plaffenberger, David, Holmes, Banks) யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகளை நோக்குவோம். இந்தச் சமூகம் நிலம் சம்பந்தமாகத் தடைகளெதுவுமற்ற முறையிலே, தனியார் சொத்து முறைமையினை (Systemofprivate property)க் கொண்டு வந்துள்ளது. இத்தனியாள் சொத்துரிமை முறைமை முன்னர் அடிமை குடிமைகளையும் கூட உட்படுத்தி நின்றுள்ளது. படிப்படியாக வந்த மாற்றங்களின் வழியாக அது இன்று "காணியாட்சி" முறைமையிலேயே காணப்படுகின்றது.

 அடுத்து இச்சமூகம். ஒரு சமூக அதிகாரப் படிநிலை முறைமையினை (social hierarchy) உடைய ஒன்றாகும். அதாவது. மேலேயுள்ளது உயர்ந்தது. படிப்படியாகக் கீழே வரும் பொழுது கீழேயுள்ளது தாழ்ந்தது என்ற ஒரு எடுகோள் இங்கு உண்டு.

 இந்தப்படி நிலை சாதியமைப்பை (caste system) அடிப்படையாகக் கொண்டதாகும். சாதி ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது. சாதிகளின் பட்டியலையும், அவற்றின் அதிகாரப்படி நிலைகளையும் பற்றி அறிந்து கொள்வது மாத்திரம் போதாது. இந்தச் சாதிகள் ஒவ்வொன்றும் தத்தம் சமூக உறவுகளில் ஒன்றிணைந்து எவ்வாறு ஒரு சமூக அமைப்பினை (caste as a social system) உருவாக்கியுள்ளன என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். கால மாற்றங்களுக்கேற்ப அமைப்பு மாற்றங்களும் ஏற்பட்டு வந்துள்ளன என்பதை நாம் மனதிருத்திக்கொள்ளல் அவசியமாகும்.

 ஆரம்பத்தில் சாதியே சகல சமூக உறவுகளையும் நிர்ணயிக்கின்ற சக்தியாக விளங்கிய ஒரு நிலையிருந்தது. இப்பொழுதோ விவாகத்திலும், சமூகச் செல்வாக்கு அதிகாரத்திலுமே சாதிமுறைமையின் தொடர்ச்சியைக் காணலாம். விவாகம் என்பது குடும்ப உருவாக்கத்துக்கு (family formation) அச்சாணியாக அமைவதாலும் குடும்பம் எமது சமூகத்தின் மிகமுக்கியமான அலகான படியினாலும் (இது பற்றிச்சற்று பின் நோக்குவோம் ) சாதி இன்னும் அச்சாணியான ஓர் இடத்தையே பெறுகின்றது.

 யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் சில விசேட பண்புகள் உள்ளன (சிவத்தம்பி 1989). முதலாவது இங்கு, தமிழகத்திலுள்ளது போன்று பிராமண மேலாண்மை இல்லை. சடங்காசாரமாக நோக்கும் பொழுது பிராமணர்கள் சைவக்குருக்கள் மார் முதலிலே வைத்துப் பேசப்படும் மரபு உண்டெனினும், உண்மையான சமூக அதிகாரம் வெள்ளாளரிடமேயுண்டு. இந்த வெள்ளாள மேலாண்மை காரணமாக இன்னொரு கருத்து நிலையும் வளர்ந்துள்ளது. வருண அடிப்படையில் வேளாளரும் சூத்திரரே. சூத்திரரே இறுதிக் குழுமத்தினர். இந்த இக்கட்டு நிலையிலிருந்து விடுபடுவதற்காக, இங்கு சூத்திரரை இரு வகையாக வகுத்து நோக்கும் ஒரு முறைமையுண்டு.

 

சற்சூத்திரர் அசற்சூத்திரர்

சற்சூத்திரர் என்போர் உயர்ந்தோர். இந்தக் கொள்கையினை யாழ்ப்பாண மட்டத்தில் மிகவும் வற்புறுத்தியவர் ஆறுமுகநாவலர் ஆவார். (பிரபந்தத்திரட்டு)

மேலும் சற்சூத்திரரின் மேலாண்மைக்கு ஒரு கருத்துநிலை முக்கியத்துவம் வழங்குவதற்காக, வருண தர்மத்திலே பேசப்படாத இன்னொரு குழுமத்தைப்பற்றி (ஐந்தாவது வருணத்தைப்பற்றி) அழுத்திப் பேசவேண்டிய நிலையேற்பட்டது. "பஞ்சமர்” என்னும் கோட்பாடு யாழ்ப்பாணத்திற் சமூக வன்மையுடைய ஒன்றாகும்.

யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பில் தொழிலே (Vocation) பிரதான அடிப்படை யாகின்றது. இதனால் இங்கு சாதி நிலைப்பட்ட தொழிற்பிரிவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் இங்கு அடிநிலையினரின் சமூக மேனிலைப்பாடு என்பது பாரம்பரியத் தொழிலைக் கைவிடுவதிலேயே தங்கியுள்ளது. யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் சாதி முறைமை இரு வகையாகத் தொழிற்படுகின்றது என்று கெனத் டேவிட் கூறுவர்.

 1. கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound caste)

2. கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste)

 வெள்ளாளரை மேலாண்மையுடையோராகக் கொண்டு மற்றைய சாதியினரின் இடம், பங்கு. பணியினை ஆராய முற்படும் பொழுது இம் மரபு காணப்படுவது இயல்பே. முன்னர் அடிமைகுடிமை மரபினராகக் கொள்ளப்பட்டவர்கள் கட்டுப்பாட்டுக்குள் (Bound Mode) வருவதாகவும் பொருளாதார சீவியத்தில் வெள்ளாள மேலாண்மைக்குள் நேரடியாக வராதவர்கள் கட்டுப்பாடற்ற முறைமைக்குள் (Unbound mode) வருவதாகவும் அவர் கூறுவார். கெனத் டேவிட் இந்த அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளை அவற்றின் சமூக உறவின் அடிப்படையில் பின்வருமாறு வகுப்பர்.

 

கட்டுப்பாட்டு முறைமைக்குள் வருவோர்

குருக்கள்மாரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்ட சாதியினரும் பிராமணர், சைவக்குருக்கள், வெள்ளாளர், கோவியர், வண்ணார். அம்பட்டர். பள்ளர். நளவர். பறையர், துரும்பர்.

 

கட்டுப்பாட்டு முறைமைக்குள் வராதவர்கள்

வணிகர்கள். உள்ளூர்க் கைவினையாளர். சைவசெட்டி. ஆசாரி . தட்டார். கைக்குளர். சேணியர். முக்கியர், திமிலர்.

கலப்பு முறைமை - பிரதானமாகக் கட்டுப்பாடு உடையது

பண்டாரம், நட்டுவர் (இசை வேளாளர்)

கலப்பு முறைமை - பிரதானமாகக் கட்டுப்பாடற்றது.

கரையார். தச்சர், கொல்லர். குயவர்.

 

கட்டுப்பாட்டு மரபு பற்றிப் பேசும் பொழுது யாழ்ப்பாணச் சாதியமைப்பில், வரலாற்றுப்பின்புலத்தில் காணப்படும் ஒரு முக்கிய உண்மையைப் பதிவு செய்தல் வேண்டும். அதாவது இங்கு . முன்னர் கட்டுப்பாடு உள்ளவர்களாக இருந்த பல குழுமத்தினர் தங்களைத் தாங்களே தமது சமூகத்தளைகளிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளனர். இது 1844 க்கு முன்னர் நடைபெற்றதாகும். அத்தகையோரை "இட்டம் போன" (இஷ்டம் போன) வர்கள் என்று குறிப்பிடும் மரபு உண்டு. ஒல்லாந்தர் காலத்திலிருந்தே இந்தப் பண்பினை நாம் காணலாம் (Zwaadracoon).

 யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் இன்னொரு பிரதான அமிசம், வன்மையான (சிலவேளைகளில் கூர்மைப்பட்ட) பிரதேசவாதமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதி என்ற பாரம்பரிய செல்வாக்கு வட்டங்கள் உண்டு. இந்தப்பிரதேசப் பாரம்பரிய உணர்வு சாதி முறைமையையும் ஊடறுத்துச் செல்வதுண்டு. உதாரணமாகத் தீவுப்பகுதியில் பஞ்சமர் தம்மை வடமராட்சிப் பகுதிப் பஞ்சமரிலும் பார்க்க அந்தஸ்து நிலை கூடியோராக நோக்குவது வழக்கம்.

 யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் இன்னொரு முக்கிய அமிசம் இங்கு நிலவும் குடும்ப ஒருங்கு நிலையாகும். இச்சமூகத்தின் இறுதி அலகு குடும்பமேயாகும். தனிமனிதரன்று. மனிதர்கள் குடும்ப அங்கத்தவர்களாக இயங்கும் முறைமையுண்டே தவிர அவர்கள் மேற்குலகிற் கொள்ளப்படுவது போன்று "தனி” மனிதர்களாகக் (Individual) கொள்ளப்படுவதில்லை . "Individual" என்னும் மூலக்கருத்துப்படி நோக்கினால் (in+dividual அதற்கு மேல் பிரிக்கப்படமுடியாதது) அந்தப் பிரிக்கப்பட முடியாத அலகு "குடும்பமே" யாகும். குடும்பம் எனும் பொழுது முன்னர் விஸ்தரிக்கப்பட்ட (Extended Family) கருத்திற் கொள்ளப்பட்டது. (சிறியதாய் பெரியதாய், பிள்ளைகள், மாமன் மாமி பிள்ளைகள். சிறியதகப்பன் பெரிய தகப்பன் பிள்ளைகள் ) ஆனால் இப்பொழுது ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் வளர்ந்தவர்களாகும் நிலைவரை (அதாவது விவாகத்தின் பின்னரும் சில காலங்களுக்கு) ஒரு குடும்பமாகவே காணப்படும் ஒரு நிலைமையுண்டு.

