பேராசிரியர் மௌனகுரு
இன்று குழந்தை சண்முகலிங்கம் 91 வயதடைகிறார், என்னிலும் அவர் 11 வயது மூத்தவர் எனது அண்ணரிலும் மேலானவர். அவரோடு இணைந்து 1978 தொடக்கம் 1991 வரை 13 வருடங்கள் தொடர்ச்சியாக நாடகத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய காலங்கள் ஞாபகம் வருகினறன
மிக இக்கட்டானதும் சவாலானதுமான அக்காலங் களில் சேர்ந்து ஒன்றாகப் பணி புரிந்தோம் ஒருவருக்கொருவர் உறுதுணையானோம் எனது யாழ்ப்பாண இருப்பில் அவர் துணையும் பங்கும் பலமும் அதிகம்
எம் இருவரதும் நாடகங்கள் ஏழு நாடகங்கள் எனும் பெயரில் வெளி வந்துள்ளன அதில் அவரது நாடகம் நான்கு எனது நாடகம் மூன்று உள்ளன,
நாடக அரங்கக் கல்லூரியும் யாழ்பல்கலைக்கழகமும் எம்மை நெருங்க வைத்தன அந்த நெருக்கம் குடும்ப உறவாக முகிழ்த்தது, எனது மகனின் பிறந்த நாளை அப்போது அவனுக்கு வயது 13. என் மனைவி சித்திரலேகா வெளி நாட்டில் மேற்படிப்பு படிக்கச் சென்றிருந்த போது அவரும் அவர் பாரியாரும் தமது மகனின் பிறந்த நாள் போல என் வீட்டில் கொண்டாடியமையும் அதற்கான பல காரங்களை அக்கா சுட்டுக்கொண்டு வந்தமையும் பிறந்த நாளை சித்தார்த்தனின் அம்மா ஸ்தானத் திலிருந்து அக்கா நடத்தியதும் மனதில் அன்பாய்ச் சுரக்கிறது நாடகம் தந்த உறவு அது அருமையான பிள்ளைகள் அவர் பிள்ளைகள் எனக்கு மருமக்கள் ஆகினர் மாமா என உறவு கொண்டாடினர் இன்றும் அது தொடர்கின்றது. என்னை அங்கு இயங்கவும் எழுதவும் ஊக்கியவர் சண் அண்ணர் அவரது வீட்டு முற்றம் வாய் திறந்தால் எத்தனையோ கதை பேசும்
அவரோடு இணைந்து நான் நாடகம் நடிக்கவில் லையாயினும் எனது நாடகங்கள் பலவற்றிற்கு தயாரிப்பாளர் அவர்
எனது சங்காரம் சக்தி பிறக்குது எனும் எனது அன்றைய தயாரிப்புகளுக்குப் பின் நின்று உதவியதுடன் செய்யுங்கள் எனக்கூறி பின்னின்று என்னை இயக்கியவர்
நாம் இருவரும் இணைந்து நடித்த பொன்மணி திரைப்படம் போட்டுப்பார்த்து அந்தப் பழைய காலங்களையும் எங்களின் பழைய உருவங்களையும் நான் மீட்டிக்கொள்வேன்
அதில் நானும் அவரும் மூன்று காட்சிகளில் இணைந்து நடித்துள்ளோம்
அது ஓர் அனுபவம்
கமராவின் முன் நாம் நின்று கணங்கள்
அதில் எனது மனைவி சித்திரலேகாவும் நடித்திருந்தார்
அதில் சண்முகலிங்கம் சித்திரலேகாவுக்கு அண்ணராக நடித்திருந்தார்
ஆம் சித்திரலேகாவுக்கும் அவர் ஒரு நல்ல அண்ணர்தான்
பரந்த முகத்தில் குங்கும திலகமும் பிரகாசிக்க எதையும் ஓர் புன் சிரிப்போடு எதிர்கொள்ளும் அவரது அழகான மனைவி எங்களது குடும்ப அக்கா போல
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்து நாம் பீடாதிபதியான பின் அவ்ருக்கு கலைப்பீடம் கௌரவ கலாநிதி பட்டம் கொடுத்துக் கௌரவம் பெற்றது,
அதனை கற்றோர் சபையில் பிரகடனம் செய்யும் அரிய வாய்ப்பும் கலைப்பீடாதிபதி என்ற வகையில் எனக்கு அன்று கிடைத்தது
பட்டங்களை விரும்பாத அவரை என் அன்பு கட்டிப் போட்டமையினால் அதனை ஏற்றுச் சம்மதம் தெரிவித்தார்
பட்டங்கள் கடந்த பேருரு அது
1992 இல் எனது நூலான பழையதும் புதியதும் வந்த போது அவருக்கே அதனை சமர்ப்பித்து மகிழ்ந்தேன்
அப்போது அவருக்கு வயது 60
சென்ற ஆண்டில் அந்நூலின் நான்காம் பதிப்பூ மேலும் அதிக கட்டுரைகளுடன் வெளிவந்தது அவருக்கே மீண்டும் அதனைச் சமர்ப்பித்து அந்த நாளில் அவருக்கு அனுப்பி வைத்தேன்
"நாடகம் என்ன நாடகம் அந்த நாடகம் எமக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தாவிடின் அந்த நாடகம் நமக்குத் தேவையில்லை;
என்பது நாடகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவரது மஹாவாக்கியம்
அவர் 91 வயதை அடையும் இந்த நாளில் அவரையும்
அவரது அந்த மஹாவாக்கியத்தையும் நினைவு கூருகிறேன்
மூத்தோனே நீவிர் வாழ்க பல்லாண்டு