அ. ராமசாமி
மத்தேயு – அறியப்பட்ட பைபிள் கதாபாத்திரம். தொடக்க நிலையிலிருந்தே இயேசுவோடு இருந்த சீடர்களில் ஒருவரான மத்தேயு, வரி வசூலிக்கும் தண்டல் நாயகப்பணியில் இருந்ததாகவும், அவரோடு விருந்துண்டு, தனது பன்னிரு சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார் இயேசு என்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் சொல்கின்றன. தான் நம்பிய கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் விடாப்பிடியும் தளரா உறுதியும் கொண்ட இயேசுவின் கருணையும் இரக்கமும் மனிதகுலத்தின் தேவை.
தன்னை நம்பியவர்களை ஈடேற்றம் செய்வதற்காக இயேசு கல்வாரி மலையில் சுமந்த சிலுவைப்பாடு களைச் சொல்லும் ஒவ்வொரு மொழியும் இரங்கல் பாக்களை எழுதும் உன்னத மொழிக் கூறுகளைத் தன்வசப்படுத்திக் கொள்ளும். சிலுவை சுமந்த இயேசுவின் பாடுகளுக்கும் மறு உயிரிப்புக்கும் விண்ணேற்றத்திற்கும் சாட்சியாக இருந்தவர் மத்தேயு. பைபிள் வழியாக உலகத்திற்கு அறிமுகமான மத்தேயு பாத்திரத்தைத் தனது ஈழத்தமிழ்ப்பரப்பிற்குள் திரிந்த/ திரியும் பாத்திரமாக்கியிருக்கிறார் கவி.கருணாகரன்.
யாவரும் பதிப்பகம் இந்தப் புத்தகச்சந்தையில் வெளியிட்டிருக்கும் “ கடவுள் என்பது துரோகியாயிருத்தல்” என்ற தொகுதியில் 30 கவிதைகளும் மத்தேயுக்களைப் பற்றிய கவிதைகளே. ஒரு கவிதைத் தொகுப்பு முழுவதும் ஒற்றைப் பாத்திரத்தை உருவகமாக்கிய வகையில் இந்தத்தொகுப்பு தமிழில் புது முயற்சி. கவிதை வாசகர்கள் வாங்கிக்கொள்ள வேண்டிய தொகுதி.