 இந்தக் குடும்ப உணர்வு காரணமாக விவாகம் (கலியாணம்) மிகமுக்கியமானதாகின்றது. ஏனெனில் கலியாணம், முன்னர் கூறியது போன்று. குடும்ப உருவாக்கத்துக்கான மையப்புள்ளியாகும். தங்கள் பிள்ளைகள், சகோதரர்களின் குடும்ப மாக வருபவர்கள் நல்ல “குடும்பமாக இருத்தல் வேண்டுமென்ற கருத்துக் காணப்படுவது இயல்பே. இதனால் சாதியும் சாதியின் கூறாகிய "பகுதியும் முக்கியமாகின்றன. காதற்கலியாணம் தவிர்க்கப்படமுடியாத நிலையிலே தான் செய்யப்படும். அப்படிக் காதல் கலியாணம் செய்யுமிடத்திலும், புதுத்தம்பதியினர் ஏதோ ஒரு குடும்பத்தினரிடையேயே அந்நியோந்நியமாக பழகும் நிலமை ஏற்படும். இந்தக் குடும்ப இணைவுநிலை அண்மைக்காலத்தில் புலப்பெயர்வு நடைமுறையிலும் காணப்படுகின்றது. பிரான்ஸ், நோர்வே, கனடா, போன்ற நாடுகளுக்கு முதன் முதலிற் புலம் பெயர்ந்து சென்றவர்கள், அவ்விடங்களிலிருந்து கொண்டு தத்தம் குடும்பத்தினரையும், பின்னர் பிரதேசத்தினரையுமே அழைத்துக் கொண்டனர். இதனால் நோர்வேயில் தீவுப்பகுதி, அரியாலை முதனிலைப்பாட்டையும், பிரான்சில் வடமராட்சி முதனிலைப்பாட்டையும் அவதானிக்கலாம்.

 யாழ்ப்பாணச்சமூகம் படி நிலைப்பட்ட ஒன்றாக அமைந்திருந்ததால், அச்சமூகத்தினரின் வாழிட அமைவில், பிரதேச - குழும/உறவினர் இணைவினைக் காணக்கூடியதாக விருந்தது. அதாவது ஒரு கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்குமான ஏறத்தாழ வரையறுக்கப்பட்ட வாழிடப்பகுதிகளும், அதன்மேல், சாதிக்குள் ஒவ்வொரு உறவினர் குழாமும் - ஒவ்வொரு பகுதியினரும் பிரதானமாக வாழும் பகுதிகளும் அமைந்தன. இந்தப் பிரதேச / உறவினர் குழுமத்துக்கான ஓர் அடிப்படைப் பொருளாதாரக் காரணியும் உண்டு. குடும்ப குழுமத்தினரின் காணிகள் ஒரு இடத்திலேயே செறிந்திருக்கும். மேலும் தொழிலுக்கான பரஸ்பர உதவியும் ஒரு காரணமாகும். குறிப்பாகத் தோட்டக் காணிகளைப் பொறுத்த வரையில் இந்த நிலைப்பாட்டின் தொழிற்பாட்டைக் காணலாம். தமிழகக் கிராம அமைப்பிலும் உறவுக்குழும ஒருங்கு நிலையினைக் காணலாம். ஆனால் அங்கு . அக்ரகாரம் கோயில் என்பனவே பிரதான இடம் பெறும்.

 

வரலாற்றுப் பின்புலத்தில் இச்சமூக உருவாக்க, சமூகப் பேணல் சமூக அசைவியக்க நடவடிக்கைகள் பற்றிய ஓர் கண்ணோட்டம்.

யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக்கத்தினுள் நிற்கும் சமூக அதிகார மையம் யாது என்பது சுவாரசியமான ஒரு வினாவாகும். ஏனெனில் இப்பகுதி ஒரு குறிப்பிட்ட ஒரு சமூக உருவாக்கத்தைக் கொண்டிருந்தது மாத்திரமல்லாமல், இங்கு ஒரு வகையான "அரச உருவாக்கமும்" (State formation ) நிகழ்ந்தேறியுள்ளது. யாழ்ப்பாண இராச்சியம்" (Kingdom of Jaffna) என வரலாற்று ஆசிரியராற் போற்றப்படும் அரச அமைப்பு. 14ஆம் நூற்றாண்டு முதல் 1619 இல் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படும் வரை நிலவியது. இந்த அரசியலமைப்பின் தோற்றம் யாழ்ப்பாணத்தினை அதன் சமூகத்தனித்துவங்களுடன் பேணுவதற்குப் பெரிதும் உதவிற்று எனலாம். ஆயினும் இந்த அரச அமைப்பு எந்த அளவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகாரத்தினைக் கொண்டிருந்தது இன்னும் ஆராயப்படாத ஒரு விடயமாகும்.

யாழ்ப்பாணத்தின் சனவேற்றம் பற்றி (Peopling of Jaffna) யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வரலாற்று மூலங்களான "கைலாயமாலை". "யாழ்ப்பாண வைபவ மாலை" ஆகியவற்றை நோக்கும் பொழுது. அந்நூல்கள் யாழ்ப்பாணத்தில் அரசோச்சிய அரசருக்குக் கொடுக்கின்ற அளவு முக்கியத்துவத்தை யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியேற்றப்பட்ட முதலிமாருக்குக் கொடுப்பதை எவரும் அவதானிக்கத் தவற முடியாது. யாழ்ப்பாணத்தின் இலக்கிய உருவாக்கத்தை (Literary Formation) அவதானிக்கும் பொழுதும், இவ்வுண்மை வலுப்பெறுகின்றது. "கரவை வேலன் கோவை "தண்டிகைக்கனகராயன் பள்ளு முதலிய நூல்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன. மேலும் நமது வரலாற்றுச் சமூகவியலை நோக்கும் பொழுது. யாழ்ப்பாணத்தின் சனக்கண்ணோட்ட நிலையில், யாழ்ப்பாண மன்னர்களிலும் பார்க்க அவ்வப்பிரதேச முதலிமாரே முக்கிய இடம் பெறுவதை அவதானிக்கலாம். கண்டி மன்னன் சம்பந்தமாக சிங்கள மக்களிடையே நிலவி வந்துள்ள வரலாற்றுப்பிரக்ஞை யாழ்ப்பாண அரசர்கள் பற்றி யாழ்ப்பாண மக்களிடையே நிலவிவரவில்லை .

இதற்குக் காரணம் பிரதேச முதலிகளின் நிலவுடைமை முக்கியத்துவமேயாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வம் முதலிகளின் குடும்பத்தை மையமாகக் கொண்டு அங்கு நிலவிய சமூகக் கட்டமைப்பு ஒழுங்கமைக்கப் பெற்றிருந்தது. யாழ்பாணத்து வரலாற்று மூலகங்களும் இந்த நிலவுடைமை மேலாண்மையையே வற்புறுத்துகின்றன எனலாம். தமிழ்த் தேசிய வாதத்தின் எழுச்சியுடன் தமிழர்களுக்கு இங்கு ஆட்சியுரிமை வழங்கப்பட வேண்டுமென்னும் அரசியற் கோஷமெழுந்த பின்னர் தான் யாழ்ப்பாண அரசு பற்றிய வரலாற்றியல் ஆர்வம் அதிகரிக்கின்றது. 1957 இல் வெளிவந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சங்கிலி நாடகமும், அதற்கு முன்னுரையாக வந்த "இலங்கை வாழ் தமிழர் வரலாறு எனும் கட்டுரையும் இத்துறையில் மிக முக்கியமானவையாகும். அதற்கு முன்னர்வந்த நூல்களில் பெரும்பாலும் இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கிருந்த இடமே அழுத்தம் பெறுகின்றது.

மேற்கூறிய வரலாற்று மூலநூல்களை இக்கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது. உண்மையில் இந்நூல்கள் யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் உயர்மட்டச் சமூகக் குழுமத்தினரின் மேலாண்மையை அங்கீகாரப்படுத்துவதற்கான இலக்கிய முயற்சிகள் என்றே கொள்ளப்படல் வேண்டும். இந்த நூல்கள் இந்த மேலாண்மையை இவ்வாறு நிலைநாட்ட, இன்னொரு மட்டத்தின் பல்வேறு சாதிக்குழுமங்கள் தங்கள் தங்கள் சாதிப்பெருமைகளைத் தமது சாதி வரலாறுகளில் பதித்து வைத்துள்ளனவெனக் கூறலாம். அத்தகைய ஒரு சாதி வரலாற்று நூலே அண்மையில் வெளிவந்த "விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு ஆகும். சாதி வரலாறுகள் பல இன்னும் வாய்மொழியாகவே கையளிக்கப்படுகின்றன.

எந்த ஒரு சமூக உருவாக்கத்திலும் அதன் மேல்நிலையிலுள்ளவர்கள் தங்கள் மேலாண்மையை நியாயப்படுத்தவும் அறவலியுடையதாகக் காட்டவும் முக்கியமாக அதைப்பேணவும் முனைதல் இயல்பே. இப்பண்பு தமிழில் சங்க இலக்கியத் தொகுப்பு முதல் தொழிற்பட்டு வருவதை நாம் அறிவோம். அத்தகைய ஓர் அதிகாரப் பேணுகை முறைமை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு தொழிற்பட்டுவந்தள்ளது என்பதை அடுத்து நோக்குவோம்.

யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலம் முதல், இச்சமூக உருவாக்கத்திலிடம் பெற்று வந்துள்ள முதலிமார் குடும்பங்கள் தாங்கள் அதிகாரத்துடனும் செல்வாக்குடனுமிருந்து வந்த பிரதேசங்களில் தங்களுக்கு மேலேயுள்ள அதிகார சக்தி மாறிய விடத்தும் தங்கள் அதிகார செல்வாக்கு நிலமைகளைப் பேண முயன்றே வந்துள்ளனர். இந்தப் பேணுகை முயற்சிகளைத்தாம். தனித்தும் ஒருமித்தும், காலத்துக்கு காலம் மேற்கிளம்பும் சமூகக்குழுழங்களுடன் இணைத்தும் பேணி வந்தள்ளனர்.

 

வந்த பிரதேசங்களங்கள் தாங்கள் அதாக்கத்திலிடம் இந்தச் சமூக அதிகார பேணுகையை அவர்கள் முகக்கட்டுப்பாடு (SocialControl) மூலம் நடத்தி வந்தனர். இந்த சமூகக் கட்டுப்பாடு தனியே அதிகாரபலத்தின் மூலம் நிலைநிறுத்தப்படுவதில்லை. அந்த வட்டத்தினுள் இயங்கும் சகல நிறுவனங்களும் அதற்குப்பயன் படும் என்பது கிராம்சி (Gramsci) வலியுறுத்தியுள்ள உண்மையாகும். அத்தகைய ஒரு பயன்பாட்டுக்குக் கோயில்கள் பெரிதும் உதவின. சிவத்தம்பி 1990). இது பற்றிச் சற்றுப்பின்னர் விரிவாகப்பார்ப்போம். இங்கு யாழ்ப்பாணத்தின் மேலாண்மைச் சக்திகள், சமூக அதிகார மட்டத்தில் தங்கள் ஆட்சியினை எவ்வாறு பேணிவந்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

 

யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சியின் பொழுதே. இம்முதலிமார்கள் யாழ்ப்பாண அரசின் இறுதி அரசனின் வீழ்ச்சியிற் கணிசமான பங்கேற்றிருந்தனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே. யாழ்ப்பாணம் குடியேற்ற நாட்டாட்சி முறைக்கு (கொலோனியலிச முறைமைக்கு.) வந்ததன் பின்னர், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த அதிகார பேணுகைக்கான முயற்சி நடைபெற்றேவந்துள்ளது. ஒரு புறத்தில் தமக்கு மேலேயுள்ள அதிகாரத்தினருடன் இணைந்து நின்று கொண்டு மறுபுறத்தில் தமது ஆதிக்கத்தளத்தில், தம்மையறியாது அல்லது தம் வழியாகச் செல்லாது. எந்த ஒரு ஊடுருவலோ உள்ளீடோ ஏற்படுவதற்கு இடமளிக்காது தமது அதிகாரத்தளத்தை மேலாண்மையாளர் பேணிவந்துள்ளனர்.

போர்த்துக்கேய ஆட்சியின் பொழுது முதலிமாரின் உள்ளூர்ச் செல்வாக்கு போர்த்துக்கேய ஆட்சியின் வன்மைக்குத் தடையாகவிருந்த முறைமை பற்றி அபேசிங்க எடுத்துக் கூறியுள்ளார் (அபேசிங்க, 1988. 24). ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இது ஒரு நிர்வாகப் பிரச்சனையாகவே வளர்ந்திருந்தது என்பது சுவாட்றக்கூன் (Zwardra coon) என்னும் பொறுப்பதிகாரி 1697 இல் விட்டுச் சென்றுள்ள நினைவுக்குறிப்பின் படி மேலாண்மையிலுள்ள சாதியினர், மற்றைய சாதியினரை ஒடுக்குகின்றனர் என்றும், ஏழைமக்களைத் துன்புறுத்தி அல்லற் படுத்துகின்றனர் என்றும், அம்மக்கள் ஒல்லாந்த ஆட்சிக்கு இக்குறைபாட்டைத் தெரிவிப்பதைத் தடுக்கின்றனர் என்றும் கூறுகின்றார். (பக். 25). இதன் காரணமாகச் செல்வாக்குள்ள பதவிகளை வெள்ளாளருக்கு மாத்திரமல்லாது அவர்களுக்குச் சமமான மற்றச் சாதியினருக்குக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய நியமனங்களினால் நிர்வாகப்பிரச்சினைகள் வரக்கூடுமென்றும் கூறுகின்றார்.

 

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்த அதிகாரப்பேணுகை நடந்ததற்கான பல உதாரணங்கள் உள்ளன. ஆங்கிலேயர் நிறுவிய நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்ற மேலாண்மையினர். அந்தப் பதவிகளின் அதிகார வலிமை கொண்டே, பாரம்பரியமாகத் தமக்குக் கீழ்ப்படக் கிடந்தோரை அடக்கி வந்துள்ளனர். ஆங்கில ஆட்சியின் கீழ் ஏற்பட்டு வந்த கல்வி, பண்பாட்டு மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ஆறுமுகநாவலர். ஆங்கிலேய ஆட்சியினரால் ஏற்பட்ட கருத்துநிலை ஆபத்துக்களுக்கெதிரான ஒரு கொள்கையையே வகுத்து விடுகின்றார்.

 

"(நாவலரின் ) கோரிக்கை ஆங்கிலக் கல்வி காரணமாகச் சைவசமய வாழ்க்கைப் பாரம்பரியத்திலிருந்து யாழ்ப்பாணமக்கள் பிழைக்கக்கூடாது என்ப துதான் .......................

..................... அவற்றுக்கான பதிலைத் தேட முனைவதற்கு முன்னர், நாவலர் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக்கொண்டார் என்பதும், பிரித்தானிய வழிவந்த சமூக மாற்றங்களை - அவை மேற்குறிப்பிட்ட அறநெறி ஒழுக்கத் தாக்கங்களை ஏற்படுத்தாதுவிடின் - அவர் அவற்றை ஏற்கத் தயங்கவில்லை என்பதும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றன. சமூகவியற் பரிபாசையிற் கூறுவதானால் அவர் நவீனமயப்படுத்தலை எதிர்க்கவில்லை . ஆனால் நவீனமயவாக்கம் (Modernization) பாரம்பரியத்தை உடைப்பதாக இருத்தல் கூடாது என்று கருதினார் என்பது தெரிய வருகின்றது" (சிவத்தம்பி 1979).

 நாவலருக்குப் பாரம்பரியப் பேணுகை என்பது பாரம்பரியச் சமூக அமைப்பைப் பேணுவதாகவே இருந்தது என்பது அவர் எழுத்துக்களின் வழியாக நன்கு புலப்படுகின்றது. நாவலரின் கல்விக்கொள்கையும் அமைப்பும் கல்வியைக் குறிப்பிட்ட ஒரு சமூக வட்டத்துக்கு அப்பாலே கொண்டு செல்ல விடவில்லை. இவை யாவற்றினுமுடே நாவலரிடமிருந்து அறநிலைப்பட்ட ஓர் எண்ணத் துணிபு (conviction) இருந்தது. நாவலருக்குப் பின்வந்த காலத்தில், இந்தப் பேணுகை முறைமையானது அதிகாரப்பரவலைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகவிருந்தது.

 சேர் பொன்னம்பலம் இராமநாதன் சம்பந்தப்பட்ட மூன்று நடவடிக்கைகளை உதாரணத்துக்கு எடுத்துக்கூறலாம். 1920 - 30 களில் பாடசாலைகளில் சாதியமைப்பை ஊறு செய்யும் வகையில், பள்ளிப்பிள்ளைகளுக்குச் சமாசனம், சமபோசனம் வழங்கப்படுவதற்கு எதிரான இயக்கம் இருந்தது. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்க்கப்பட்ட வெள்ளாளரல்லாத மாணவர்களுடன், வெள்ளாள மாணவர்களுக்கு சமபோசனம் வழங்குவதை எதிர்த்து 1930 இல், சேர். பொன். இராமநாதன் தேசாதிபதியைச் சந்தித்தார். ( ஜேன்சல்: 11 ).

 தேசவழமைப்படி உயர்ந்த சாதியினரின் இறுதிக்கிரியை முறைகளுக்குப் பாத்தியதையற்ற சாதியைச் சேர்ந்த ஒருவர், தமது மனைவியின் இறுதி ஊர்வலத்தைப் பறை முதலியவற்றுடன் கொண்டு சென்று, சடலத்தை எரிக்க முற்பட்ட பொழுது, அதனை எதிர்த்தவர்கள் "சட்டவிரோதமற்ற வகையில் எதிர்த்தனர் என அவர்களுக்கெதிராகப் போடப்பெற்ற வழக்கில் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். வழக்கு மேன்முறையீட்டுக்குச் சென்ற பொழுது இராமநாதன் எதிரிகள் தேசவழமைப்படி அந்த மரண ஊர்வலத்தை நிறுத்த உரிமையுடையவர் என்று வாதிட்டார் என்று தேசவழமை பற்றி நூல் எழுதியுள்ள சிறிராம்நாதன் எடுத்துக்கூறியுள்ளார். (பக் 19) (இராணி எதிர் அம்பலவாணர் வழக்கு)..

 

சர்வஜனவாக்குரிமை வழங்கப்படக்கூடாது என இராமநாதன் கருதினார்.

