சபா.ஜெயராசா
ஓய்வுநிலை பேராசிரியர்
உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக வடிவமாகவும் அது அமைந்துள்ளது. அத்தகைய இறுகிய பிடியிலிருந்து விடுபட்டு மாற்று உளவியலைக் கட்டியெழுப்புதலே உற்றறி உளவியல், விடுதலை உளவியல் (LIBERATION PSYCHOLOGY) எதிர் உளவியற் சிகிச்சையியல் (ANTI PSYCHIAITRY) ஆகியவற்றின் நோக்கமாகும் அதிகாரத்துக்குச் சேவை செய்வதில் இருந்து உளவியல் விடுவிக்கப்பட வேண்டும். என்பது மாக்சியத்தின் முன்மொழிவு.
அறிமுகம்
ஆங்கிலத்தில் Critical Theory என்பதற்குரிய தமிழ் வடிவமாக உற்றறிக் கோட்பாடு என்பதைப் பயன்படுத்தலாம். இக் கோட்பாடு சமூகவியல் சிந்தனைகளை அடியொற்றி வளர்ச்சியுற்று வந்தது. இவற்றையும் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் ஊடுருவ ஆராய்ந்து பொருத்தமான தீர்மானங்களை புறநிலையாக மேற்கொள்ளல் உற்றறிக் கோட்பாட்டின் மையப் பொருளாகின்றது. குறிப்பாக சமூகம், வரலாறு, கருத்து நிலை, உளவியல், பண்பாடு, கலை இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.
உற்றறி உளவியல் (CRITICAL PSYCOLOGY) என்பது மரபு வழியான உளவியல் மற்றும் சீர்மிய முன்னெடுப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. அவற்றின் அடிப்படையான குறைபாடுகளையும் மட்டுப்பாடுகளையும் வெளிப்படுத்தி மேலெழுகின்றது.
அதேவேளை உற்றறி உளவியல் பற்றிய அறிவு எமது சூழலில் வறிதாகவே உள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்விப்பாடத்திட்டங்களில் உற்றறி உளவியல் உள்ளடக்கப்படாதிருத்தல் அறிவுப் பரப்பில் பெரும் இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது. உளவியற் புலத்தில் ஒரு முற்போக்கு விசையாக உற்றறி உளவியல் அடையாளப்படுத்தப்படுகின்றது. பிரதான உளவியல் நீரோட்டத்துக்கு அது அறை கூவல் விடுத்துள்ளது.
பிரதான நீரோட்ட உளவியல் நடத்தைகளை தனியாள் என்ற தளத்திலும் தனியாள் மட்டத்திலும் நின்று விளக்கி வருகின்றது. நடத்தைகளை உருவாக்கும் சமூகத் தளத்தையும் சமூக வர்க்கங்களுக்கிடையில் அமைந்த அதிகாரத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் நோக்காத ஒற்றைப் பரிமாண நிலையில் மரபு வழி உளவியல் செயற்பட்டுக் கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாணவர் எழுச்சி, தொழிலாளர் போராட்டங்கள், சமூக அவலங்கள், மேலாதிக்க ஒடுக்கு முறையின் குரூர வடிவங்கள், அழுத்தங்களுக்கு உள்ளான இனங்கள் எழுச்சி கொள்ளல் முதலியவற்றுக்கான உளவியற் பின்புலத்தை பிரதான நீரோட்ட உளவியலால் விளக்க முடியாதுள்ளது.
