சபா.ஜெயராசா
ஓய்வுநிலை பேராசிரியர்
சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும் மேற்கொள்ளும் ஓர் அபத்தமான நிலை மேலோங்கி வருகின்றது. அவர்கள் எழுதிவரும் கட்டுரைகளிலும் ஆய்வுகளிலும் தமிழ் மரபில் இடம்பெற்ற சீர்மியம் பற்றிய குறிப்புக்கள் அற்ற வெற்றிடங்களே காணப்படுகின்றன.
ஒருவகையில் இதனை ஐரோப்பிய மையவாதத்தின் நீட்சிக்கு உட்பட்ட புலமை அடிமைத்தனம் என்று குறிப்பிடலாம். சில ஆய்வாளர்கள் இந்திய மரபில் உள்ள தியானமுறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்களேயன்றித் தமிழ் மரபில் உள்ள சீர்மிய நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடுவதற்கோ நோக்குவதற்கோ தவறிவிட்டனர்.
உலகின் எல்லாப் பண்பாட்டினரும் அவரவர் இயல்புகளுக்கும் சூழலுக்குமுரிய சீர்மிய முறைகளை உருவாக்கி வந்துள்ளனர். அந்நிலையில் மேலைத்தேய உளவியல் தான் சீர்மியத்தைக் கண்டுபிடித்தது என்று கூறுதல் தவறானது.
பூர்விக சமூகங்களில் மக்களுக்குரிய உளத்தாக்கங்கள் இயற்கையோடு தொடாபு கொண்டவையாய் அமைந்தன. அந்நிலையில் தோன்றிய சீர்மியச் செயற்பாடே “சடங்கு” இயற்கையோடு இசைய வைத்தல் சடங்கின் முக்கியமான நோக்கமாக அமைந்தது.
தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியும், அதிகாரமும், ஒடுக்குமுறைகளும் மேலாதிக்கமும், போட்டிகளும் என்ற சிக்கலான சமூகச் செயற்பாடுகளின் வளர்ச்சியோடு உளவியலும் சீர்மியமும் மொழிபோன்று எல்லா சமூகங்களிலும் வளர்ச்சியடையத் தொடங்கின. சமூக வளர்ச்சியின் போதுதான் காதலும், பிரிவும் பொருள் தேடலும் அவற்றோடு தொடர்புடைய உளப்பிரச்சினைகளும் தோற்றம் பெற்றன.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் திணை என்பது இலக்கியத்தைச் சமூக உறவுகளோடு தொடர்புபடுத்தும் முயற்சியாக மட்டுமன்றி, சமூகப் பின்புலத்தில் எழுந்த உளவியல் விளக்கமாகவும், சீர்மியச் செயற்பாடாகவும் அமைகின்றது. "திணை” என்பது சமூக உளவியற் கருத்தாக்கமாக மேலெழுகின்றது. ஐந்திணை ஒழுக்கம் என்பது ஐ வகை நிலங்களுக்குமுரிய சமூக உறவுகள் தழுவி எழுகோலம் பெறும் சமூக நடத்தையாகின்றது.
சங்கப்பாடல்களிலே பரவலாகக் காணப்படும் ஒரு சீர்மியச் செயற்பாடு "உற்றிணைந்தோர் சீர்மியம்” (Peer counselling) ஒரே வயது வீச்சில் உள்ள தோழியும் தோழனும், பாங்கனும் பாங்கியும் உளத்தின் உறுநோய்க்குத் தீர்வு காண்பதற்கு உதவுவோராய் இருத்தல் பல பாடல்கள் வழியாக வெளிப்பாடு கொள்வதைக் காணலாம்.