"இராமநாதனும் மற்றும் பல பழமைபேண் வாதிகளும் (செல்லத்துரை, சிறிபத்மநாதன், ஆர். தம்பிமுத்து இதற்கு புறநடையானவர்கள்) வெள்ளாளரல்லாத சாதியினருக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது கும்பலாட்சி (Mob - rule ) க்கு இடம் கொடுக்கும் ஒரு பாரிய பிழையென்று நம்பினர். வாதிட்டனர். சிறப்பாக இராமநாதனோ, அவ்வாறு வாக்குரிமை வழங்குவது இந்து வாழ்க்கை முறைக்குப் பழிகேடு விளைவிப்பது என்று கருதினார்". (ஜேன்ற சல் 16)

 இத்தகைய அதிகாரப் பேணுகை முறைமை நடந்த அதேவேளையில், அந்த அதிகாரப் பேணுகையை எதிர்த்துச் சமூக சமத்துவக்கருத்துக்களை ஆதரித்தவர்களும் யாழ்ப்பாணத்திலே இருந்து வந்துள்ளனர். கல்வி வசதி விஸ்தரிப்பில், இந்து போட் தலைவர் இராசரத்தினத்தின் பங்கு மிகக் கணிசமானதாகும். யாழ்ப்பாணத்தில் தோன்றிய வாலிப காங்கிரஸ், சமத்துவ அடிப்படையிலான ஒரு சமூக மாற்றத்தக்குப் போராடியது. (கதிர்காமர் - 1980).இந்த இருகிளைப்பாடு (பழைமை பேண்வாதமும். மாற்றத்துக்கான ஆதரவும்) யாழ்ப்பானச் சமூகத்தின் கருத்து நிலைத்தளத்திலும் ( Ideological bases ) நன்கு தெரிகின்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களிலும் சமூக மாற்ற நடைமுறைகள் காணப்படுவதை நிர்வாக ஏடுகள் குறிப்பிடுகின்றன. (கவாட்றக்க்ஷன். 29 ). யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பின் இயல்பும் (சூத்திர மேலாண்மை) தென் இந்தியா மட்டக்களப்புச் சமூகத்தினிலே காணப்படுவது போன்ற நன்கு வேருன்றிய ஒரு நிலவுடைமை இல்லாமையும் இந்த அசைவியக்கத்துக்கு இடம் கொடுத்தன எனச் சிந்திக்க இடமுண்டு.

அடுத்து யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் கருத்துநிலை அடிப்படைகளை நோக்குவோம்.

 

IV

இச்சமூக அமைப்பின் பண்பாடும் கருத்து நிலையும்

யாழ்ப்பாணச் சமூக முறைமையின் இயல்புகள் தன்மைகள் பற்றி ஆராயும் நாம், அச்சமூகமுறைமையின் தொடர்ச்சிக்கான காரணிகள் பற்றிச் சிந்திக்க வேண்டுவது அவசியமாகும்.

ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அந்தத் தனித்துவத்தின் சிறப்புக்கள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும். அதாவது "யாழ்ப்பாணச் சமூகம்" என்பதன் தொடர்ச்சி. அந்தச் சமூகத்தின் பண்பாடு பற்றிய பிரக்ஞையினதும், அப்பண்பாட்டின் பெறுமானங்களாகக் கொள்ளப்படுவன பற்றிய பிரக்ஞையினதும் வலிமையிலேயே தங்கியுள்ளது.

இத்தகைய ஒரு சிந்தனை நம்மைக் கருத்துநிலை (Ideology) பற்றியும் பண்பாடு (Culture) பற்றியும் இவ்விரண்டுக்குமுள்ள உறவு பற்றியும், எண்ணக்கரு மட்டத்திலும், பிண்டப்பிரமாணமாக யாழ்ப்பாண மட்டத்திலும் வைத்து விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேவையை ஏற்படுத்துகின்றது. (சிவத்தம்பி : 1984). கருத்து நிலை என்பது பற்றிய பின்வரும் விளக்கத்தினை நோக்குவோம். "சமூக ஊடாட்டம் வளரத் தொடங்க (அந்த ஊடாட்டத்தில் ஈடுபடும்) மனிதர்கள், உலகம் பற்றியும், தமது சொந்த சமூக வாழ்க்கை பற்றியும், தெய்வம் பற்றியும் சொத்து, அறம், நீதி ஆகியன பற்றியும் பொதுவான எண்ணக்கருக்களையும் நோக்குக்களையும் உண்டாக்கிக் கொள்கின்றனர். இத்தகைய சிந்தனை வழியாக, சமூகம்பற்றியும், அரசியல், சட்டம், சமயம், கலை, தத்துவம் பற்றியும் கருத்துப்பிரமாணமான நோக்கு வளரத் தொடங்குகின்றது. அந்தச் சிந்தனை நோக்கே கருத்துநிலை எனப்படும்” (ஜேம்ஸ் கிளக்மன்).

மார்க்ஸியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்திய அல்தூஸர் கருத்துநிலை என்பது (தனக்குரிய தர்க்கப்பாட்டினையும் இறுக்கத்தையும் கொண்ட) ஓர் அமைப்பு முறையாகும். இந்த அமைப்பு (System) சில குறியீடுகளைக் கொண்டது (படிமங்கள். ஐதீகங்கள், கருத்துக்கள், எண்ணக்கருத்துக்கள் என தேவைக்கும் இடத்துக்கும் ஏற்பவருவன) இதற்குக் குறிப்பிட்ட அந்தச் சமூகத்திலே வரலாற்று நிலைப்பட்ட ஓர் இருப்பும் (Existence) ஒரு கடமைப்பங்கும் உண்டு. சமூகங்களின் வரலாற்றுச் சீவியத்துக்கு இந்தக் கட்டமைப்பு அவசியமானதாகும்." என்று கூறுவர். மேலும் எந்த ஒரு சமூகத்திலும் மனிதர்கள். தங்கள் சீவியத்தின் தேவைகளுக்கியையத் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கும். மாற்றிக்கொள்வதற்கும் கருத்துநிலையானது (அது வெகுசனகுறியீடுகளின் ஓர் அமைப்பு என்ற முறையில்) முக்கியமானது என அவர் கூறுவர்.

"பண்பாடு” (culture) என்பது மனித சமூகத்தின் குறியீட்டு அமிசங்கள் பற்றியதும். அச்சமூகம் கற்றறிந்து கொள்ளும் அமிசங்கள் பற்றியதுமாகும். கருத்துநிலை என்பது (இதனால்) பண்பாட்டினுள்ளிருந்து மேற்கிளம்புவதாகவேயிருக்கும். அதாவது எந்த ஒரு கருத்து நிலையும், தனது பண்பாட்டினை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கும். ஆனால் ஒன்று. அவ்வாறு எடுத்துக் காட்டும் கருத்து நிலையானது. அப்பண்பாட்டினுள் இடம்பெறும் சகல நடைமுறைகளையும் ஒருங்கு திரட்டிப் பிரதிபலிக்காது. அந்தப் பண்பாட்டினுள் மேலாதிக்கம் செலுத்தும் குழுமத்தினது கருத்துக்களின் பிரிவு ஆகவே இருக்கும். எனவே ஒரு சமூகத்தின் கருத்துநிலை என்பது அச்சமூகத்தின் பிரதான சக்திகளினை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கும்.

 இவ்வேளையில் நாம் இன்னுமொரு விடயத்தையும் மனத்திருத்திக்கொள்ளல் வேண்டும். இந்தக் கருத்துநிலையினில், சமூக மேலாண்மையுள்ள சக்திகளின் மேலாதிக்கம் (Hegemony) காணப்படும். அதாவது அந்தச் சமூகத்திலுள்ள மேலாதிக்கமான சிந்தனைப் போக்குக்கு அங்கீகாரம் வழங்குவதாக இந்தக் கருத்துநிலை அமையும். அன்ரோனியோ கிறாம்ஸ்சியின் இந்த மேலாண்மைக் கொள்கை மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பிட்ட சமூகத்தின் மேலாண்மைக்குழு தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி அதனை இயல்பான, ஏற்புடைமையுள்ள ஒன்றாக ஆக்குவதற்குப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தும் பாடசாலைகள் ஆலயங்கள், புதினப்பத்திரிகைகள், கட்சிகள் எனப்பல இப்பணிக்குப் பயன்படும்.

 இந்த அடிப்படையிலே பார்க்கும் பொழுது. யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கருத்து நிலை யாது என்று இனங்காணுவதும் இந்தக் கருத்து நிலை எவ்வாறு அந்தச் சமூகத்தின் பிரதான மேலாதிக்கச் சக்திகளின் தேவையாக அமைகின்றது என்பதையும், அதன் கருவியாகப் பயன்படுகின்றதென்பதையும் கண்டறிந்து கொள்ளல் அவசியமாகும்.

 யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கருத்துநிலையானது அந்தச் சமூகத்தின் அதிகாரப்படி நிலைத்தன்மையை (Hierarchical character) நியாயப்படுத்துவதாக அமைவது அவசியமாகும். அதிகாரப்படி நிலை" என்பது மதஞ்சார்ந்த ஒரு கருத்தாகும். அந்த அளவில், அந்த அதிகாரப்படி நிலையை எற்றுக்கொள்ளும் மதம் முக்கிய இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது. இவ்வாறு சிந்திக்கும் பொழுது. யாழ்ப்பாணத்தின் ஒரு குறிப்பிட்ட மட்ட சமூக அங்கீகாரத்துடனும் எடுத்துப் பேசப்பெறும் "சைவமும் தமிழும்" என்ற கருத்து நிலை முக்கியத்துவம் பெறுகின்றது.