மார்க்சியக் கருத்தியல்
ஆந்நிலையில் மார்க்சியக் கருத்தியலை அடியொற்றி உளவியலைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மேற்கிளம்பின. ஜேர்மனியில் அத்தகைய செயற்பாட்டை முன்னெடுத்தவர் குலஸ் கொல்ஸ்காம் (KLUS HOLZKAMP 1927-1995). கார்ல் மாக்ஸ் எழுதிய “அரசியற் பொரளாதாரத் திறனாய்வு” என்ற நூல் அவரிடத்து ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. அவரே உற்றறி உளவியலுக்கு அடித்தளமிட்டார். அவர் எழுதிய "உளவியல் அடிப்படை” என்ற நூல் உற்றறி உளவியலின் கருத்து வலிமையையும் செயலாற்றலையும் அருட்டி விட்டது. மரபுவழி உளவியலின் அடிப்படைகளை மறுதலிக்கும் மாற்றுக் கருத்துக்கள் மாக்சியர்களால் உரத்து முன்வைக்கப்பட்டிருந்தன. வளர்ச்சி உளவியல் தொடர்பான பழைய கருத்துக்களை வைக்கோட்சி (1896 1934) புரட்டிப் போட்டார். மனித வளர்ச்சியும் கற்றலும் சமூகத்தால் நிகழ்த்தப்படும் இடை நிகழ்த்துகையுடன் இணைந்த செயன்முறை” (SOCIALY MEDIATED PROCESS) என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். அதனை அடியொற்றியே: “அண்மை விருத்தி வலயம்” (ZONE OF PROXIMAL DEVELOPMENT) என்பதை அவர் அறிகை உளவியலில் முன்வைத்தார்.
மார்க்சிய தளத்தில் நின்று மாற்று உளவியலுக்கு வலுவூட்டிய பிறிதோர் ஆய்வாளர் அலெக்சி லியோன்டியோவ் (ALEKSEY LEONTYEV, 1903-1979). மனிதநடத்தை என்பது உயிரியல் சார்பானது மட்டுமன்றி பண்பாட்டு வரலாற்று அடிப்படைகளுடனும் தொடர்புடையது என அவர் விளக்கினார். வரலாறு தொடர்பான மார்க்சின் பொருண்மிய இயங்கியல் அணுகுமுறையினை அவர் மனித நடத்தை உருவாக்கத்துடன் தொடர்புபடுத்தினார். மனித அறிகையானது சமூக வினைப்பாட்டின் ஒன்றிணைந்த பகுதியாக இருத்தலை வலியுறுத்தினார்.
மனிதர் உருவாக்கிய மொழி மற்றும் தொடர்புக் கருவிகளுக்குமிடையே நிகழும் இடைநிகழ்த்துகையுடன் நடத்தை மேற்கிளம்புவதாக அவர் சுட்டிக் காட்டினார். மனித வினைப்பாடுகள், சமூக நடப்பியலின் இணைப்பில் எழுவதை பிரதான நீரோட்ட உளவியலால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தினார்.
மாக்சிய இயங்கியல்
மார்க்சிய இயங்கியலை அடியொற்றி மனித ஆளுமை உருவாக்கத்தை விளக்கியவர்களுள் முக்கியமானவர் லுசியன் செவே (LUCIEN SEVE, 1926- 2020). அவர் எழுதிய மார்க்சியமும் ஆளுமைக் கோட்பாடும்” என்ற நூல் உலகளாவிய நிலையில் கூர்ந்த கவனயீர்ப்பபைப் பெற்றது.
மார்க்சிய நோக்கில் மனித ஆளுமை உருவாக்கத்தை விளக்க வந்த அவர் முன்னைய ஆளுமைக் கோட்பாடுகளின் போதாமையையும், மட்டுப்பாடுகளையும் அவற்றின் இயலாமையையும் வெளிப்படுத்தினார்.
கான்ஸ் ஐஸ்னாக் உருவாக்கிய ஆளுமைக் கோட்பாட்டை அவர் அடியோடு நிராகரித்தார். சமூக மீள் உருவெடுத்தலுக்கும் (SOCIAL REPRODUCTION) தனி மனிதருக்குமிடையே நிகழும் ஊடு நிகழ்த்துகையுடன் இணைந்த வடிவமைப்பாக ஆளுமை உருவாக்கம் பெறுவதாக லுசியன் செவே விளக்கினார். ஆளுமை என்பது சமூக இருப்பையும், சமூக நிலவரங்களையும், சமூக முரண்பாடுகளையும் எதிர் கொண்ட இணக்க நிைைல வடிவமாகின்றது. இவ்வாறான வளர்ச்சிச் சிந்தனைகளின் பின் புலத்திலே தான் உற்றறி உளவியல் உருவாக்கம் பெற்றது. (உற்றறி கோட்பாட்டைத் திறனாய்வுக் கோட்பாடு” என்று மொழி பெயர்த்தல் தவறானது. அந்த மொழிபெயர்ப்பு கருத்தைச் சரியான முறையில் கையளிக்கத் தவறி விடுகின்றது.)
