தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத் திரைப்படங்களில் முக்கியமானது.
கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களின் சுய அடையாளத்தை அழித்தொழிக்கும் நடைமுறைகள் நிறைந்திருக்கும் சமூகத்தை நோக்கிய தவிர்க்க முடியாத, நேர்மையான கேள்விகளை இந்தத் திரைப்படம் முன்வைக்கிறது.
துருக்கியின் உட்பகுதியில் உள்ள சிற்றூர்தான் கதைக் களம். அது ஓர் இளவேனில் காலம். இஸ்தான்புல் நகருக்கு மாற்றலாகிச் செல்லும் தன் ஆசிரியையைப் பிரிய மனமின்றித் தேம்பியழும் லாலேயின் கண்ணீரில் படம் தொடங்குகிறது.
பெற்றோரை இழந்த ஐந்து சகோதரிகள் அங்கு மாமாவின் வீட்டில் பாட்டியுடன் வசிக்கின்றனர். ஒரு நாள் பள்ளிக்குச் சென்று திரும்பும்போது ஆண் நண்பர்களுடன் கடலில் விளையாடுகின்றனர். அந்தக் குற்றத்துக்காகப் பள்ளி செல்வது தடை செய்யப்பட்டு அவர்கள் வீட்டினுள் அடைக்கப்படுகின்றனர்.
அதன்பின் அவர்களின் வீடு அவர்களைத் திருமணத்துக்குத் தயார் செய்கிறது. முதல் இரண்டு பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்கிறது. மூன்றாவது பெண் திருமணத்துக்கு முன் தன்னை மாய்த்துக்கொள்கிறாள். பத்து வயது நிரம்பிய லாலே, நான்காவது பெண்ணைக் காப்பாற்றி இஸ்தான்புல் அழைத்துச் செல்கிறாள். அங்கு அவள் ஆசிரியையைச் சந்தித்து வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகிறாள்.
சமூகத்தின் இரட்டை வேடம்
சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கதைக்குள் ஒரு வாழ்வை உயிரோட்டத்துடன் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் அறிமுக பெண் இயக்குநர் எர்குவேன். சுதந்திரமாகப் பள்ளி சென்றுவந்த சிறுமிகள் மாணவர்களுடன் விளையாடினார்கள் என்கிற ஒரே காரணத்துக்காகத் தங்களின் மகிழ்ச்சி, சுதந்திரம், கனவு என எல்லாவற்றையும் இழப்பதும், சொந்த வீட்டில் அவர்கள் கைதியாக மாறும் அவலமும், அந்தச் சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்ளும் காட்சிகளும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும், அது நம் மனசாட்சியை உலுக்குகிறது.
கன்னித் தன்மை பரிசோதனைக்குச் சிறுமிகள் உட்படுத்தப்படும்போது மருத்துவர் சொல்லாமலே சோதனைக்கு ஒத்துழைப்பதில் வெளிப்படும் அவர்களது இயலாமையும், வீட்டுக்கு வந்தவுடன், “இதற்கு உண்மையிலேயே தவறு செய்திருக்கலாம்” என்று அவர்கள் சொல்லிச் சிரிக்கும்போது வெளிப்படும் வெறுப்பும் சமூகத்தின் முகமூடியைக் கிழித்தெறிவதோடு, அதன் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்துகின்றன.
பிரிவின் கண்ணீரில் தொடங்கி நம்பிக்கையின் ஒளியோடு முடியும் ‘முஸ்டாங்க்’ இன்றைய காலத்தின் தேவை.
திரைப் பார்வை: ஐந்து சகோதரிகளின் கதை( Mustang Turkish film )