 அதேவேளையில், யாழ்ப்பாணச் சமூகத்தின் அசைவியக்கத்தினைச்சுட்டுவதும் "சைவமும் தமிழும்" என்ற கருத்து நிலைப்பாட்டின் மறுபுறத்தைக்காட்டுவதாகவும் உள்ள ஒரு கருத்து நிலையும் ஒன்றுண்டு. அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசினால் முனைப்புற எடுத்துக்கூறப்பட்டதான தராண்மைவாதச் சீர்திருத்த கோட்பாடாகும். இந்த இரண்டு கருத்து நிலைகளும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும். ஆனால் இவை யாழ்ப்பாணச் சமூகப்பிரக்ஞையின் இருவேறு பிரக்ஞை மட்டங்களைக் ( Levels of Conssiousness) குறிப்பவையாகவும் கொள்ளப்படலாம்.

 சைவத்தமிழ்க்கருத்துநிலை என்பது. யாழ்ப்பாணத்தின் பிரதான மதமரபினையும் மொழிப்பண்பாட்டையும் இணைத்து நோக்குகின்ற ஓர் "உலக நோக்காகும். இதன் படிக்குச் சைவமும் தமிழும் ஒன்றிலிருந்து மற்றது நீக்கப்படமுடியாததாய், ஒன்று மற்றதில்லாமல் பூரணத்துவம் அடைய முடியாததாய் இருக்கும் ஒரு மதபண்பாட்டு இணைவு நிலையாகும். இந்த நோக்கு சைவத்தினதும், தமிழினதும் முழு வரலாற்றையும் உள்ளடக்கியதாகும். இந்நோக்கின் உள்ளர்த்தங்கள் மிக ஆழமானவை.

 இதன்படிக்குத் தமிழ் மனிதன். அவன் மொழி. அதன் பண்பாடு ஆகியவற்றின் உருவாக்கத்தில் வேறு எந்த மதத்துக்கும் இடமில்லை எனும் எண்ணத்துணிபு முன்வைக்கப்படுகின்றது. சமணம், ஆசீவகம். பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் தமிழ்சார்பங்களிப்புக்களை இக்கருத்துநிலை முற்றுமுழுதாக மறுதலிக்கின்றது. ( இந்த உட்கிடக்கையைர் "பல்வேறு மதத்தினரின் தமிழ்த் தொண்டு" எனப்பெறும் கருது கோளிலே காணலாம். இதன்படிக்குச் சமணம், கிறிஸ்தவம். இஸ்லாம் ஆகியன தமிழக்கு ஆற்றிய தொண்டு பற்றிப் பேசலாம். "சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு" என்று பேசப்படுவதில்லை).

"சைவமும் தமிழும்" என்ற இக்கருத்துநிலை, வைணவத்தைத்தானும் உள்வாங்குவது என்று கூற முடியாது. அத்துடன் யாழ்ப்பாணத்து மக்களின் அன்றாட மதவாழ்க்கையிற் காணப்பெறும். சாஸ்திர அங்கீகாரமற்ற வழிபாட்டு முறைமைகளாவன குளுத்தி, மடை, போன்றவற்றையும் மறுதலிப்பதாகவேயுள்ளது.

 இக்கருத்துநிலை, சைவசித்தாந்தத்தினையே தமிழர் வாழ்க்கையின் மெய்யியல் தளமாகக் கொள்கின்றது. இங்கு பேசப் பெறும் சைவம், காஸ்மீர சைவம், வீரசைவம் ஆகியனவற்றைக் குறிப்பிடாது. தேவார திருவாசகங்களிலும் பண்டார சாஸ்திரங்களிலும் எடுத்துக் கூறப்படும் சைவத்தினையே உண்மையான சைவம் எனக் கொள்வதாகும். இந்தக் கருத்துநிலையினை. இது இன்று எடுத்து பேசப்பெறும் நிலையில், உருவாக்கியவர் ஆறுமுகநாவலர் (1822 - 1879 ) அவர்களாவார். அவர் இதனை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலிலேயே உருவாக்கினார் என்பது எமக்குத் தெரிந்ததே, கிறிஸ்தவத் தேவஊழியப்பணியினரின் செயற்பாடுகளினால், யாழ்ப்பாணச் சமூகத்தின் உயர் மட்டத்தினர் மதம் மாறும் நிலையை எதிர்ப்பதற்காக அவர் இக்கோட்பாட்டினை உருவாக்கினார். இதனால் நாவலரின் எதிர்ப்பு, புரட்டஸ்தாந்தக் கிறித்தவத்தையே முக்கியமாகப் பாதித்தது.

 தமிழரிடையே பிற மத பண்பாட்டுத் தாக்கங்கள் முன்னர் வந்த வேளைகளிலும் இத்தகைய ஒரு சைவ - தமிழ் இணைப்புப் பேசப்பட்டுள்ளது உண்மையாகும். திருஞானசம்பந்தரிலும், அருணகிரியாரிலும் இக்கருதுகோளைக் காணலாம். ஆனால் யாழ்ப்பாண நிலையில் இது உருவாக்கப் பெற்று, வியாக்கியானஞ் செய்யப்படும் பொழுது இது ஒரு புறத்தில் பிராமணர்களின் இந்த மத மேலாண்மை நிலையினை மறுதலிப்பதாகவும் (சைவக்குருக்கள்மாருக்கு முக்கியத்துவம்) மறு புறத்தில் வேளாள மேலாண்மையை நியாயப்படுத்துவதாகவும் அமைகின்றது. சத்-சூத்திரக் கோட்பாடு இதனடியாகவே வருகின்றது. மேலும், சைவசித்தாந்தம் படி நிலைப்பட்ட அமைப்பினை ஏற்றுக்கொள்வதாகும். அது தனது சரியை, கிரியை. ஞானம். யோகம் என்னும் கோட்பாடு மூலம் ஆன்மாக்களின் முதிர்ச்சி நிலையில் வேறுபாடு காண்பது மாத்திரமல்லாமல், முத்தி நிலையில் கூட இந்தப் படி நிலையை வற்புறுத்தும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என முத்திநிலையையே அது வகைப்படுத்தும். இந்த உலகத்திலே மாத்திரமல்லாமல் அடுத்த உலகத்திலும் அது சமத்துவத்தை மறுதலிக்கும். (சிவத்தம்பி. 1983).

சைவமும் தமிழும் என்ற கோட்பாட்டின் சக அரசியல் உட்கிடக்கைகள் மிகமிக முக்கியமானவையாகும். மொழிவழிப் பண்பாடு வற்புறுத்தும் தமிழ் ஒருமையை இது மறுதலிக்கின்றது. சேர் பொன் இராமநாதன் அவர்களை இந்தக் கருத்துநிலையின் அரசியல் பண்பாட்டுச் சின்னமாகப் போற்றும் மரபுண்டு. அவரது சகோதரரான சேர் பொன் அருணாசலத்துக்கு அந்த இடம் வழங்கப்படுவதில்லை.

சைவமும் தமிழும் இணைத்து நோக்கப்படுதற்கான வரலாற்றுப் பின்புலத்தினைப் புரிந்துகொள்வது அவசியமாகும். இக் கருத்துநிலையினை மேற்கொள்பவர்கள் ஒன்று மற்றது இல்லாது தொழிற்படாது என்ற கருத்தினையே வலியுறுத்துவர். யாழ்ப்பாணப் பண்பாட்டினை இந்தக்கருத்துநிலையின் அடிப்படையில் விளக்கும் பொழுது "கந்தபுராணக் கலாசாரம்" என்ற கருதுகோள் முக்கியமாகின்றது. இந்தக் கருத்து நிலை தமிழின் இலக்கிய உருவாக்கத்தையும் இந்தக்கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றது.

 யாழ்ப்பாணச் சமூகத்தின் பாரம்பரிய அமைப்பினைப் பேணுவதற்கான புலமை நோக்கின் வெளிப்பாடகச் " சைவமும் தமிழும்" என்ற இக்கருத்து நிலையைக் கொள்வோமானால், இதன் மறு புறத்தில் இத்தகைய சமூக பழமை பேண் வாதத்தினூடேயும் தொழிற்பட்டு வரும். தவிர்க்கமுடியாத. அசைவியக்கத்தினை அவதானிக்கலாம். அதற்கான அடிப்படை தாராண்மை வாதத்தினை அடிப்படையாகக் கொண்ட சமூகச் சீர்திருத்தம் பற்றிய கருத்து நிலையாகும். 1920 களின் பிற்கூறுமுதல் 1930 கள் வரை முக்கிய இடம் பெற்ற வாலிபர் காங்கிரஸ், "தேசிய வாதம்" "சமூக சமத்துவம்" எனும் எடுகோள்களின் அடிப்படையில் முன்வைத்த இந்த அரசியல் சமூகக் கருத்துநிலை கடந்த நாற்பது கால யாழ்ப்பாண வரலாற்றில் ஏற்பட்டு வந்துள்ள சமூகச் சீர்திருத்தங்களுக்குத் தளமாக அமைந்து வந்துள்ளது. சாதி ஒடுக்குமுறையொழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகிய துறைகளில் இக்கருத்துநிலையினர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவையாகும். இக்கருத்துநிலை வளர்ச்சியின் வரலாற்றில் எஸ் ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம், திரு. ந. சபாரத்தினம் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவர்.