அதிகாரம்
அதிகாரமும் அதன் கட்டமைப்பும், நுண்பாக நிலையில் அதன் ஊடுருவலும் மனித உடலையும் உள்ளத்தையும் அழுத்தங்களால் பணியச் செய்வதும், பிரதான நீரோட்ட உளவியல் அணுகுமுறைகளால் கவனத்திற் கொள்ளப்படாத விசைகளாக உள்ளன.
எங்கும் எதிலும் நிறைந்த பொருளாக அனைத்திலும் ஊடுருவி நிற்கும் விசையான அதிகாரத்தின் இயல்பினை மிசேல் பூக்கோ (MICHEL FOCHULT, 1926 1984) விளக்கினார். அவரது சிந்தனைகளும் உற்றறி உளவியலாளரான குலஸ்கொலஸ்காம் மீது செல்வாக்கை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே அதிகாரம் பற்றி விரிவான ஆய்வும் விளக்கங்களும் மாக்சிய அறிகையில் நீடு நிலைத்திருந்தன. அரசு என்பது அதிகாரத்தின் மேலோங்கிய வடிவமாக மாக்சியம் விளக்கியது. மனித உழைப்பைப் பறித்தெடுத்தலுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்பை மாக்சியம் மேலும் விபரமாக விளக்கியது. அதிகாரக் கட்டமைப்பை மாற்றியமைத்தல் வாயிலாகவே மனித ஆளுமையின் நிறைவான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது உற்றறி உளவியலின் பிரதான முன்மொழிவு. மனிதரை ஆக்கிரமித்து நிற்கும் கருத்தியல் வடிவங்கள் மீதும் அறிவு சார்ந்த எதிர்க்கட்டுமானங்கள் மீதும் உற்றறி உளவியல் கவனம் செலுத்துகின்றது.
மனிதரை மூடியுள்ள கருத்தியலில் (IDEOLOGY) இருந்து விடுவித்தல் முக்கியமானது. பயனற்ற கருத்தியல் சுமையான வாழ்வையே உருவாக்குகின்றது. அதனால் விடுதலையை எட்ட முடியாத ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுதலை மாக்சிய உளவியலாளர் தெளிவுபடுத்துகின்றனர்.
அதிகாரமும் ஓடுக்குமுறைக் கருத்தியலும் ஒன்றிணைந்து நிற்றலை அறிந்து கொள்ள முடியாத மூடல் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மனிதரை மேலெழ விடாது மறைத்துள்ள அடிமைக் கவிப்பிலிருந்து விடுவித்தல், மாக்சிய உளவியற் கோட்பாட்டின் உரத்த முன்மொழிவாக உள்ளது.
உற்றறிக் கோட்பாடு
உற்றறி கோட்பாடு, தனிமைப்படுத்தப்பட்ட தனிப்புலமையாக அமையாது அனைத்து அறிவுத் துறையின் வீரியத்தையும் உள்வாங்கிக் கொள்கின்றது. அவற்றின் ஒன்றிணைப்பையும் வலியுறுத்தி நிற்கின்றது. பிளவுபட்ட அறிவுத் தளத்தில் நின்று நடப்பியலைத் தரிசிக்க முடியாதென்பது அக்கோட்பாட்டாளார்களின் முடிவு.
சமூகத்தை விளக்குவது மட்டும் அறிவாகாது. சமூகத்தை மாற்றியமைத்தலே மேலான அறிவாகின்றது. சமூகத்தில் நேர்நிலை மாற்றத்தை உருவாக்காது, உளவியல் அழுத்தங்களில் இருந்து மனிதரை முற்றுமுழுதாக விடுவித்துவிட முடியாது. சமூகமாற்றம் நிகழும் வரை பொருளாதார உற்பத்தி விசைகளும், அவற்றோடு இணைந்த மேல் அழுத்தங்களும். மனித மனங்களை அலையச் செய்த வண்ணமே இருக்கும்.
