tag copy-மார்ட்டின்-

"வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன."

 

 அறிமுகம்

 கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை.

 புதிய கொரோனா வைரஸ் - சார்ஸ்- Cov-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 வைரஸ்....ஓர் அறிமுகம்

 எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் மற்றும் அபத்தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எளிமையான அறிவியியல் அறிமுகத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதியங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை விட மிகச் சிறியவை. உலகில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. இவ்வுலகிலுள்ள வைரஸ்களை வரிசையாக வைத்தால் அது நமது விண்மீன் மண்டலமான பால்வெளி மண்டலத்தின் விட்டமான சுமார் 1 இலட்சம் ஒளியாண்டுகள்களை விட நீளமாக இருக்கும். ஒரு ஒளியாண்டு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டராகும்.

இதனால், கோடிக்கணக்கான வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்று அச்சப்படத் தேவையில்லை. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

வைரசின் உயிரியற் பண்புகள்

 வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இதனால் இவை ஒட்டுண்ணிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

எல்லா ஓம்புயிர் உயிரணுக்களுக்குள்ளும் (கலங்கள் cell ) ஒரு வைரசால் உட்புகுந்துவிட முடியாது. கலங்களின் வெளிச்சுவர் வைரஸ் உட்புகுவதை தடுத்துவிடும். படையெடுக்கும் எதிரிகளைத் தடுக்கும் கோட்டையைப் போல சுவர் செயலாற்றுகிறது.

ஆனால் எந்நேரமும் முற்றிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட கோட்டை போல கலங்கள் இருக்க முடியாது. கலங்களின் எல்லா இயக்கத்துக்கும் ஆற்றலும், பல புரதப் பொருள்களும் தேவை. கலங்களுக்கு தேவையான, சரியான புரதப்பொருள்கள் வந்து கலச்சுவரை அடையும் போது சுவரின் மேல் அவற்றை பற்றி பொருந்தும் வகையில் திருகுவெட்டுப்புதிர் (Jigsaw puzzle ) போன்ற ஏற்பிகள் இருக்கின்றன. அந்த புரதங்களின் மேற்பகுதி பகுதி சாவி வடிவில் இருக்கும்.

 கலச்சுவரில் உள்ள ஏற்பியின் மேல் இந்த சாவி வடிவம் பொருந்தும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். அதாவது சரியான அடையாள அட்டையோடு சரியான கைரேகையைக் காட்டினால் தான் உட்செல்ல முடியும்.

பாக்டீரியா முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரிலும் உள்ள உயிரணுக்களின் (கலங்களின்) பாதுகாப்பு அம்சங்களும் வெவ்வேறானவை. அதாவது வெவ்வேறு பூட்டு சாவிகள். ஒரு வைரஸ் கலச்சுவரை ஊருடுவிச் செல்ல அது அந்த கலம் ஏற்றுக்கொள்ளும் சரியான புரத வகையையும், ஏற்பியில் சரியாகப் பொருந்தும் வடிவத்தையும் கொண்ட சாவி முட்களை மேற்பரப்பில் கொண்டிருக்க வேண்டும். இது போலி அடையாள அட்டையையும், போலி கைரேகையையும் கொண்டு உள்ளே புகுவது போல.

எல்லா வைரஸ்களாலும் எல்லா உயிரணுக்களையும் தாக்கிவிட முடியாது. ஒரு குறிப்பான கோட்டைச் சுவருக்கு பொருத்தமான போலி கைரேகையும், அடையாள அட்டையையும் கொண்ட வைரஸ்களால் மட்டுமே அந்த சுவரை ஊடுருவ முடியும். அதனால் எல்லா வைரஸ்களுமே மனிதசெல்களில் உட்புகுவதில்லை. சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் மட்டுமே மனித செல்களைத் தாக்குகின்றன.

 

கொரோனா வைரஸ் ஓர் அறிமுகம்

 கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள். பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கொம்புகள் உள்ளன. இவை நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடத்தைப் (கிரீடத்தைப்) போன்ற தோற்றத்தை தருகின்றன. இப்புரத முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித கலங்களை ஊடுருவி உள்நுழைகிறது. இக்குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.