 சைவத்தமிழ்க்கருத்து நிலையையும் தாராண்மை வாதச் சமூக சீர்திருத்தக் கருத்து நிலையையும் எவ்வாறு ஒருங்குசேர வைத்து நோக்குவது என்பதிற் சிக்கற்பாடுகள் உள்ளன. இந்த இரண்டு கருத்து நிலைகளையும் ஒன்றிணைத்து நோக்கமுனையும்பொழுது யாழ்ப்பாணச் சமூகத்தின் அடிப்படையான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கும். இதனாலேயே, இன்று, மத்தியதர , தொழில்முறை வர்க்க த்தினர் (Middle class. pmfessional) மத்தியில், "சமூக முன்னேற்றம்". "சமூக ஒருமைப்பாடு பற்றிய விடயங்கள் பேசப்படும் பொழுது சாதியமைப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து நோக்கும் முறைமை ஒன்று வளர்ந்துள்ளது. தொழில் முறைப்பட்ட மத்திய தர மட்டத்திலே இந்நிலை (அதாவது சாதியமைப்பு வன்மையான ஒரு சமூக-பொருளாதார சக்தியாகத் தொழிற்படும் தன்மை ) மிகக் குறைவே ஆனால், கிராம மட்டங்களிலும், மரபு நிலைத் தொழிற்பாட்டு மட்டங்களிலும், பாராம்பரிய சமூக நோக்குத் தொடர்ந்து நிலவுவதையும் வன்மை குறையாதிருப்பதையும் அவதானிக்கலாம்.

மேலும் ஒரு வகையிலும், இந்தக் கருத்துநிலைகளின் இன்றியமையா முரண்பாட்டு மோதல் தவிர்க்கப்பட்டு வருகின்றது. அதாவது இந்த இரண்டு கருத்து நிலைகளையும் இரண்டு வேறுபட்ட பிரக்ஞை மட்டங்களுக்குரியனவாகக் கொள்ளும் ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது. தாராண்மைவாதச் சமூக மாற்றக்கருத்து நிலையினைப் பண்பாட்டு மட்டத்திலும் வைத்து நோக்கும் ஒரு சைவநெறியினையும் அவதானிக்கலாம். ஆனால் அண்மைக்காலத்தில் மிக முக்கியமான சமூக அரசியற் சக்தியாக மேற்கிளம்பியுள்ள இளைஞர் தீவிரவாதம் யாழ்ப்பாணச் சமூகத்தின் கருத்துநிலைப் பரிமாணத்திலே சில விஸ்தரிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நிலையில், தமிழர் கோரிக்கைகளுக்கு முன் எக்காலத்திலும் இல்லாத ஒரு முனைப்பினை வழங்கியுள்ள இவ்வாதம், சமூக நிலையில் இரு முக்கிய செல்நெறிகளைத் தொடங்கி வைத்துள்ளது.

 

1. இளைஞரின் சமூகத் திறமை, வெற்றித் தொழிற்பாடு ஆகியன பற்றிய சிந்தனை மாற்றம். (இது உயர் தொழிற் கல்விக்கானதும் பரீட்சைச் சித்திகளை உரைகல்லாகக் கொண்டதுமான ஒரு கல்வி முறையின் மேலாண்மையைச் சிதைப்பதாக அமைந்துள்ளமை).

 

2. பெண்கள், குறிப்பாக யுவதிகள், அரசியற் போராட்டத்தில் ஈடுபடல். இது நடக்கும் அதே வேளையில் உயர்கல்வியில் பெண்கள் ஆண்களிலும் பார்க்க அதிக தொகை யினராக ஈடுபடல். (இச்செல்நெறி குடும்பம், தாய்மை போன்ற கருத்து நிலைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது).

 

இவையிரண்டும் செயற்பாட்டு நிலைமைகளாகத் தொழிற்பாடுகளாக முனைப்புறும், இவ்வேளையில், கிறிஸ்தவத்தின் தமிழ் மயப்பாடும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை காரணமாகத் தமிழ் பண்பாட்டுச் சின்னங்களிற் கிறிஸ்தவரிடையே காணப்பட்டு வந்த ஒதுங்கு நிலைப்பாடு உடைத்துக்கொண்டு வருவதைக் காணலாம். (குறிப்பாக சந்தணப் பொட்டினைப் போடுதல்). இவற்றினூடாக " தமிழ் " குறிப்பிடும். சமயங்களுக்கப்பாலான ஒரு மொழிப் பண்பாட்டை வற்புறுத்தும் தன்மையும் ஒன்று வளர்கின்றது.

ஆனால் இவை யாவும் இன்னும் சமூகச் சிந்தனையை முற்று முழுதாகத் தம்வசப்பபடுத்தும் கருத்துநிலையாக்கப்படவில்லை . ஆனால் நிச்சயமாக அரசியல் - சமூக நவீனத்துவத்துக்கும் பழைமை பேண் வாதத்துக்குமிடையிலான முரண்பாட்டுணர்வு படிப்படியாக முனைப்புப் பெறுவதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இந்த முரண்பாடு பற்றிய பிரக்ஞை . அதன் இயங்கியல் தன்மை மூலம் சில அசைவியக்கங்களுக்கு இடமளித்துள்ளது. சமகால யாழ்ப்பாணச் சமூகத்தின் போக்குகளை விளங்கிக்கொள்வதற்கு அந்த அசைவியக்கங்களை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

 

VI

யாழ்ப்பாணச் சமூகத்தின் சமகால அசைவியக்கங்கள் சில.

நாம் எத்துணை முயலினும் அசைவியக்கமற்ற சமூகம் (Non - dynamic society) என்பது உண்மையில் ஒரு இல் - பொருளேயாகும். எந்த ஒரு சமூகமும், அது உயிர்ப்புள்ளதாக இருக்கும்வரை அதனுள் ஒரு அசைவியக்கம் காணப்படுவது இயல்பே. சமூகப் பேணுகை என்பது கூட. சமூக மாற்றத்தின் பெறுபேறே. ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் முன்னர் நிலவாச் சூழ்நிலைகள் காரணமாக உண்டாகும் அசௌகரியங்களிலிருந்து விடுபடுவதற்கும், முந்திய செல்வாக்கு. அதிகாரங்களைப் பேணுவதற்குமே சமூகப் பேணுகை நடைபெறுகின்றது.

 அண்மைக் காலத்தின் நாட்டு நிலைப்பட்ட சர்வதேச நிலைப்பட்ட காரணிகளின் தொழிற்பாடுகளினால் "சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டே வந்திருக்கின்றது. கடந்த நான்கு ஐந்து வருடங்களாக உள்ளூரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புகளினால் இந்த மாற்ற" வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இங்கு இறுதியாகக் குறிப்பிட்ட மாற்றங்கள் பற்றி இங்கு விரிவாக ஆராய்வது முடியாது. ஆனால் அவற்றைக் கணக்கெடுத்துக் கொண்டு கடந்த 15 தொடக்கம் 20 வருட காலமாக ஏற்பட்டு வரும் சமூக அசைவியக்கங்களைப் பற்றிச் சிறிது நோக்குவோம். சமூக அசைவியக்கத்தின் முக்கியமான அமிசங்களில் ஒன்று சமூக ஸ்தானப் பெயர்வு அசைவு ஆகும். இது இருவகையாக நடைபெறும்.

 

1. ஒருவர் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குப் பெயர்தல் அன்றேல் ஒரு சமூகக் குழுமத்திலிருந்து இன்னொரு குழுமத்துக்குப் பெயர்தல். இது கிடைநிலை யான (horizontal) பெயர்வசைவு ஆகும்.

2. மற்றது ஒரு குறிப்பிட்ட சமூக மட்டத்திலிருந்து (Level) இன்னொரு மட்டத்துக்குச் செல்வதாகும் இது நிமிர் நிலை (Vertical) யானது. அது மேல்நோக்கியதாகவோ கீழ் நோக்கியதாகவோ இருக்கலாம்.

 

பொதுவான மனித இயல்பு. மேனிலைப்பாட்டுக்கான பெயர்வசைவேயாகும். யாழ்ப்பாணச்சமூகத்தில் நிகழும் மேனிலைப்பெயர்வு அசைவுகளின் தன்மைகளை நோக்குவோம்.

அதற்கு முன்னர் முக்கிய குறிப்பு ஒன்றினைக் கூற வேண்டியுள்ளது. இப்பொழுது நடைபெறும் பெருமளவிலான புலப்பெயர்வானது உண்மையிற் சில அடிப்படையான சமூகக் காரணங்களுக்காகவே நிகழ்கின்றது என்பதை மறந்து விடுதல் கூடாது. இந்த அமைப்பினுள் அவர்கள் பெறவிரும்பும் மேனிலைப் பெயர்வசைவினை இந்தச் சமூகத்தின் பெளதீக பிரதேசத்தில் வைத்து செய்ய முடியாதிருப்பதாலும் மேனிலைப்பெயர்வசைவினால் வரும் சௌகரியங்களைத் அனுபவிக்க முடியாதிருப்பதாலும் இந்த அமைப்புக்கு வெளியே சென்று அவற்றைத் துய்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையே இன்றைய அடிநிலை, இடைநிலைச் சமூக மட்டத்துப்புலப்பெயர்வுகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும். புலம்பெயர்ந்த பின்னர் தமது தற்போதைய சௌகரியங்களை தமக்கே அர்த்தப்படுத்திக்கொள்ளவதற்காகப் புலம்பெயர்ந்துள்ள இடங்களில், தாம் விட்டு வந்த சமூக பண்பாட்டுச் சூழலை மீள் உருவாக்கம் (Reproduce) செய்ய விரும்புகின்றனர். இந்த மீள் உருவாக்கத்துக்கான பௌதீக வாய்ப்புகளைப் (பண்பாட்டு, பயன்பாட்டுப் பொருட்களை, நடவடிக்கைகளை) பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவுகின்றன. இந்த மீள் உருவாக்கத்தில் கருத்து நிலைக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் சிக்கல்யாதெனில் இந்த மீள் உருவாக்கத்தை இவர்கள் அங்கு மேலாண்மையுடன் நிலவும் கருத்துநிலைவட்டத்துக்குள்ளேயே செய்ய வேண்டும். இதனால் இந்த மீள் உருவாக்கம் ஒரு நாற்று நடவாக (Transplanting) அமைய இடமே இல்லை . அடுத்த தலைமுறை அந்தப் பண்பாட்டினுள் உள்வாங்கப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். அதேவேளையில் அங்கு இவர்களது சமூக அந்தஸ்து மிகக்குறைவானதாகவே இருத்தலால் இவர்கள் தனித்துப் பேணுகைக்கும் மேலாண்மை பண்பாட்டின் உள்வாங்குதலுக்குமிடையே தத்தளித்து இறுதியில் இரண்டும் கெட்டான் ஆகிய ஒரு உடன்பாடாகவே முடியவேண்டிய நிலை (Creolization) ஏற்படலாம்.

