கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
"கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படுகின்றன."
1980 இன் நடுப்பகுதியில் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களை ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புகளுக்குக் கற்பிக்கும் பொருட்டு பயற்சியளிப்பதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இதில் இரண்டு வருட உள்ளகப் பயற்சியும் ஒரு வருட கட்டுறு பயற்சியும் (In-Service Training) வழங்கப்படுகின்றது. தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான கலைத்திட்டத்தைத் தேசிய கல்வி நிறுவகம் தயாரிக்கிறது. Senarath Nanayakkara. (2002). தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரண்டு வருட உள்ளகப் பயிற்சியின்போதும் ஒரு வருட கட்டுறு பயற்சியின்போதும் ஏனைய ஆசிரிய கல்வியை வழங்கும் நிறுவனங்களின் பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது ஆசிரிய பயிலுனர்களின் சுயசெயல்திறன் நம்பிக்கைகளை (Self efficacy) வளர்க்கும் வகையிலான முழுநேரத் தங்குமிடத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகின்றது. சுயசெயல்திறன் நம்பிக்கைகள் என்பது அல்பிரட் பந்தூராவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாடாகும்.
சுயசெயல்திறன் நம்பிக்கைகள் என்பது வருங்காலச் சூழ்நிலைகளை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான மற்றும் செயல்படுத்துவதற்கான ஒருவரின் திறன்களின் நம்பிக்கைகளாகும். அதாவது ஒரு நபரின் சொந்த உந்துதல்கள், நடத்தைகள் மற்றும் சமூக சூழலில் கட்டுப்பாட்டைச் செலுத்தும் திறன்களைப் பற்றிய நம்பிக்கைகளை இது குறித்து நிற்கும். (பந்துரா,1977).
சுயசெயல்திறன் நம்பிக்கைகள் என்பது உறுதியையும் விடாமுயற்சியையும் உள்ளடக்கியது. இலக்குகளை அடையத் தனது உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்த முற்படும்போது தோற்றம் பெறும் தடைகளைச் சமாளிக்க இவை உதவுகின்றன. சரியான தன்மை, செயல்திறன், இயலுமான தன்மை மற்றும் ஆயத்தநிலை ஆகியவற்றுக்கான முக்கிய குறிகாட்டியாக சுயசெயல்திறன் நம்பிக்கைகள் உள்ளன.
சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஒரு ஆசிரியரைப் பொறுத்தவரையில் அவர் தனது சுயசக்தியை வெளிப்படுத்துபவராக, சாதனைகளை நிலைநாட்டுபவராக, மாணவர்களை ஆக்க ரீதியான செயற்பாடுகளுக்குத் தூண்டுபவராக, சுதந்திரமாகச் செயற்படுபவராக, சகிப்புத்தன்மை கொண்டவராக, கலாசாரத்தை மதிப்பவராக, சுயகட்டுப்பாடுமிக்கவராக, பாரம்பரியங்களைப் பாதுகாப்பவராக இருப்பார்.
