- மௌனகுரு -
"பாலசிங்கத்தின் நெறியாள்கையிலும் எழுத்துருவாக்கத்திலும் உருவான நாடகங்கள் சமூகபிரச்சனைகளை மனதில் உறைக்கும் வண்ணம் கூறுபவை அவரது நாடக எழுதுருக்களைத் தேடிப்பிடித்து அச்சில் கொணரும் பணியினை யாராவது செய்ய வேண்டும் ஈழத்துத் தமிழ் நாடக மரபின் இன்னொரு போக்கினை அறிய அவை நமக்கு உதவும்"
யாழ்ப்பாண வாழ்வில் எனக்குக்கிடைத்த நாடக உறவுகளுள் மறக்கமுடியாதவர் பாலசிங்கம் யாழ்ப்பாண நாடக மரபின் இன்னோர் போக்கிற்கு உதாரணமான பாலசிங்கத்தின் மறைவு துயரம் தந்தது
அர்ப்பணிப்பும் சமூக நலநாட்டமும் சகல மக்களுக் குமான விடுதலையையும் வேண்டி நின்ற கொதிக் கும் மனதினான ஓர் கலைஞனின் மறைவு அது 1970 கள் ஈழத்தமிழ் நாடக உலகில் ஈழத்துத் தமிழ் நாடகங்கள் உழைக்கும் மக்கள் , அடிமட்ட மக்கள் , உதிரிப் பாட்டாளி வர்க்க மக்கள் , மலையக தொழிலாள மக்கள் ஆகியோர் பற்றிப் பேசின இவற்றுள் சில நாடகங்கள் அப்பிரச்சனைகளைப் புதிய நாடக வடிவங்களில் பேசின சில நாடகங்கள் பழைய வடிவங்களிலேயே பேசின. இக்காலக்கட்டத்தில் எழுந்த ஒரு நாடக ஆசிரியரே பாலா என அழைக்கபடும் பாலசிங்கம்.
1970 களின் நடுப்பகுதியில் ஆற்றுகை செய்யப்பட்ட பாலசிங்கத்தால் தயாரிக்கப்பட்ட சமுதாய மாற்றத்திலே….. எனும் நாடகம் யாழ்ப்பாணச்சாதி ஒடுக்கு முறைக்கு அடிப்படைக் காரணம் நிலம் சார்ந்த பிரச்சனையே எனக் கூறியது கோழிக்கால் வடிவிலான கற்களால் அடையாளப் படுத்தப்பட்ட நிலங்கள் யாவும் அரச காணிகள் என்பதை இந்நாடகம் இனம் காட்டி நிலமற்ற மக்களைக் குடியேறும்படி கோரியது.
இந்நாடகத்தால் கிளர்ச்சி பெற்ற மக்கள் அக் காணிக்குள் மேலும் பல குடும்பங்களைக் குடியேற்றி அதனை ஒரு கிராமமாக உருவாக்கினர். அக்கிராமம்தான் உரும்பிராய்க்கும் ஊரெழுவிற்குமிடையே பொக்கணை கிராமமாக இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது என்றவோர் குறிப்பை பார்த்தேன் இவ்வகையில் பாலா மக்களை செயலுக்குத் தூண்டும் ஓர் நாடகர் என்பது தெரிய வருகிறது இவரது " சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்" எனும் நாடக்ம் முக்கியமான நாடகம் ஆகும் கிட்டத்தட்ட 120 தடவைகளுக்கு மேல் இந்நாடகம் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டது என அறிகிறோம் அந்நாடகம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் மேடையேறியபோது அதனை பார்த்ததும் நாடகம் முடிய பாலசிங்கத்தை பாராட்டிச்சென்றதும் ஞாபகம் வருகிரது இந்நாடகத்தால் தூண்டப்பட்ட கிராமிய உழைப் பாளர்கள் கிராமம் தோறும் கூலி விவசாய சங்கங்களை அமைத்தனர் இந்நாடக்ம் புறக்கணிக்கப்பட்ட மக்களைச் சிந்திக்க வைத்ததுடன் அவர்களது வாழ்வில் மாற்றங்களையும் எற்படுத்தியது.
1980 தொடக்கம் 1995 வரை யாழ்ப்பாணத்தில் வீரியத்துடன் செயற்பட்டு வந்த பாலசிங்கம்
கூடி நாம் வாழ்வோம்,
மனிதனைப் படைப்போம்,
சூரியனைச் சுட்டெரிப்போம்,
சூரியனைச் சுமப்போம்
போன்ற பல சமூக எழுச்சி நாடகங்களை மேடையேற்றியதாக அறிகிறோம். அவரின் நாடகத்தின் பார்வையாளர்கள் வறிய கிராமிய மக்களாவர். பின்னாளில் இவர் கலைஞர்களை ஒன்றுதிரட்டி வன்னிப்பகுதியில் கிராமம்தோறும் சென்று நாடகத்தை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்தவர். பாலசிங்கத்தின் நெறியாள்கையிலும் எழுத்துருவாக்கத்திலும் உருவான நாடகங்கள் சமூகபிரச்சனைகளை மனதில் உறைக்கும் வண்ணம் கூறுபவை அவரது நாடக எழுதுருக்களைத் தேடிப்பிடித்து அச்சில் கொணரும் பணியினை யாராவது செய்ய வேண்டும் ஈழத்துத் தமிழ் நாடக மரபின் இன்னொரு போக்கினை அறிய அவை நமக்கு உதவும் அதுவே நாடக உலகு அவருக்கும் சமூகத்திற்கும் ஆற்றும் பணியாகும்