ஆனால் இங்கு நாம் இங்குள்ள அமைப்பினுள்ளே. இந்த அமைப்பின் பண்பாட்டு எடுகோள் களை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதற்குள்ளே தமது மேனிலைப்பெயர்வினை உறுதிப்படுத்துகின்ற சமூக அசைவியக்கங்கள் பற்றியே நோக்குவோம்.

 

அண்மைக்கால யாழ்ப்பாணச் சமூக அமைப்பினுள் சமூக அசைவியக்கம் இரு முக்கிய தன்மைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

1. அகப்பிரிவுகள் குறைந்த சாதிப்பெருக்குழுமத் தோற்றம் (Formation of mega Castegroups)

2. சமஸ்கிருதநெறிப்பாடு (Sanskritization)

 

முதலாவதினை எடுத்துக் கொள்வோம். அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வந்துள்ள சமூக அசைவியக்கங்கள் காரணமாகவும், மேனிலைப்பெயர்வசைவு (Upward social mobility) காரணமாகவும், சிறிய சாதிக்குழுக்கள் ஒழிந்து. சுலபமாக இனங்கண்டறியப்படத்தக்கதாக, பெருக்குழுமங்களுள் இவை கொண்டு வரப்படுகின்றன. உதாரணமாக அகம்படியார், மடப்பள்ளி, தனக்காறர், செட்டிமார். எண்ணெய் வாணிகர் போன்ற சாதியினரும் சில பின்தங்கிய பிரதேசக்கமக்காரர்களும் இப்பொழுது படிப்படியாக - வெள்ளாளர் என்ற பெருங்குழுமத்தினுள் வந்துள்ளனர். வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஒரு அசைவியக்கம் முன்னரும் நிகழ்ந்துள்ளது.

 "கள்ளர் மறவர் கனத்த அகம்படியார்

மெள்ள மெள்ள வந்து வெள்ளாளர் ஆனார்கள்"

 என்ற பழமொழி இதனை உறுதிப்படுத்துகின்றது. அதே போன்று மீன்பிடித் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்கின்ற சாதி குழுமங்களான கரையார், திமிலர். முக்குவர் முதலானோர் கரையார் என்ற பெருங்குழுமத்தினுள் வைத்துப்பார்க்கப்படுகின்றனர். தச்சர் கொல்லர், தட்டார் ஆகிய விஸ்வகருமப் பாரம்பரியத்தினரிடையேயும் இத்தகைய ஒரு இணைவு காணப்படுகின்றது. இந்தப் பெருங்குழுமச்சாதி உருவாக்கம், கல்வி வளர்ச்சி, விவாகத்தேவைகள் காரணமாக உந்தப் பெற்றதென்றே கூறல் வேண்டும்.

 உண்மையில் இது சாதிக்குள் நடக்கும் வர்க்க இணைவேயாகும். (காதல் கலியாணங்களினால் ஏற்படும் சாதிகளின் இணைவின் பொழுது. அத்தம்பதியினர் இறுதியில் யாராவது ஒருவரது சாதிக்குழுமத்துடனேயே இணைவர். இந்த இணைவின் மட்டம் உத்தியோகபலம், சொத்துப் பலம் என்பவற்றினாலே தீர்மாணிக்கப்படும். மேற்குறிப்பிட்ட இந்தப் பெருங்குழுமச்சாதி உருவாக்கத்தினால், ஒவ்வொரு சாதியினதும் அசைவு வட்டம் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்தது சமஸ்கிருத நெறிப்படுகையாகும். இது யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கோலத்திலே பெரியதொரு விஸ்தரிப்பினை ஏற்படுத்தியுள்ளது. (சிவத்தம்பி. 1989). முதலில் சமஸ்கிருத நெறிப்படுகை" (Sanskritization) என்பது யாது என்பதனை நோக்குவோம்.

"இந்திய சூழலில் மேனிலைப்பட்ட அசைவியக்கத்திற்கு ஆளாகும் ஒரு குடும்பம் அன்றேல் குழுமம், தமது நடைமுறைகளைப் படிப்படியாக உயர் இந்து மத நெறியில் கூறப்படுகின்ற. அதாவது சமஸ்கிருத இலக்கியங்களில் (எழுத்துக்களில்) உள்ளது என நம்பப்படுகின்ற முறைமையில் அமைத்துக் கொள்கின்றது. இப்படிச் செய்கின்ற பொழுது. தாம் இதுவரை கடைப்பிடித்து வந்தனவற்றைச் சமஸ்கிருத நிலைப்படுத்தி அல்லது சமஸ்கிருத மயப்படுத்தி அவற்றையும் உயர்மரபுக்குரியன போன்று போற்றுதல் மரபாகும்".

 

இந்தச் சமஸ்கிருத நெறிப்படுகை பின்வரும் முறைகளிலே தொழிற்படுகின்றது.

1. வழிபாட்டிடங்களில் வழிபடப்படும் தெய்வங்கள்

மாற்றப்படுகை. (உ-ம்) அண்ணமார் - பிள்ளையார்

விறுமர் - பிள்ளையார்

நாய்ச்சிமார் - காமாட்சி அம்மன்

கண்ணகியம்மன் - ராஜராஜேஸ்வரி

முனி - முனிஸ்வரர்(சிவன்)

வைரவர் - ஞானவைரவர்

 

2. வழிபாட்டு முறைமைகள் மாற்றப்படுகை

மடை - பொங்கல்

குளிர்த்தி - பொங்கல்

பொங்கல் - சங்காபிஷேகம்

 

3. கோயில்களின் அந்தஸ்து மாற்றப்படுகை

1 "விளக்கு வைத்தல்" நடந்த இடத்தில் பிராமணர்

சைவக்குருக்கள் பூசை செய்தல்.

ii. சங்காபிஷேகம் நடந்த இடத்தில் மகோற்சவம் நடத்தல்.

iii. பெயர் மாற்றம், காரைநகர் சிவன் கோவில். ஈழத்துச் சிதம்பரம் எனப்பட்டமை.

iv. தேர்த் திருவிழா அன்று (நல்லூரில் நடப்பது போன்று) பச்சை சார்த்தல்.

V. பெருங்கோயில்களோடு சம்பந்தப்படல் (அக்கோயில்களுக்கான விரதம் பிடித்தல்

முதலியன).

vi. பஞ்சாங்கத்திற் கோயிலின் பெயர் இடம்பெறல்.

 

திருப்பணி செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப்பெறுதலும், கும்பாபிஷேக மலர் வெளியிடப்படுதலும் முக்கிய நடவடிக்கைகளாகியுள்ளன. கோயில் நிலைப்பட்ட நடவடிக்கைகளுக்குக் காரணம், கோயில் ஈடுபாடு வழங்கும் சமூக உயர் அந்தஸ்து ஆகும். இக்கட்டத்திலே இரு முக்கிய சமூக வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்தல் அவசியமாகும். ஆலயப்பிரவேசம் முக்கியமான கோயில்களிலேயே நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் உட்செல்ல அனுமதிக்கப்படாத கோயில்கள் இப்பொழுதும் உள்ளன.

 

இரண்டாவது ஆலயப்பிரவேசம் நடந்த கோயில்களின் நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அந்தக் கோயிலின் தானீசர் குழுக்களில் மாற்றங்கள் ஏற்படவில்லையெனலாம். அதாவது ஆலயப் பிரவேசத்தினாற் கோவில் நிர்வாகமுறைமை மாறவில்லை. இதனால் ஏற்கனவேயுள்ள கோயில்களில் நிர்வாகப்பங்கு அற்றவர்களாகவிருந்தோர். தமக்குத்தமக்கென கோயில்களை வளத்தெடுக்கத் தொடங்கினர். இது சாதி மட்டத்திலும், "பகுதி" மட்டத்திலும் நிகழத்தொடங்கிற்று. இந்த இரு அசைவியக்கங்கள் காரணமாக இச்சமூகத்தினர் பண்பாட்டுச்சீவிய வட்டம் விஸ்தரிக்கப்படலாயிற்று. அத்துடன் இவ்விஸ்தரிப்புக் கோயிற்கலைகளிலும், கோயில்களைப் பயில்வோர்கள் நிலையிலும் (குறிப்பாக இசைக்கலைஞர்கள் நிலையில்) முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றால் பண்பாட்டு பங்கெடுப்பு (Cultural Participation) அதிகரிக்கலாயிற்று. அரசியல் நிலமைகள் காரணமாக வளரும் பண்பாட்டுப் பிரக்ஞை இந்த வளர்ச்சியின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்தைப் பெறத் தொடங்கிற்று.