உற்றறி உளவியல்
உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக வடிவமாகவும் அது அமைந்துள்ளது. அத்தகைய இறுகிய பிடியிலிருந்து விடுபட்டு மாற்று உளவியலைக் கட்டியெழுப்புதலே உற்றறி உளவியல், விடுதலை உளவியல் (LIBERATION PSYCHOLOGY) எதிர் உளவியற் சிகிச்சையியல் (ANTI PSYCHIAITRY) ஆகியவற்றின் நோக்கமாகும் அதிகாரத்துக்குச் சேவை செய்வதில் இருந்து உளவியல் விடுவிக்கப்பட வேண்டும். என்பது மாக்சியத்தின் முன்மொழிவு.
மேட்டுமை உளப்பாங்குடன் தொழிற்படும் உளவியலும், உளவளத்துணை என்ற சீர்மிய நடவடிக்கைகளும் சிகிச்சை முறைகளும் நடைமுறைப் பயனற்றவை.
பொருள் சார்ந்த பண்பாட்டுடன் மக்கள் நெருங்கிய தொடர்புகளையும் இறுகிய இணைப்புக்களையும் வைத்துள்ளனர். அவை பற்றிய தெளிவான விளக்கமின்றி மனித நடத்தைகளையும் சிந்தனைக் கோலங்களையும் புரிதலுக்கு உள்ளாக்க முடியாது. அத்தகைய அணுகுமுறையை கைவிட்ட உளவியற் செயற்பாடுகள் குறைபாட்டுடன் இயங்குபவையாகவே மீண்டெழும் என மாக்கசியம் இடித்துரைக்கின்றது.
வரலாற்று வளர்ச்சியில் உருவாக்கம் பெற்ற சமூக உருவமைவை (SOCIAL FORMATION) விளங்கிக் கொள்ளலும் மனித உளவியற் செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்வதில் அதன் பங்கும் ஆழ்ந்த நோக்குதலுக்கு உரியவை என உற்றறி உளவியல் வலியுறுத்துகின்றது.
செயலியக்கக் கோட்பாடு
மாக்சியப் பின்புலத்தில் உருவாக்கம் பெற்ற பிறிதொரு கருத்து வடிவமாக இருப்பது "செயலியக்கக் கோட்பாடு” (ACTIVITY THEORY). அக்கோட்பாட்டை உருவாக்குவதில் ருபின்ஸ்டைன் மற்றும் வைக்கோட்சி ஆகியோர் பங்கு கொண்டனர். மனிதருக்கும் புற உலகுக்குமிடையே நிகழும் இலக்கு நோக்கியதும் நிலைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அக்கோட்பாடு விளக்குகின்றது. சுமூகப்பண்பாட்டுப் பின்புலத்துடன் தொடர்புபடுத்தி மனித நடத்தைகளை விளங்கிக் கொள்வதற்குரிய ஏற்பாடாகவும் அது அமைந்துள்ளது.
செயலியக்கக் கோட்பாடு செயற்படுவோர், இடைவினையுடன் தொடர்புடையோர், பொருள்கள், கருவிகள், மனித செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் விதிகள், சட்டங்கள், சமூக இயல்பு ஆகியவற்றின் பின்புலத்துடன் தொடர்புபடுத்திய உளவியல் விளக்கத்தை விளக்குகின்றது. மனிதர் எதிர் நோக்கும் பன்முகச் சவால்களின் மூலவூற்றுக்கள் அங்கு பகுத்து நோக்கப்படுகின்றன. மாக்சிய நெறி உளவியலைப் பரந்து விரிந்து ஆழ்ந்த சமூக இயங்கியலுடன் தொடர்புபடுத்துகின்றது.