 சில வகையான வைரஸ்கள் நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்து பின் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில நேரங்களில் விலங்குகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் சடுதி மாற்றத்தால் ஏற்படும் பிறழ்வுகளின் (Random Mutations ) மூலம் மனிதர்களை தாக்குபவையாக பரிணமித்து மனிதர்களை தாக்குகின்றன.

இந்த கொரோனா வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை அமெரிக்கா உருவாக்கி பரப்பியுள்ளது இல்லை, இல்லை ரஷ்யா உருவாக்கி பரப்பியுள்ளது என்று பல சதிக் கோட்பாடுகள் வலம் வருகின்றன. ஆனால், இதுவரை ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் எவையுமே புற உலகின் சூழலுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா நாடுகளின் தட்பவெப்ப சூழலுக்கும் தாக்குப் பிடிக்கும் வைரஸை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதும் அல்ல.

 மரபணுவைப் படியெடுத்தல் (Genome sequencing) மூலம் வைரஸ், பாக்டீரியா முதல் பல்வேறு உயிரினங்களின் மரபணுவை படியெடுத்து மரபணு தொடரை ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வெளவால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) ) மூலம் மனிதனை தாக்கும் வகையில் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.

அதாவது வெளவால்களை தாக்கிய வைரஸ்கும் இப்போது மனிதனை தாக்கும் வைரஸ்கும் இடையிலான மரபணு ஒற்றுமைகளை கொண்டும், அவற்றின் மீதுள்ள புரதக் கொம்புகளின் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டும் இது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 

கொரோனா வைரஸ்.... மனிதரைத் தாக்கும் பாங்கு

 இந்தப் புதிய கொரோனா வைரஸ் சார்ஸ்- CoV-2 வுடன் சேர்த்து மொத்தம் ஏழு கொரோனா வைரஸ்கள் உள்ளன. இவற்றில் 229E> NL63> OC43> HK01 ஆகிய நான்கும் ஆபத்தற்ற சளி, காய்ச்சலை உருவாக்கும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் விலங்குகளைத் தாக்குபவையாக இருந்து பரிணமித்து மனிதர்களைத் தாக்கின. இவை தொற்று ஏற்பட்ட சிலருக்கு மரணத்தை விளைவிப்பவையாக இருந்தன. இந்த புதிய கொரோனா வைரஸ் சார்ஸ்-CoV-2 வெளவால்களிடமிருந்து அல்லது எறும்புண்ணியிடமிருந்து மனிதனுக்குப் பரவி பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 மனிதரைத் தாக்கும் வைரசாக இருந்தாலும் அது எல்லா கலங்களையும் தாக்குவதில்லை. திசு கலம், குருதி வெள்ளையணு, சிவப்பணு என்று மனித உடலில் பல்வேறு கலவகைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் ஒரு குறிப்பிட்ட கலவகையை மட்டுமே தாக்கும். கொரோனா வைரஸ்கள் மூச்சுக் குழாய், நுரையீரல் உள்ளிட்ட சுவாச அமைப்பைத் தாக்குகிறது.

கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன. இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.

எல்லா வைரஸ்களும் ஓம்புயிர் கலங்களினுள் சென்ற உடன் அந்த கலங்களின் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம்மை பல்பிரதி (Multiple Copies ) எடுத்துக் கொள்கின்றன. பின்னர் அந்த கலத்தை சேதப்படுத்திவிட்டு அல்லது முழுவதுமாக அழித்துவிட்டு மற்ற கலங்களைத் தாக்குவதற்கு வெளியேறுகின்றன.

 ஒரு கலம் அல்லது சில கலங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் அது நோயறிகுறியாக வெளித் தெரிவதில்லை. வைரஸ் தொற்று நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு குறிப்பிட்ட அளவு கலங்கள் பாதிப்படைந்திருக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு இடைப்பட்ட காலம் நோயரும்பு காலம் (Incubation Period) எனப்படுகிறது.

தொற்றிய வைரஸ் நமது எதிர்ப்பு சக்தியோடு போர் புரியத்தேவையான தனது படைபலத்தை பெருக்க எடுத்துக்கொள்ளும் போருக்குத் தயாராகும் காலம், காத்திருப்பு காலமே நோயரும்பு காலம். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடிந்த பின்னர் தான் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடியும் முன்னரே மற்றவருக்குப் பரவுகின்றன. இந்த புதிய கொரோனா வைரசின் நோயரும்பு காலம் 14 முதல் 21 நாட்கள். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு 5 முதல் 14 நாட்களுக்குள் மற்றவரைத் தொற்ற ஆரம்பிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கொரோனாத் தொற்றின் நோயறிகுறிகள்.

 புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 14 நாட்களுக்குப் பிறகு பின்வரும் நோய்க்குறிகள் தோன்றலாம்.

-காய்ச்சல்

-தொண்டை வலி

-இருமல்

-மூக்கடைப்பு

-உடல் அசதி

-சோர்வு

-வயிற்றுப்போக்கு

-மூச்சு திணறல்

-மூச்சுவிடுவதில் சிரமம்

 

ஆகியவை ஏற்படலாம்.

 

கொரோனாத் தொற்று ஏற்படும் விதம்... பாதிப்பின் தன்மை

 சுவாச அமைப்பைத் தாக்குவதால் வீசும் காற்றில் இந்த வைரஸ் பரவியுள்ளதென்று பயப்படத் தேவையில்லை. நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்து இருமல், தும்மல் போன்றவற்றால் ஒரு மீட்டர் தொலைவு வரை இந்த வைரஸ் பரவலாம். தொற்றுள்ள நபர் தனது மூக்குப் பகுதியை தொட்டுவிட்டு தொடும் எந்தப் பொருளிலும் வைரஸ் இருக்கலாம். அதை தொட்டு நாம் நமது மூக்கு, வாய், கண் இவற்றைத் தொடும் போது நமக்கும் தொற்று ஏற்படலாம். கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன.

இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதையடுத்து வைரஸ் நுரையீரலில் உள்ள செல்களைத் தாக்கத் துவங்குகிறது.

இப்போது நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டப்பட்டு அது நுரையீரல், சுவாச அமைப்பில் தன் வேலையைத் துவங்குகிறது. இதற்குள் சுவாச அமைப்பில் மிக அதிக சேதத்தை வைரஸ் உருவாக்கிவிட்டதால், நோயெதிர்ப்பு மிகைஇயக்கம் (Hyper Active) செய்யத் துவங்கும். அதனால் அதிகமான திரவங்களை நுரையீரல் பகுதியில் சுரக்க வைக்கும். ஏற்கனவே சிதைவுற்ற சுவாசக் குழாய், நுரையீரல், இப்போது அதைப் பழுது பார்க்க நுரையீரலில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு திரவங்கள் ஆகியவற்றால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால், மூச்சு திணறல், நிமோனியா போன்றவை ஏற்படுகின்றன.

 இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் மற்ற உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. ஏற்கனவே நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் உள்ளுறுப்புகள் செயலிழப்பதன் மூலம் மரணம் வரை செல்கிறது.

இதனால் புதிய கொரோனா நோய்த் தொற்றினாலே மரணம் என்று அச்சப்படத் தேவையில்லை. இந்நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80மூ பேர் லேசான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவையின்றியே மீண்டுள்ளனர். 20மூ பேருக்குத் தான் மூச்சுத் திணறல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவை ஏற்படுகிறது. 6 % பேருக்கு மட்டுமே மோசமான நோய்தாக்குக்கு (Critically ill) உள்ளாகி சுவாச அமைப்பு செயலிழப்பு போன்றவற்றால் மிகத் தீவிர சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது. 2.6 முதல் 4% பேர் மட்டுமே மரணமடைகின்றனர். முதலில் நோய்க்குறிகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து மோசமான நோய்தாக்கு நிலைக்கு செல்ல மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகலாம்.

 எக்காலத்திலும் சுகாதாரத்துறைஃமருத்துவமனை வசதிகளின் திறனளவுக்குள் தொற்றை கட்டுக்குள் வைக்கும் போது மட்டுமே தேவையானவர்களுக்கு மருத்துவ வசதியை அளிக்க முடியும். அந்த அடிப்படையிலேயே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் உலக நாடுகள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

 

உதவிய கட்டுரைகள்

 The coronavirus was not Engineered in Lab

Here is how we know

The ultimate kids’ guide to the new corona virus

Human viruses and associated pathologies

கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா?

What happens to people’s lungs when they get corona virus

Here’s what coronavirus does to the body

 உடல்நல ஆய்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

Into to viruses

மூலம் ஆசிரியம்

X

Right Click

No right click