Schwartz (2012) தேசிய கல்வியியற் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சிகளின் போது கல்வி சார் பாடங்கள், (Academic Component) தொழில்சார் பாடங்கள், (Professional Component) பொதுவான பாடங்கள் (General Component ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இவைதவிர இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
தொழில்சார் தொகுதியில் (550 மணித்தியாலங்கள்]
- கல்வி உளவியல் (90 மணித்தியாலம்)
- கல்விச் சமூகவியல் (90 மணித்தியாலம்)
- கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் (90 மணித்தியாலம்)
- கல்வி அளவீடும் மதிப்பீடும் (90 மணித்தியாலம்)
- கல்விக் கோட்பாடுகளும் பாடசாலை முகாமைத்துவமும் (90 மணித்தியாலம் )
- கற்பித்தல் பயிற்சி (100 மணித்தியாலம்)
பொதுப் பாடத் தொகுதியில் [420 மணித்தியாலங்கள்)
- தாய்மொழி (60 மணித்தியாலம்)
- சுகாதாரமும் உடற்கல்வியும் (60 மணித்தியாலம்)
- அழகியல் பாடங்கள் (சித்திரம், நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் (60 மணித்தியாலம் )
- இரண்டாம் மொழி (60 மணித்தியாலம் )
- தகவல் தொடர்பாடல் தெரிநுட்பம் (60 மணித்தியாலம் )
- ஆங்கிலம் (120 மணித்தியாலம்)
கல்வி சார் பாடங்கள் அவரவர்களது சிறப்புப் பாடநெறிக்கேற்ற வகையில் கற்பிக்கப்படும்
தொடர் மதிப்பீடு (60%) இறுதி மதிப்பீடு [40%]
தேசிய கல்வியியற் கல்லூரிக் கலைத்திட்டம் தேர்ச்சி மையக் கலைத்திட்டமாகவே (competency based) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. (Study on the Professional development of teachers and teacher educators in Sri Lanka(2016))
கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாடவிதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தேசிய கல்வியியற் கல்லூ ரிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அண்மித்த தசாப்தங்களில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் ஆசிரிய பயிலுனர்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர்களின் பண்புத்தரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைகள் தொடர்பான முன்மொழிவில் பாடசாலைத் தேவைகளைப் பூரணப்படுத்துவதாக தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கலைத்திட்டம் உருவாக்கப்படுதல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.
- தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பாடநெறிகள் நான்கு வருடங்களுக்கு நீடிக்கப்படுதல் வேண்டும். அவை பட்டப் பாடநெறிகளாக மாற்றப்படுதல் வேண்டும்.
- அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஊடாகப் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் அவர்கள் இசற் (Z) புள்ளிகளினூடாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.
- விசேட ஆரம்பக் கல்விப் பட்டத்துக்கான பாடநெறி ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். தேசிய ரீதியில் ஆரம்பக் கல்விக்கான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.
- அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பாடநெறிகளிலும் உயர்மட்ட ஆங்கிலப் பாடத்திட்டம் உள்ளடக்கப்பட வேண்டும். கல்வி அமைச்சு (2014)
எனவே தேசிய கல்வியியற் கல்லூரிகள் தொடர்பான விமர்சனங்கள் எழுப்பப்படும் இச் சந்தர்ப்பத்தில் 4 வருட கல்விமாணிப் பட்டப் பாடநெறியை ஆரம்பிப்பது பொருத்தப்பாடுடையதாக அமையுமா? என்ற பரவலான சந்தேகம் சமூக மட்டத்திலும் கல்வியியலாளர்களின் மட்டத்திலும் உள்ளது. இந்நிலையில் இவ்வாறான விமர்சன ங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காணும் முகமாகவும் விமர்சனங்களுக்கும், சந்தேகங்களுக்குமான காரணங்களைக் கண்டறியுமுகமாகவுமே இக் கட்டுரை எழுதப்படுகிறது.
மேற்கு நாடுகளில் ஆசிரிய பயிற்சி வழங்க ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் இல்லை. அதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகங்களே உள்ளன அல்லது அதற்குச் சமமான கல்லூரிகளே உள்ளன. அவற்றின் கலைத்திட்டம் நவீன செல்நெறிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களுக்குக் கல்விமாணிப் பட்டமே வழங்கப்படுகின்றது.
அவர்கள் பாடசாலைகளில் ஆசிரிய நியமனத்துக்காக விண்ணப்பிக்க முடியும். அது தவிர ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்பிக்கும் பெருமளவு ஆசிரியர்கள் கலாநிதிகளாகவே உள்ளனர் என்பதுடன் மேற்கு நாடுகளில் அடிப்படைத் தகுதி ஆரம்பப் பட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறி ஆசிரிய நியமனம் பெற்று ஆசிரிய தொகுதியினுள் உள்ளீர்க்கப்படும் ஆசிரியர்கள் சிறந்த மாதிரிகளாகக் கொள்ளத்தக்கவர்களாகவே உள்ளனர். அவர்களது சுயசெயல்திறன் நம்பிக்கைகள் (Self efficacy) தொடர்ந்து சில வருடங்கள் உச்ச அளவிலேயே காணப்படுகின்றன.