ஒரே வயதினரது ஊடாட்டங்களை ஒட்டுமொத்தமான சமூக உறவுகளின் அடிப்படையில் நுணுகி நோக்குதல் திணை ஒழுக்கத்திலே காணப்படுகின்றது. சங்கப்பாடல்கள் சமூகத்தின் சமச்சீர் அற்ற வளர்ச்சிப் போக்கினைப் புலப்படுத்தும் (மாதையன், பெ. 2004.ப.10 சங்ககால இனக்குழும சமுதாயமும் அரசு உருவாக்கமும், சென்னை பாவை பப்ளிகேசன்) அவ்வாறான ஏற்றதாழ்வுள்ள சமூகம் இயல்பாகவே மனமுறிவுகளையும், அழுத்தங்களையும், உளநலக் கேட்டினையும் உருவாக்கவல்லது.
அந்நிலையில் பன்மைப்பாங்கான சீர்மியச் செயற்பாடுகள் தமிழகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின. வழிபாடுகளோடு இணைந்த “தெய்வியச் சீர்மியம்” (Spiritual Counselling) வளர்ச்சியடையத் தொடங்கியது வெறியாட்டுடன் நிகழ்த்தப்பட்ட கொற்றவை வழிபாடு மனச்சுகம் வழங்கும் செயற்பாடாக அமைந்தது. கொற்றவைக்குப் பலி கொடுத்து வழிபடல் “கொற்றவைநிலை” என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது (தொல். பொருள், 59)
கொற்றவை வழிபாடு இனக்குழும சமூகத்திலே தோற்றம் பெற்றுத் தொடர்ந்து நீட்சி கொண்டது. மலைவழிபாடு, மரவழிபாடு, நீர்வழிபாடு முதலியனவும் இனக்குழும சமூகத்தில் இடம் பெற்றுத் தொடர்ந்து நீட்சிகொண்டன. காட்டுக்குரிய தெய்வம் “காடுறை கடவுள்” (பொருந.52) எனப்பட்டது. இனக்குழும சமுதாயத்தின் சிதைவிலும், அரசுகளின் வளர்ச்சியோடும், சிவன், விட்டுணு முதலாம் தெய்வவழிபாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கின. முருகவழிபாடு இனக்குழும சமூகத்தில் இடம்பெற்று அடுத்த கட்ட சமூக வளர்ச்சியின்போதும் தொடர்ந்தது. "கொற்றவைச் சிறுவன்” (திருமுருகாற்றுப்படை, அடி250) என்ற தொடர் கொற்றவை வழிபாட்டுக்கும் முருக வழிபாட்டுக்குமுள்ள தொடர்பினையும் தொன்மையையும் விளக்கும்.
அரசின் வளர்ச்சியோடு நிகழ்ந்த வரன் முறையான கல்விச்செயல்முறையோடு இணைந்த புலவரும் அந்தணரும், முனிவரும் சீர்மியச் செயற்பாட்டில் ஈடுபடலாயினர். மதுரைக் காஞ்சியில் (468-74) அவர்கள் மேற்கொண்ட உயிர்களிடத்து அன்புகொள்ளல் உள்ளிட்ட அறுதொழில்கள் விளக்கப்பட்டுள்ளன. ப இயற்கையோடு இசைவு கொண்டு வாழும் முனிவர்களது வாழ்க்கை முறை “சூழலியற் சீர்மியத்தின்” (Eco - Counselling) தொன்மையான வடிவமாயிற்று.
ஆடலும் கூத்தும் தொன்மையான சீர்மியச் செயற்பாடுகளாக அமைந்தன. தொன்மையான பண்பாடுகள் எல்லாவற்றிலும் இத்தகைய சீர்மியச் செயற்பாடு நீடித்து நிலைத்திருந்தது. வெறியாடல் வள்ளிக்கூத்து,
குரவைக்கூத்து, பேய் ஆடல், துணங்கைக் கூத்து முதலியவை உடலும், உள்ளமும் இணைந்த சுகத்துக்கு இட்டுச்சென்றன.
மனச்சுகம் எட்டுவதற்கு ஆடை அணிகலன்களைப் புனைதலும் உடலிலே சித்திரங்களை வரைதலும் என்ற செயற்பாடுகள் இடம்பெற்றன. சமகாலச் சமூகத்திலும் இந்தச் செயற்பாடுகள் இளைஞரிடத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடலிலே சித்திரங்களை வரைதல் தமிழகத்தில் தொய்யில்” (நற்றிணை 6-7) எனப்பட்டது.
சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களின் வருகையோடு இணைந்த சீர்மியச் செயற்பாடுகளும் தமிழ்ச்சூழலில் வளர்ச்சிகொள்ளத் தொடங்கின. துன்பமீட்சியும், இன்பம் - துன்பம் ஆகிய எதிர்முனைகளுக்குள் அமிழ்ந்துவிடாத “நடுநிலை” வாழ்வும் பௌத்த கருத்தியலில் வலியுறுத்தப்பட்டன. நடத்தை வாயிலான உளப்பிணியை நீக்கும் செயற்பாடு “நடத்தை வழி உளப்பிணிநீக்கல்” (Behaviour Threapy) தோற்றப்பாடு பௌத்தத்திலும் சமணத்திலும் காணப்படுகின்றது.
சமூக வளர்ச்சியின்போது பாணர்களின் நிலை பின்தள்ளப்பட்டு புலவர்களின் நிலை மேலோங்கலாயிற்று. (கைலாசபதி,க,2006, தமிழ்வீர நிலைக்கவிதை, சென்னை . குமரன் புத்தக இல்லம் ப.175) சமண பௌத்த சமயத்தத்துவங்களின் வருகையோடு புலவர்களின் நிலை மேலும் எழுச்சி கொள்ளலாயிற்று.
வலிமைமிக்க வணிகப் பிரிவினரின் செயற்பாடுகள் பொருண்மிய நிலைவரங்களை அடியொற்றிய உள நலப்பாதிப்புக்கள் ஏற்படலாயின. புதிய தமிழகச் சூழலில் முன்னர் நிகழ்ந்த உளநலச் செயற்பாட்டில் மாற்றங்கள் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. உளநல ஏற்பாட்டில் பாணர் வகித்த வகிபாகத்தைப் புலவர் வகிக்கத் தொடங்கினர். மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்றவாறு நீதிநூல்களையும் அவர்கள் எழுதலாயினர். அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தமிழ்ச் சூழலில் அறிகை முறைச்சிகிச்சையின் (Cognitive Therapy) தொன்மையான வடிவமாக அமைந்தது என்று கூறுவதிலே தவறில்லை .நவீன சிந்தனைகள் தொன்மையான அறிகைப் படிமங்களோடு ஏதோ ஒருவகையிலே தொடர்புபட்டிருத்தலைக் காண முடியும். புதிய சிந்தனைகளும் புதிய கண்டுபிடிப்புக்களும் திடீரென்ற எழுபாய்ச்சலுடன் தோற்றம் பெறுதல் போன்ற காட்சியைத் தந்தாலும் அவை மனிதரின் சிந்தனை வரலாற்றுடன் தொடர்புபட்ட நீட்சியாகும்.
பின்னைய நவீனத்துவ எழுத்தாளர்கள் குறிப்பிடும் ஊடுநூலியம் அல்லது ஊடு பனுவல் (Inter Textuality) என்ற கருத்தாக்கமும் புதிய ஆக்கங்களுக்குரிய முன்னைய தொடர்புகளை வலியுறுத்துகின்றது.
குழு நிலைச் சீர்மியத்தை கார்ல் ரொஜர்ஸ் என்ற உளவியலாளரே அறிமுகப்படுத்தினார் என்ற தவறான சித்திரிப்பும் உளவியல் மற்றும் சீர்மியம் கற்பிப்போரால் மேற்கொள்ளப்படுகின்றது. குழு இயக்க நிலையில் உளச் சுகத்தை வருவித்தல் பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் காணப்பட்ட ஓர் உளவியற் செயற்பாடு குலக்குழு வாழ்க்கையே குழுநிலைய சீர்மியச் செயற்பாட்டுடன் தொடர்புடையது.