நடைமுறை
சமகால உலகில் முன்னர் அனுபவித்திராத நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் அவலங்களையும் மனிதர் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். கல்வி நிலை, தொழில் நிலை, அரசியல் நிலை, பண்பாட்டுநிலை, மேலாதிக்க நிலை முதலியவற்றால் அழுத்தங்கள் வகைதொகையின்றிச் சுமத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமூக மாற்றத்தை அடியோடு நிகழ்த்தாது தனித்துச் சீர்மிய நடவடிக்கைகளால் மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.
உலகளாவிப் பரந்து வளர்ந்து மக்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்திய வண்ணம் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றுக்கு அனுசரனை செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசுகள், தமது சுரண்டல் ஆதிக்கத்தைப் பலப்படுத்த மத அடிப்படை வாதம், மொழி மேலாதிக்கம், இனத்துவ மாயையைக் கட்டவிழ்த்தல் முதலாம் செயற்பாடுகளில் ஈடுபடல், தேசிய இனங்களை ஒடுக்குதல், பன்மைத்துவத்தை மறுதலித்தல் ஆகிய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தலில் அரசுகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன.
சுரண்டலும் ஓடுக்குமுறைகளும் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பின்புலத்தில் பல்வேறு உளவியற் பிரச்சினைகளுடன் வாழும் மனநிலை உருவாக்கம் பெறுகின்றது. மரபுவழி உளவியலாலும் சீர்மிய நடவடிக்கைகளாலும் அவற்றுக்குத் தீர்வு கண்டறிய முடியாத தவிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிலையில் தனிமனித நிலைப்பாட்டோடு உளவியலைக் கட்டுப்படுத்தாது சமூக இயங்கியலோடும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் விசைகளோடும் உளவியலை இணைக்க வேண்டியுள்ளது. அதனையே மாக்சியமும் உற்றறி உளவியலும் விடுதலை உளவியலும் வலியுறுத்துகின்றன.
எமது சூழல்
மேலும் மார்க்சிய கருத்தியல் பின்புலத்தில் இருந்து எழுகை பெற்ற உற்றறி உளவியல், விடுதலை உளவியல், ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி முதலானவை தனித்து அறிகை சார்ந்த வடிவங்களாக மட்டுமன்றி பிரயோக நீட்சிகளையும் கொண்டுள்ளன. எமது சூழலில் காலனித்துவ நீக்கம் என்பது மேலோட்டமாக நிகழ்ந்த ஒரு செயற்பாடாக இருக்கின்றதே அன்றி, அதன் அடியாழங்கள் இன்னும் நீடித்த வண்ணமே இருக்கின்றன. ஒடுக்கு முறைகள் தொடர்கின்றன. கல்வியில் பரீட்சை முறைகளில் பண்பாட்டில் ஆளுமை உருவாக்கத்தில் காலனித்துவ ஆழம் இன்னும் நீடித்த வண்ணமே உள்ளது. அனைத்திலும் காலனித்துவ கற்றலுக்கு எதிரான போராட்டம் பல முனைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது.