சுய செயல்திறன் நம்பிக்கைகள், அல்பிரட் பந்தூராவின் சமூகக் கற்றல் கோட்பாட்டிலிருந்து தோற்றம் பெற்றதாகும். சமூகக் கற்றல் கோட்பாடு, விரும்பத்தக்க நடத்தை மாற்றங்களை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும். இக் கோட்பாடு நடத்தை சார் கற்றல் கோட்பாட்டுக்கும் அறிகைசார் கற்றல் கோட்பாட்டுக்கும் இடையிலான பாலமாக விளங்குகிறது. (Muro & Jeffrey 2008).
உயர் சுய செயல்திறன் நம்பிக்கை இருக்கும் போது கடுமையான செயல்களையும் இலகுவாகச் செய்து விடுவார்கள் அதேவேளை தாழ்நிலை சுயசெயல்திறன் நம்பிக்கை இருக்கும் போது சவாலான செயல்களைத் தவிர்த்து விடுவார்கள். இதனால் அவர்கள் தோல்வி மனப்பான்மை கொண்டவர்களாகவும் எதிர்மறையான போக்கையுடையவர்களாகவும் உருவாகுவார்கள். (Mark & Campbell, 2011)
உயர் வினையாற்றல் காணப்படவேண்டுமானால் உயர்வான குறிக்கோள் உருவாக்கப்படுதல் வேண்டும். குறிக்கோள் உருவாக்கத்தில் தனியாட்களின் சுயசெயல்திறன் நம்பிக்கைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. (Locke & Latham, 1990) தேசிய கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் ஆசிரியர்கள் பல்வேறு செயலடைவுகளை வெளிப்படுத்தும்போது அதிபரினாலும் பாடசாலைச் சமூகத்தினாலும் அயல் சமூகத்தினாலும் போதுமான நேர் மீளவலியுறுத்தல்கள் வழங்கப்படுதல் வேண்டும். இல்லையேல் அவர்கள் புதிய விடயங்களைக் கற்பதற்கோ புதிய செயற்றிட்டங்களைச் செயற்படுத்துவதற்கோ முயற்சிக்க மாட்டார்கள் தவிர்த்தலிலேயே ஈடுபடுவர். சமூகக் கட்டமைப்பில் ஒருவர் ஏனையவர்களுடன் கொள்ளும் இடைத்தாக்கத்திலிருந்து சுய செயல்திறன் நம்பிக்கைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. அதாவது ஏனையவர்களின் நடத்தைகளை அவதானிப்பதன் ஊடாக ஒருவர் மற்றவர்களின் நடத்தைகளைத் தன்மயமாக்கிக்கொள்கின்றார் அல்லது பின்பற்றுகின்றார். இது உடன்பாடானதாக அமையும் போது அந்த நடத்தை மீள வலியுறுத்தலாக மாற்றம் பெறுவதாக அல்பிரட் பந்தூரா குறிப்பிடுகிறார். நடத்தையை அவதானித்தல் என்பது உடலியக்கச் செயற்பாடுகளை அவதானித்தலையே குறிக்கிறது (Bandura, 1977).
அல்பிரட் பந்தூரா, தனியாள் நடத்தையில் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது என்கிறார். அவரது கருத்துப்படி ஒரு தனியாள் பிழையான நடத்தையில் ஈடுபடுகின்றார் என்றால் அது பரம்பரையின் காரணமாக உருவாகின்றது என்பதல்ல. குறிப்பாக சிறுவர்கள் வன்முறையான நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் ஏனையவர்களை அவதானிப்பதன் ஊடாகவே அதனை வெளிப்படுத்துகிறார்கள் என அவர் கூறுகிறார். மாதிரி நடத்தைகளின் விசேட இலட்சணங்களில் கவனத்தைச் செலுத்தாத தனியாளுக்கு அவதானத்தினூடாகக் கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவேயிருக்கும் நாம் ஒரு நடத்தையை எந்தளவு கவனிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே அது நம்மில் தாக்கத்தைச் செலுத்துவதாக அமையும் என் அல்பிரட் பந்தூரா குறிப்பிடுகிறார்.
