Skærmbillede 1924நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன.

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம்.

இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.

X

Right Click

No right click