- அலெக்ஸ் பரந்தாமன்-
ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி வாசகர்களின் பார்வைக்கு வந்துள்ளது.நமது மூத்த படைப்பாளி திரு. குப்பிளான் ஐ. சண்முகன் ஐயா அவர்களின் 'கிராமத்துச் சித்திரங்கள்' எனும் தலைப்பு நூலின் ஐந்தாம் பக்கத்தை அலங்கரிக்கிறது.
அதில் ஒரு பகுதி இவை -
" தொகுப்பில் பல கதைகளில் விவசாயிகளும் அவர்களின் வாழ்க்கை நடை முறைகளும் இடம் பெற்றுள்ளன. இம்முறையில் பார்க்கும்போது, இவற்றை விவசாயிகளின் கதைகள் எனவும் கூறலாம்"
"தொகுப்பில் நீங்கள் நுழையும்போது ஒரு பெரிய தரிசனம் காத்திருக்கிறது. கிராமத்தின் உயிர் துடிக்கும் காட்சிகளையும், பாத்திரங்களையும் சந்திக்கப் போகின்றீர்கள். கோயில்களின் மணியோசையைக் கேட்பீர்கள். கிராமத்துப் பேச்சுகளையும், அரட்டைகளையும், அலறல்களையும், குழைவுகளையும் கேட்பீர்கள். இலட்சியவாதிகளான மனிதர்களையும் காண்பீர்கள். கிராமத்தின் அழகான வசீகரமான காட்சிகள் உங்களை வியக்க வைக்கும்."
சிவசோதியின் முதற் சிறுகதைத் தொகுப்பான ' நினைவுகள் சுமந்து....' எனும் நூலில் உள்ள கதைகளைப் படித்தபோது, அக்கதைகளில் வரும் மாந்தர்களும் அவர்களது வாழ்வியலும் யதார்த்தமாகவே காட்சியளித்தன. அதே யதார்த்தம்இத்தொகுப்பிலும் உண்டு. எளிமையான மொழிநடையோடு கூடிய கதைகள்.பழையன கழிந்து புதியன புகுதலாயினும், பழையனவற்றை மீண்டும் தனது எழுத்துகள் மூலம் உயிரூட்டி, இப்படியும் ஒருகாலம் இருந்தது/ இருக்கிறது... என்பதை சொல்லியிருக்கிறார் / சொல்லியும் வருகிறார்.
தொடரட்டும் அவரது எழுத்துப் பணி.
வாழ்த்துகள் திரு. மா. சிவசோதி அவர்களுக்கு.
●
- அலெக்ஸ் பரந்தாமன்,
புதுக்குடியிருப்பு.