இலங்கையில் ஆங்கிலம் கற்பித்தலில் காணப்படும் பிரச்சினைகள் ஆசிரியர்களின் சுய செயல்திறன் நம்பிக்கையில் எவ்வாறான தாக்கம் செலுத்துகின்றன? என்னும் தலைப்பில் Mahan Aloysius (2015) மேற்கொண்ட ஆய்வில் ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஆங்கிலம் கற்பித்தலில் வேறுபாடு காணப்படுகின்றது.
ஒப்பீட்டு ரீதியில் ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் ஆசிரியர்களது சுய செயல்திறன் நம்பிக்கைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஏனெனில் அவர்களுக்குக் கற்பித்தலில் நீண்ட அனுபவம் காணப்படுகின்றது. அவர்கள் மாணவர்களது உடன்பாடான நடத்தைகளை இனங்கண்டு அதற்கேற்ப செயற்படுகின்றனர் என்கின்றார். அவ்வாறென்றால் தேசிய கல்விக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்று வருடப் பயிற்சி வீணானதா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான பின்னடைவுகளுக்கு என்ன காரணம்? எனக் கண்டறிய முற்பட்டபோது பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன.
- தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைத் தொகுதியினுள் ஏனைய ஆசிரியர்களை மாதிரிகளாகக் கொள்கின்றனர், அதன்பின் அவர்களைப் போல் தங்களையும் மாற்றிக்கொள்கின்றனர்.
- ஒவ்வொரு பாடவேளைக்கும் செயற்பாட்டுத்திட்டம் எழுதிக் , கற்பித்தல் துணைகளைத் தயாரித்து விளைதிறனுடன் கற்பித்தல் முயற்சியில் ஈடுபட விளையும் போது பாடசாலை முகாமைத்துவத்தினதும் மாணவர்களதும் சமூகத்தினதும் கவனிப்புக்குட்படுத்தப்படுகிறார்கள். இவற்றினை மேற்கொள்ளாத ஆசிரியர்கள் மாணவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வாறு புறக்கணிக்கப்படும் ஆசிரியர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை விமர்சனத்துக்குட்படுத்துகின்றனர். அவர்களுக்குப் பல்வேறு இடைஞ்சல்களைப் புரிகின்றனர். பிழையான ஆலோசனைகளையும் முன்மாதிரிகளையும் வழங்குகின்றனர்.
- தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நாம் மாத்திரம் ஏன் சிரமப்பட வேண்டும் எனச் சிந்திக்கின்றனர்.
- இவர்களுக்குப் போதுமான ஊக்குவிப்புக்கள் கிடைப்பதாக இல்லை அத்துடன் இவர்களது வாண்மைத்துவப் போக்கு தொடர்ச்சியான மேற்பார்வைக்கோ, ஆய்வுக்கோ உட்படுத்தப்படுவதில்லை.
- தேசிய கல்வியியற் கல்லூரிகளில் துண்டக் கற்பித்தல் பயிற்சிகளின் போதும், கட்டுறு பயில்வின்போதும் பழக்கப்பட்டுத்தப்பட்ட பாடத்திட்டமிடல், கற்பித்தல் சாதனப் பயன்பாடு, மற்றும் கற்பித்தல் நுட்ப முறைகளின் பிரயோகம் என்பவற்றுக்கும் நடைமுறையில் பாடசாலைகளில் பின்பற்றப்படும் முறையியல்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகப் பாடசாலைகளின் போக்கிற்கேற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்கின்றனர்.
- பாடசாலைகளில் ஆசிரிய ஆலோசகர்களும், பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் முழுவதுமாகத் தங்களது போக்கினுள் இவர்களை உள்வாங்கிவிடுகிறார்கள். தேசிய கல்வியியற் கல்லூரிகளின் நடைமுறைகள் தொடர்பாகப் போதுமான அறிவூட்டல்களும் இவர்களிடம் இல்லை. அது தவிரப் பாடசாலைகளுக்கும் கல்வித் திணைக்களங்களுக்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கும் இடையில் ஒருமித்த தொடர்பாடல் இல்லாமையும் இக் குறைபாட்டுகளுக்குக் காரணமாகின்றன. பாடசாலைகளில் இடம்பெறும் மாற்றங்கள் கல்லூரிகளில் அறிமுகமாக நீண்டகாலம் தேவைப்படுகின்றமையும் இந்த நிலைக்குக் காரணமாகின்றது.