நமது பின்புலத்தில் தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு கல்வியும் தொழில் வழங்கலும் பயன்படுத்தப்படுதல் காலனித்துவத்தின் பிறிதொரு நீட்சியை புலப்படுத்தும். எங்களுக்கென வளமான கல்வி மரபு இருந்தது என்பதும் ஆளுமை உருவாக்க உளவியல் செயன்முறை இருந்தது என்பதும் சீர்மிய முன்னெடுப்புக்கள் நிகழ்ந்தன என்பதும் பழங்கதையாகி காலனித்துவ கவிப்பால் வலிதாக மூடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து விடுதலை பெற மாக்சியச் செழுமையுடன் மேலோங்கிய உற்றறிக் கோட்பாட்டினை பொருத்தமான எழுநடைப்படுத்தலுடன் கல்வியிலும் ஆசிரிய உருவாக்கத்திலும் பரீட்சை முறைகளிலும் பயன்படுத்த வேண்டி உள்ளது. தொடர்ந்து உற்றறி உளவியல் பிரயோக நிலைப்பட்ட அணுகுமுறைகளையும் திறனாய்வுகளையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
காலனித்துவ நீக்கம்
தமிழ் மரபில் உருவாக்கம் பெற்ற கல்விச் சிந்தனைகள், உளவியற் சிந்தனைகள், ஆளுமை உருவாக்கச் சிந்தனைகள் ஆகியவற்றைத் தேடுவதற்கும் முன்னெடுப்பதற்கும் விசை கொடுக்கும் கருத்தியலாக அமைவது உற்றறிக் கோட்பாடு. இது அறிவு நிலையிலும் நடைமுறைப் பிரயோக நிலையிலும் ஆழ்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். தென்னமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்து வரும் காலனித்துவ நீக்கம் பெயரளவில் ஒரு மேற்கவிப்பு நீக்கமாக மட்டுமன்றி, ஆழ்ந்து ஊடுருவிய நீக்கமாக அனைத்துத் துறைகளையும் மீட்டெடுக்கும் விசையாகவும் அமைந்தமைக்குக் காரணம் அவர்களிடத்து நிகழ்ந்த உற்றறி உரையாடலும் விடுதலை உளவியலும் பலமாக இருந்தமை ஆகும். அத்தகைய ஒரு நீட்சியும் விசையும் எமது சூழலில் ஏற்படுவதற்குரிய ஏற்பாடுகள் கல்வியியலிலும் கலைத்திட்டத்திலும் ஆசிரிய வாண்மை உருவாக்கத்திலும் இடம்பெறவில்லை. இதனை ஆசிரியம் இதழ் நுட்பமாகவும் திறனாய்வு நோக்கிலும் வளர்த்தெடுக்க வேண்டும். இன்னொருபுறம் விஞ்ஞானக் கல்வி எமது பண்பாட்டுச் சூழலில் ஊறிச் சுவறும் வகையில் திட்டமிடப்படவில்லை . அன்னியமாகிய ஓர் அறிவுப் புலமாகவே விஞ்ஞானக் கல்வி கையளிக்கப்படுகின்றது. விஞ்ஞானப் புலங்களில் உருவாக்கம் பெறுவோர் சமூக அறிவிலிருந்து தூர விலகி நிற்கும் ஒற்றைப் பரிமாணம் உடையோராய் ஆக்கப்படுகின்றனர் சீனாவிலும் ருசியாவிலும் அந்த இடைவெளி ஒடுக்கப்பட்டு சமூகப் பயன் எட்டச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கலை மற்றும் சமூக அறிவுத் துறைகளில் உருவாக்கம் பெறுவோர் நடப்பியல் முரண்பாடுகளை அறிந்திராத காலனித்துவக் கல்வி ஒடுக்கத்தில் நிற்குமாறு கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது காலனிய அதிகாரக் கட்டமைப்பு மற்றும் காலனிய உளவியல் மயப்பட்ட அறிவுச் சிந்தனை புலங்களில் இன்னும் விடுதலை உளவியல் விடுதலைக் கோட்பாடு நிலை நின்ற செயற்பாடுகளுக்கான நகர்வுகள் போதாமையாக உள்ளன.
நிறைவாக.....
"நமக்கென்று ஓர் நலியாக் கலை மரபு” இருந்தது மட்டுமல்ல, நலியாக் கல்வி மரபும் உளவியல் மரபும் இருந்தமைக்கான தேடல் எந்த அளவில் நிகழ்ந்துள்ளது என்பதை நோக்கிய அசைவு விடுதலைக்கான கல்விச் செயற்பாடுகளின் பரிமாணங்களில் ஒன்றாகின்றது. சமூக அசைவிலும் கல்வி அசைவிலும் நிகழும் முரண்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு மட்டுமன்றி, மீண்டெழுவதற்குமான வழிமுறைகளை மேற்கொள்வதற்குரிய கருத்தியல் பலத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு உற்றறிக் கோட்பாடு, உற்றறி சிந்தனை, உற்றறி உளவியல் போன்றவை முதன்மையான கருத்தியல் விசைகளாக அமையும்..