 கிறிஸ்தவ ஆலயங்களும் இந்தப் பண்பாட்டுப் பங்கெடுப்பிற் பங்கு பற்றின. சந்தனப்பொட்டுப் போடுதல், நாதஸ்வரம் தவில் வாசிப்பித்தல், பட்டு வேட்டி கட்டுதல் போன்ற பல நடவடிக்கைகளை இங்கு குறிப்பிடலாம். யாழ்ப்பாணச் சமூகத்தின் சமகால அசைவியக்கங்களின் பிரதானமாக எடுத்துக்கூறப்பட வேண்டுவது. இளைஞர் தீவிரவாதப்போக்கினாலும், போராட்டத்தினாலும் ஏற்பட்டுள்ள "நியம" மாற்றங்களாகும். நியமங்கள் (Norms) என்பவை ஒவ்வொரு பண்பாட்டிலும் அப்பண்பாட்டு வட்டத்தினுள் வரும் நடத்தை முறைகளை (Behavioural Patterns) நிர்ணயிப்பனவாகும். தீவிரவாதப் போராட்டத்தின் காரரணமாகப் பொது நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை முறையிற் பல மாற்றங்கள் (Priorities) ஏற்பட்டுள்ளன. இவை புதிய நியமங்களைத் (Norms) தோற்றுவிக்கின்றன. இந்த நியமங்கள் காரணமாகப் புதிய முன்னுரிமைகள் வந்துள்ளன. (மாவீரர் குடும்பங்களுக்கு முக்கியத்துவம்) இவை அடிநிலை மட்டங்களிற் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேற்கூறிய அசைவியக்கங்கள் காரணமாக சமூக நடைமுறைச்செயல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னர் நிலவிய பொருளாதாரக் கட்டமைப்பும் இப்பொழுது படிப்படியாக மாறி வருகின்றது. பாரம்பரிய கைத்தொழில்களைப் பாரம்பரிய இடங்களிற் செய்யமுடியாமை, அகதிமுகாம்களில் நீண்ட காலம் இருக்க வேண்டிய தேவை, எதிர்பாராத வகையில் ஏற்படும் நிலப்பகிர்வு ஆகியன பல பொருளாதார முயற்சிகளையும், சமூகக் கண்ணோட்டங்களையும் மாற்றி வருகின்றன.

யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் மாற்றச் செல்நெறிகளுள் மிகமுக்கியமானதாக எடுத்துக் கூறப்படவேண்டியது "இரண்டாம் நிலைத் தொழினுட்பத்தின் (Secondary Technology) சமூக ஒருங்கமைப்பாகும். யாழ்ப்பாணப் பாரம்பரியச் சமூக அமைப்புக்குப் புறம்பான.

நவீனமயவாக்க நெறிப்பட்ட ஆனால் கீழ்நிலைப்பட்ட தொழில்நுட்பங்கள் இச்சமூகத்தினுள் வந்த பொழுது. அவற்றை மேற்கொண்டோர் அடிநிலைகளைச் சார்ந்தர்ரே. உதாரணமாக மோட்டார் கார்ப் பாவனை வந்ததும் அதுவழியாக வந்த மோட்டார் திருத்த வேலைகள் படிப்படியாக அடி நிலைப்பட்டாராலேயே மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக. 1960 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இறக்குமதித் தவிர்ப்புப் பொருளாதார முறைமையின் பொழுது. இந்த இரண்டாம் நிலைத் தொழில்நுட்பம் முன்னிலைக்கு வந்தது. கராஜ்கள். வெல்டிங் நிலையங்கள் ஆகியன முக்கியமாகின. இவைசிறு தொழிற்சாலைகளாகவே இயங்கின. இந்தத்துறையில் ஈடுபட்டோர் அடிநிலைப்பட்டோரே.

 இக்காலத்தில் நடந்தேறிய விவசாய நவீனமாக்கமும், இந்த இரண்டாம் நிலைத் தொழில்நுட்பத்தை ஊக்கிற்று. உழவு இயந்திரங்களின் வருகை அது தொடர்பான ஓட்டுதல், திருத்தல் ஆகியன ஏற்படுத்திய தொழில்நுட்ப வாய்ப்புகளும் இவர்களிடத்தேயே சென்றன. மிகவிரைவில் இவை அதிக உழைப்பைத் தரும் தொழில்களாயின. இத் தொழில் முயற்சிகளால் கீழ்நிலைச் சாதியினரின் பொருளாதார பலம் அதிகரித்தது. அத்துடன் சாதிபற்றிய சில சமூக ஒதுக்கு நிலைகள் உடையத் தொடங்கின. இந்தச் செல்நெறிகாரணமாக முன்பில்லாத செல்வந்தர் குழாம் ஒன்று யாழ்ப்பாணச் சமூகத்தில் உலாவத் தொடங்கிற்று.

 அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுவரும் சமூக ஏற்புடைமை உணர்வுக்கு அத்திவாரமாக அமைந்தது. 1930. 1940 களில் இடது சாரி இயக்கம் தொடக்கி வைத்த சமூக சமத்துவப் போராட்டங்களே சமாசன. சமபோசனப் போராட்டம், (பஸ் முதல் பள்ளிக்கூடம் வரை சமாசனப் போராட்டம் பரவிற்று) தீண்டாமை எதிர்ப்பியக்கம் ஆகியன இப்போராட்டத்தின் முக்கிய மைல்கற்களாகும். இந்த வரலாற்றில் பவுல், செல்லத்துரை, சுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், நாகரத்தினம், டானியல் முதலியோர் முக்கிய இடம் பெறுவர்.

 இந்த வரலாறு பற்றி இன்னும் எந்தத் தொழில்முறை ஆராய்ச்சியாளரும் கவனம் செலுத்தவில்லை.

 

நிறைவுரை

இது வரை யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் கட்டமைப்பு தன்மைகளையும், அதன் உருவாக்க முறைமையினையும் பிரதானமாகத் தேசவழமைச் சட்டம் மூலம் நோக்கி, அதன் மேல், மேலாண்மைச்சக்திகளின் பேணுகைத் தொழிற்பாடுகளையும், அதேவேளையில் நடைபெறும் அசைவியக்கங்களையும் அவதானித்தோம்.

1706 இல் உருவாக்கப்பெற்று, 1806இல் பிரித்தானிய ஆட்சியினால் பூரணமான ஒரு சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொழுது அது சமூக முழுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சட்டக்கோவையாகவே (Code) இருந்தது. ஆனால் இன்றோ அதன் சமூகச் சமவீன உள்ளீடுகள் அகற்றப்பட்டு வெறுமனே ஒரு சொத்துரிமைச் சட்டமாகவே. அதுவும் பல்வேறு வரையறைகளைக் கொண்ட ஒரு சட்டமாகவே கொள்ளப்படுகின்றது.

இந்த மாற்றத்தினூடே இச்சமூகத்தில் நடந்த அசைவியக்கங்கள் காரணமாகவே இம்மாற்றம் ஏற்பட்டது. இந்த அசைவியக்கத்தினதும் சமூகப் பேணுகையினதும் தன்மைகள் இங்கு தொட்டுக் காட்டப்பட்டனவேயல்லாது, வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து விளக்கப்பெறவில்லை. அவ்வாறு செய்யும் பொழுது யாழ்ப்பாணத்தின் சமூக வரலாறு எழுதப்படும். யாழ்ப்பாணத்தில் வணிகமும், கைத்தொழில் முதலீடும் செயற்படாத காரணத்தினால் ஏற்பட்ட பலாபலன்கள் பல. அவற்றுள் முக்கியமானது கல்வி, ஒரு முக்கிய தொழில் முனைப்பு (Entrepenurial Activity) ஆகிற்று. இதனால் ஒரே சமயத்தில் பாரம்பரியமும் நவீனமயமாக்கமும் நமது சமூகத்திலே தொழிற்படுவதைக் காணலாம். இந்த இணைவின், இணைவின்மையின் வரலாற்றுக்குள்ளேயே இன்றைய இனப்போராட்டமும் உள்ளது.

இது கால வரை நடைமுறையிலில்லாத அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் பொழுது, அந்த அரசியல் உரிமைகள் கிடைக்கும் பொழுது அவற்றின் ஜனநாயக ரீதியான, பகிர்வுக்கு உத்தரவாதம் செய்யப்படுவதற்குச் சமூக மாற்றம் மிக மிக அவசியம்.

படிநிலை அதிகாரத்துக்குப் பழகிப்போன, அதனைப் பேணுவதற்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்த எடுக்கின்ற சமூகம் வரவிருக்கும் அரசியலுரிமைகளச் சகலருடனும் பகிர்ந்து கொள்வதற்கான சமூகக் கண்ணோட்டத்தை, நிலைப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் மாற்றத்துக்கான போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது அந்தப் போராட்டத்தின் பெறுபேறுகளைப் பேணுவதற்கானச் சமூகக் கட்டமைப்பு மாற்றங்கள் அவசியம்.

இதனை நான் எடுத்துக்கூறிய முறையில் தந்த தரவுகளினால் யார் மனதையாவது சஞ்சலப்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். என்னைப் பேச அழைத்த செல்வநாயகம் நினைவுப் பேருரைக்குழுவினரையும் மன்னிக்கவும்.

 

"பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்;

மண்மீ துள்ள மக்கள், பறவைகள்.

விலங்குகள், பூச்சிகள், புல்பூண்டு. மரங்கள்;

யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்ததே.

 

இன்ப முற் றன்புடன் இணங்கி வாழ்ந் திடவே

செய்தல் வேண்டும். தேவதேவா!

ஞானா காசத்து நடுவே நின்று நான்

"பூ மண்ட லத்தில் அன்பும் பொறையும்

விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்

 

சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்

இன்புற்று வாழ்க" என்பேன். இதனை நீ

திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி.

"அங்ஙனே யாகுகஎன்பாய் ஐயனே!

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click