மாறாக ஆசிரிய மாணவர்களின் சுயசெயல்திறன் நம்பிக்கைகள் தொடர்பில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில். அவர்களது இருவருட பயிற்சியினைப் பெறும்போதும் பாடசாலைகளில் ஒருவருட கட்டுறு பயில்வினை மேற்கொள்ளும்போதும் எவ்வாறான மாதிரிகளை, அவர்களால் அவதானிக்க முடிகிறது என்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஊக்கல்கள் எவ்வாறாகக் கிடைக்கப்பெறுகின்றன.
என்பது தொடர்பிலும் சிலரிடம் நேர்காணலினை மேற்கொண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த விரிவுரையாளர் ஒருவரிடம் இது தொடர்பில் கேட்டபோது அவர் "ஏன் மாதிரிகளை வெளியே தேடுகிறீர்கள்? கல்லூரிக்கு உள்ளேயுள்ள விரிவுரையாளர்கள் அனைவரும் மாதிரிகளாக இருக்கிறார்களா”? என்னும் வினாவைத் தொடுத்தார். அந்த வகையில் அவர் தொடர்ந்து உரையாடும் போது "கல்லூ ரியிலுள்ள பல விரிவுரையாளர்கள், ஊருக்கு உபதேசம்” என்ற ரீதியிலேயே நடந்துகொள்கிறார்கள். அவர்களில் பலருக்கு வாண்மைத்துவத் திறன் இல்லை, கல்லூரிக்கு எப்படியாவது நுழைந்துவிட்டால் போதும் அதன் பின் ஓய்வுபெறும் வரை காலத்தை ஓட்டிவிடலாம்” என நினைக்கிறார்கள் என்றார்.
மற்றொரு ஓய்வுபெற்ற விரிவுரையாளர் கருத்துரைக்கும் போது "விரிவுரையாளர்கள் தங்களை இற்றைப்படுத்துவதில்லை” என்றார். அதாவது இந்த நவீன காலத்திலும் தாங்கள், பட்டப்பின் கல்வி டிப்ளோமாப் பாடநெறியில் கற்ற அதே குறிப்புக்களையே மாணவர்களுக்குப் பார்த்து வாசித்துக் குறிப்பெடுக்குமாறு கேட்கிறார்கள். எந்தவொரு புத்தாக்கங்களையும் உருவாக்குவதில்லை. இவர்கள், ஏதாவது ஒரு கல்விசார் கட்டுரையாவது எழுதுகிறார்களா?, அல்லது ஏதாவது நூல்களையாவது வாசிக்கிறார்களா? தமது பாடத்துறையுடன் மாத்திரம் தம்மை வரையறுத்துக்கொள்கிறார்கள்” என்றார். “இவர்களை மூன்று வருடங்கள் மாதிரிகளாகக் கொள்ளும் மாணவர்களிடம் எவ்வாறு சுயதிறன் வலுவூட்டல் காணப்படும்”? எனக் கேட்டார்.
இது தொடர்பில் அண்மைய காலங்களில் நியமனம் பெற்ற ஒரு விரிவுரையாளரிடம் கேட்டபோது "தாங்கள் முன்னைய விரிவுரையாளர்களைப் போலன்றி நிறைவேற்றுத் தரத்தைக் கொண்ட ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள்” என்றும் "தங்களிடம் நுண்ணறிவு, பொது அறிவு மாத்திரமன்றி தொழில்சார் பாடங்கள் தொடர்பான அறிவும் நிறைந்திருப்பதாகவும் அவை யாவும் பரீட்சிக்கப்பட்டும் நேரடியான கற்பித்தல் பயிற்சி பார்வையிடப்பட்டுமே தாம் தெரிவு செய்யப்பட்டதாகவும்" குறிப்பிட்டார். ஆனால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு போட்டிப் பரீட்சைக்குத் தோற்றாது தெரிவு செய்யப்பட்ட ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர், "ஏனைய போட்டிப் பரீட்சைகளுக்கும் ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்குமிடையில் வேறுபாடு உள்ளது.