வரலாற்று வளர்ச்சியில் குழுநிலைச் செயற்பாடு கல்வியுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடுகளுடனும் முன்னேற்றம் பெற்றது. பல்லவர் காலப் பக்தி எழுச்சியும், நாயன்மார் வழிகாட்டலில் ஊர்தொறும் சென்று வழிபடலும், கூட்டாகப் பதிகம்பாடுதலும் நிகழலாயின.
சோழப் பெருமன்னர் ஆட்சியில் எழுந்த பெரும் தத்துவங்களும் வரன்முறைக் கல்வியோடு சமயம் மேலும் ஒன்றிணைக்கப்பட்டமையும் சீர்மியச் செயற்பாடுகளிலே செல்வாக்குகளை ஏற்படுத்தலாயின. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிமுறைகளும் அவற்றினூடாக தெய்விக வாழ்வின் உன்னதங்களை நோக்கி நகர்தலும் என்ற செயற்பாடுகள் வளர்ச்சிகொள்ளத் தொடங்கின.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிமுறைகள் சோழர் காலத்துக்கு முன்னரே நிலைபேறு கொண்டனவாயினும், சோழர்காலத்தில் அது மேலும் வலுப்பெற்றது.
அத்தகைய வளர்ச்சிகளினூடே தமிழ்ச் சூழலில் சீர்மியம் என்பது வர்க்க நிலை தழுவிய ஒரு செயற்பாடாக இன்றுவரை நீட்சி கொண்டு வருதலைக் காணலாம். தெய்விக சீர்மியச் செயற்பாட்டில் இந்த வளர்ச்சியைத் தெளிவாகக் காணலாம்.
சமூக அடுக்கமைவில் உயர்ந்தோர் உளச் சுகத்தை எட்டுவதற்கு வேதாகம வழிபாட்டு முறையைப் பின்பற்றுதலும், அடித்தளங்களில் வாழும் விளிம்பு நிலை மக்கள், கிராமிய வழிபாடுகளில் ஈடுபட்டு உளச்சுகம் தேடுதலும் என்ற இருநிலைச் செல்வழிகள் காணப்படுகின்றன. வர்க்கங்களுக்கும் சீர்மியத்துக்குமுள்ள தொடர்புகளை மேற்குறித்த கோலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
தமிழ்ச் சூழலின் சீர்மிய நிலவரங்கள் பற்றி அறிந்துகொள்ளாது சீர்மியத்தை இறக்குமதிப்பண்டமாகக் காட்டுவோர், தமிழ்ப் பண்பாட்டின் ஆழ்ந்த வேர்களை அறியாதவராகின்றனர். மேலைத்தேயத்தில் உருவாக்கம் பெற்ற சீர்மியக் கோட்பாடுகளும், சிகிச்சை முறைகளும் வசதி படைத்த மத்தியதர வகுப்பினரின் பின்புலத்தில் அவர்களையே ஆய்வுப் பொருளாக்கி அவர்களையே குவியப்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும்.
அவ்வாறு உருவாக்கம் பெற்ற சிகிச்சை முறைகளை பொருத்தமற்ற முறையில் எமது பண்பாட்டில் திணித்தலும் அபத்தமாகின்றது. மேலைத்தேயச் சீர்மிய முறைகள், அங்குள்ள தொழிலாளர்கள், விளிம்பு நிலையினர், வறுமையில் உள்ள கருமை இனமக்கள் ஆகியோரிடத்து வெற்றி யளிக்கவில்லை என்பதை விடுதலை உளவியலாளர் (Libration Psycholigist) மற்றும் உற்றறி உளவியலாளர் (Critical Psychologist) தெளிவுபடுத்தியுள்ளனர்.
உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் நாடகச் சிகிச்சை முறை மிக நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது. அந்தச் சிகிச்சை முறையினையும் ஓர் இறக்குமதிப் பொருளாகக் கருதும் அபத்தமும் அறிவு நிலை அவலமும் காணப்படுகின்றன.
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில், சீர்மியம் கற்பித்தல் தொடர்பான உடனடி மீள்பரிசீலனையை வலியுறுத்த வேண்டியுள்ளது.