பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது.
பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன[1]. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.
இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன[1]. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.
மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்