ஏனைய போட்டிப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் கற்பித்தலுடனோ மாணவர்களுடனோ நரடியாகத் தொடர்புகொள்வது இல்லை. போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துவிட்டோம் என்னும் நினைப்பில் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ளாமல் எந்தவித வெளிப்பாடுகளையும் செய்யாமல் எவ்வளவு காலத்துக்குக், காலம் கடத்தலாம்” எனக் கேட்டார்.
இவர்கள் கூடப் பழைய குறிப்புக்களையே வாசிக்கிறார்கள், தாம் பாடசாலையில் எவ்வாறு பாரம்பரியமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்திக் கற்பித்தார்களோ அவ்வாறே கற்பிக்கிறார்கள்” என்றார்.
இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் ஒருவரிடம் இது தொடர்பில் விசாரித்தபோது ஒரு ஆண் ஆசிரிய பயிலுனர், "விரிவுரையாளர்களில் பலர் நல்ல முன்மாதிரிகளாக உள்ளனர் ஆனால் சிலர் முற்றிலும் முரண்பட்ட முன்மாதிரிகளாக உள்ளனர், எம்மை முழுமையாக முகச்சவரம் செய்யுமாறும் காலில் சப்பாத்து இல்லாமல் வகுப்பறைக்குப் பிரவேசிக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்கள் நீளத்தாடி வைத்துக்கொண்டு காலில் சப்பாத்து இல்லாமல் சாதாரண பாதணிகளுடன் வகுப்பறைக்கு வருகை தருகிறார்கள். இவர்களை எவ்வாறு சரியான மாதிரிகளாகக் கொள்ள முடியும்” எனக் கேட்டார்.
மற்றொரு இரண்டாம் வருட பெண் ஆசிரிய பயிலுனர், "சில விரிவுரையாளர்கள், உரிய நேரத்துக்குப் பாடத்துக்கு வரமாட்டார்கள். அவர்களது பேச்சுக்கூட வாண்மைத்துவமானதாக இருக்காது. அதுதவிர ஒரு சில விரிவுரையாளர்களே தயார் நிலையில் வருவார்கள். ஏனையோர் பொதுவாகக் கதைத்திருந்துவிட்டுச் செல்வார்கள், பாடத்திட்டமிடலை மேற்கொண்டு கற்பிப்பதாகத் தெரியவில்லை ” என்றார். இதனை கல்விக்கும் தரமேம்பாட்டுக்குமான உப பீடாதிபதி ஒருவரும் உறுதிப்படுத்தினார். “விரிவுரையாளர்கள் எவரிடமும் பாட முன்திட்டமிடல் இல்லை, தன்னிடம் எவரும் பாட முன்திட்டமிடலை ஒப்படைப்பதுமில்லை ” என்றார். கற்பித்துவிட்டு பாடப் பதிவுப் புத்தகத்தில் குறித்த பாடத்தைக் குறித்து ஒப்பமிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கட்டுறு பயில்வு ஆண் ஆசிரிய பயிலுனர் ஒருவர் தெரிவிக்கும் போது, "முறையான மேற்பார்வை இடம்பெறுவதில்லை, ஒரு சில விரிவுரையாளர்கள், மேற்பார்வையின் போதே கைத் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது முகப்புத்தகம், வாட்ச் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். மற்றொரு கட்டுறு பயில்வு பெண் ஆசிரிய பயிலுனர், "மேற்பார்வைக்கு வருகைதரும் விரிவுரையாளர்கள் பாடத்திட்டமிடலை அவதானிக்காமல், கற்பித்தல் தொடர்பான குறை, நிறைகளைப் பற்றிக் கலந்துரையாடாமல் பொதுவான சுகபலன்களை விசாரித்துவிட்டுச் செல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
"முறையான அளவுகளில் கூட கட்டுறு பயில்வு மேற்பார்வை இடம்பெறுவதில்லை என்றும் தமக்குப் போதுமான மாதிரி வகுப்புக்கள் கூட, தமது துண்டப் பயிற்சிக் காலத்தில் இடம்பெறவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். "தமது பல்வேறுவிதமான சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் விரிவுரையாளர்களால் முன்வைக்கப்படுவதில்லை” என்று மற்றொரு கட்டுறு பயில்வு பெண் ஆசிரிய பயிலுனர் குறை தெரிவித்தார். கட்டுறு பயில்வுக் காலத்தில் தாம் , பாடசாலைகளில் பெருமளவு இன்னோரன்ன வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக மற்றொரு கட்டுறு பயில்வு பெண் ஆசிரிய பயிலுனர் தெரிவித்தார்.
அதாவது மாணவர்களைப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லுதல், பரீட்சை வினாத்தாள்களைக் கணினியில் தட்டச்சு செய்தல் போன்றவற்றை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். அது தவிர தாம் பயிற்சி பெற வந்தவர்கள் என்பதற்கப்பால் வெற்றிடங்களை நிரப்புவதற்கே தம்மை அதிபர்கள் பயன்படுத்துவதாகவும் தமக்குச் சரியான தொழில் வழிகாட்டியே இல்லை என்றும் தம்மிடம் முழுமையான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மற்றொரு கட்டுறு பயில்வு ஆண் ஆசிரிய பயிலுனர் கூறும்போது தம்மிடம் முழுமையான நேரசூசி ஒப்படைக்கப்படுவதாகவும் குறித்த பாடத்துக்கான முழுப்பொறுப்பும் தம்மிடமே ஒப்படைக்கப்படுவதாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தாமே வகை கூறுபவராக இருப்பதாகவும் இது தொடர்பில் விரிவுரையாளர்களோ, கல்லூரி நிர்வாகமோ கவலை கொள்வதாகத் தெரியவில்லை என்றும் ஏக்கத்துடன் தெரிவித்தார். சில விரிவுரையாளர்கள் ஆசிரிய மாணவர்களுடன் மிகக் கடுமையாக நடந்துகொள்வதாகவும் மாணவர்களுக்கு முன்னால் வைத்து அவர்களைக் கடிந்துகொள்வதாகவும், ஆத்திரத்துடன் சத்தமிடுவதாகவும். இதனைத் தான், பல தடவைகள் அவதானித்ததாகவும் ஒரு பாடசாலை ஆசிரியர் தெரிவித்தார். அதாவது மேற்பார்வையின் போது, குறித்த கட்டுறு பயில்வு மாணவர்களுக்கு, வசதி செய்யும் நோக்கத்துக்கு மாறாக அவர்களது பிழைகளைக் கண்டறிவதே விரிவுரையாளர்களது பிராதான நோக்கமாக இருக்கிறது.
கல்லூரி விரிவுரையாளர்கள் என்பவர்கள் ஆசிரியர்களாகிய எங்களுக்கு சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் ஆனால் அவர்களில் சிலர் நாங்களே புத்தி சொல்லும் அல்லது ஆலோசனை வழங்கும் நிலையில் இருக்கிறார்கள் என்றார். உள்ளும் புறமும் முறையான மாதிரிகள் கிடைக்கப்பெறாமையாலும் சரியான மாதிரிகளை மாணவர்களால் அவதானிக்க முடியாமலுள்ளதாலும் அவர்களது சுயதிறன் நம்பிக்கைகள் வீழ்ச்சியடைவதை அவதானிக்க முடிகிறது.
எனவே எதிர்காலத்திலாவது இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களது சுயசெயல்திறன் நம்பிக்கைகளுக்குத் தொடர்ச்சியான கணிப்பு வழங்கப்படுதல் வேண்டும் இல்லையேல் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்காகச் செலவிடப்படும் பெருமளவு அரச நிதி விழலுக்கிறைத்த நீராகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.